கடலுக்கு அடியில் போய் கல்யாணம் செய்து கொண்ட திருவண்ணாமலை ஜோடி! = வீடியோ

கடலுக்கு அடியில் போய் கல்யாணம் செய்து கொண்ட திருவண்ணாமலை ஜோடி! = வீடியோ

ஆழ்கடலுக்குள் திருமணம் நடத்தி அசத்தியிருக்கிறார்கள் ஐ.டி. ஊழியர்கள். சென்னையில் ஆழ்கடலுக்குள் இந்து முறைப்படி நடந்த இந்த திருமணம் இந்தியாவில் இதுதான் முதல்முறை என்பதால் மிகுந்த கவனம் பெற்றிருக்கிறது. 60 அடி ஆழ கடலுக்குள் சென்று அங்கே தோரணம் கட்டி, இந்து முறைப்படி நடந்திருக்கிறது இந்த திருமணம். சென்னை திருவான்மியூர் கடலில்தான் இந்த திருமணம் இனிதே நடந்து முடிந்திருக்கிறது.

திருவண்ணாமலை வேப்பம்பட்டு கிராமத்தை சேர்ந்த சின்னதுரை(29)ம், கோவை வடவெள்ளி ஸ்வேதா(26)வும் சென்னையில் ஐ.டி. நிறுவனங்கள் வேலை பார்த்து வருகின்றனர். கடந்த 12 வருடங்களாக ஆழ்கடலில் பயிற்சி எடுத்து வந்தவர் சின்னதுரை. புதுச்சேரியில் அரவிந்தன் தலைமையிலான ஆழ்கடல் பயிற்சி வீரர்கள், ஆழ்கடல் பயிற்சி மட்டுமல்லாமல் ஆழ்கடலில் ஏற்படும் மாற்றங்களையும் ஆய்வுசெய்து அதை காணொளி மூலமாக வெளியிட்டு வருகின்றனர். அதன்படி ஆழ்கடலில் சுதந்திரதின கொடியேற்றம், கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் என பண்டிகைகளை கொண்டாடிய அரவிந்தன் கொரோனா பொதுமுடக்க காலத்தில் பொது மக்கள் வெளியே வராததால் கடலுக்கு அடியில் எந்தவித்த மாசும் இல்லாமல் சுத்தமாக இருந்த காட்சியையும் பதிவு செய்திருந்தார். இந்நிலையில் தனது திருமணத்தினை ஆழ்கடலுக்குள் நடத்த வேண்டும் என்று விரும்பியிருக்கிறார். ஸ்வேதா இதற்கு ஒத்துக்கொண்டாலும், உறவினர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. பின்னர் போராடித்தான் எல்லோரையும் சம்மதிக்க வைத்திருக்கிறார் சின்னதுரை.

இதை அடுத்து ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளர் அரவிந்தன் உதவியுடன் நேற்று காலை 6.30 மணிக்கு மணமக்கள் இருவரும் பாரம்பரிய உடைகள் அணிந்து, ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்திக்கொண்டு நீலாங்கரை கடற்கரைக்கு சென்றனர். நண்பர்களும் உடன் வந்தனர். மூன்று கிலோ மீட்டர் தூரம் கடலில் போட்டில் சென்று, பின்னர் ஆழ்கடலுக்குள் 60 அடி ஆழத்திற்கு சென்றனர்.அங்கேயே தோரணம் கட்டி அசத்தினர். 40 நிமிடங்கள் இந்த திருமணம் நடந்தது. கடலுக்குள் மீன், ஆமைகளுக்கு நடுவே திருமணம் செய்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது என்று மணமகள் ஸ்வேதா மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்.

https://twitter.com/aanthaireporter/status/1356285043459543043

கடலின் முக்கியத்துவத்தினை உணர்ந்து கடலை பாதுகாக்க அனைவரும் முன்வரவேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தவே இப்படி திருமணம் செய்தேன் என்கிறார் சின்னத்துரை. ஆழ்கடலுக்குள் இந்துமுறைப்படி திருமணம் நடந்திருக்கிறது. இந்தியாவில் இதுதான் முதல் முறை என்பதால் மிகுந்த கவனம் பெற்றிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது..

Related Posts

error: Content is protected !!