தமிழகத்தில் தடை செய்யப்பட்ட 23 வகை நாய் இனங்கள் எவை?- முழு விபரம்!
அண்மைகாலமாக நாய்க்கடியால் விபரீதங்கள் அதிகரித்து வருகின்றன. சென்னையில் பூங்காவில் கடித்த நாயால் 5 வயது சிறுமிக்கு இன்று 2 மணி நேரம் அறுவைசிகிச்சை நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில் நாய் வளர்ப்பவர்களுக்கு அதிரடி உத்தரவுகளையும், கட்டுப்பாடுகளையும் சென்னை மாநகராட்சி பிறப்பித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் ராட்வைலர் உள்ளிட்ட 23 வகையான நாய் இனங்கள் மற்றும் அவைகளின் கலப்பினங்களை இறக்குமதி செய்யவும், இனப்பெருக்கம் செய்யவும், வீடுகளில் வளர்ப்பு பிராணிகளாக விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சிறுமியை நாய் கடித்த விவகாரம் முக்கிய பிரச்சனையாக மாறி உள்ளதால், இது தொடர்பாக ராதாகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது: ” நாய்களை வளர்க்க லைசன்ஸ் பெற வேண்டும். அதற்கான விழிப்புணர்வு யாரிடமும் இல்லை. அதற்காக முகாம்கள் நடத்த உள்ளோம். அதிகாரிகள் நிலையில் இந்த முகாம்கள் தொடர்ந்து செயல்படும். ஆன்லைனில் பதிவு செய்யலாம். சென்னையில் முக்கிய இடங்களில் பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது, விலங்கு நல வாரியம் மிகவும் கவனமாக உள்ளது. நிறைய பேர் நாங்கள் குழப்பத்தில் சொல்வதாக நினைக்கிறார்கள். கேரள மாநிலத்தில், இதுபோல சம்பவங்கள் சமீபத்தில் கூட நடந்து நீதிமன்றம் வரை சென்றது.
எல்லா அதிகார நிலையில் இருப்பவர்களும் இறங்கி வந்து பொறுப்பை ஏற்க வேண்டும். நாம் நாய்களை குறை சொல்வது சரியில்லை. அதன் உரிமையாளர்கள் நாய்களை சரியாக பராமரிக்க வேண்டும். பாதுகாப்பாக நாய்களை வைத்துகொள்ள வேண்டும். இதுபோன்று ஒரு நிகழ்வு நடந்தாலும் கூட, நாய்களை கல்லால் அடித்து கொல்லும் நிகழ்வும் நடக்கிறது. இதனால் கருத்தட்டை மட்டுமே சரியாக இருக்கும். சென்னையில்தான் நாய்களுக்கு கருத்தடை செய்வதை முதலில் அறிமுகப்படுத்தினோம். உரிமையாளர் முறையாக நாய்யை பராமரிக்காமல் விட்டால், உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மாடு முட்டுவது, நாய் கடிப்பது என்பது தேசிய அளவு விவகாரம், இதை நாம் கடுமையாக மட்டும் கையாள முடியாது. மாதவரத்தில் இருந்து நேற்று ஒரு புகார் வந்தது, அந்த உரிமையாளரிடம் பேசினோம். அவர் எங்களுக்கு நல்ல ஒத்துழைப்பு வழங்கினார். இவர் போல மற்றவர்களும் இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
இதையடுத்தே நாய் வளர்ப்பவர்களுக்கு அதிரடி உத்தரவுகளையும், கட்டுப்பாடுகளையும் சென்னை மாநகராட்சி பிறப்பித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் ராட்வைலர் உள்ளிட்ட 23 வகையான நாய் இனங்கள் மற்றும் அவைகளின் கலப்பினங்களை இறக்குமதி செய்யவும், இனப்பெருக்கம் செய்யவும், வீடுகளில் வளர்ப்பு பிராணிகளாக விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது வளர்ப்பு பிராணியாக இவ்வகை நாய்களை வைத்திருப்போர் அவற்றை உடனடியாக ஆண், பெண் கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அவைகள் இனப்பெருக்கம் செய்யாதவாறு பார்த்து கொள்ள வேண்டும்.
மே 6ம் தேதி சென்னையில் 5 வயது சிறுமியை ராட்வைலர் இன வகையைச் சார்ந்த வளர்ப்பு நாய்கள் தாக்கி உயிருக்கு ஆபத்து விளைவித்துள்ளன. இச்சம்பவத்தால் மக்கள் மிகுந்த மனவருத்தத்திலும், அச்சத்திலும் உள்ளனர். எனவே 23 வகையான வெளிநாட்டு கலப்பு மற்றும் கலப்பற்ற நாய் இனங்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.
அதன்படி பிட்புல் டெரியர், தோசா இனு, அமெரிக்கன் ஸ்டப்போர்டு ஷயர் டெரியர், பிலா ப்ரேசிலேரியா, டோகா அர்ஜென்டினா, அமெரிக்கன் புல் டாக், போயர் போயல், கன்கல், சென்ட்ரல் ஆசியன் ஷெபர்டு டாக், காக்கேஷியன் ஷெபர்டு டாக், சௌத் ரஷ்யன் ஷெபர்டு டாக், டோன் ஜாக், சர்ப்ளேனினேக், ஜாப்னிஸ் தோசா, அகிதா மேஸ்டிப், ராட்வைலர்ஸ், டெரியர், ரொடீசியன் ரிட்ஜ்பேக், உல்ப் டாக், கேனரியோ அக்பாஸ் டாக், மாஸ்கோ கார்ட் டாக், கேன்கார்சோ மற்றும் பேண்டாக் வகைகள், மிகவும் ஆக்ரோஷமானவை.
இவை மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் இனங்கள் எனக் கூறப்பட்டதால் இந்த இனங்களுக்கும், அவைகளின் கலப்பினங்கள் இறக்குமதி செய்வதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும், வளர்ப்பு பிராணிகளாக விற்பனை செய்வதற்கும் மற்றும் இவைகளின் எல்லா வகை பயன்பாட்டையும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாயை வெளியில் பொது இடங்களுக்கு கூட்டி செல்லும்போது கட்டாயமாக லீஷ் மற்றும் தற்காப்பு முககவசம் அணிந்து அழைத்து செல்ல வேண்டும்.“ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது