உலகின் முதல் துப்பாக்கிச் சூடு படுகொலை: ஜேம்ஸ் ஸ்டூவர்ட் நினைவு தினம்
வரலாற்றில் பல அரசர்களும் தலைவர்களும் வாள் மற்றும் விஷம் மூலம் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆனால், ஒரு நாட்டின் தலைவரை முதன்முதலில் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்த சம்பவம் 1570-ஆம் ஆண்டு இதே போன்ற ஒரு ஜனவரி 23-ஆம் தேதிதான் அரங்கேறியது. ஸ்காட்லாந்தின் ரீஜண்டாக (ஆட்சியாளர்) இருந்த ஜேம்ஸ் ஸ்டீவர்ட் கொல்லப்பட்ட அந்த விறுவிறுப்பான பின்னணி இதோ:
உடன் பிறந்தே கொல்லும் பகை!
ஸ்காட்லாந்து ராணி மேரியின் சகோதரரான ஜேம்ஸ் ஸ்டீவர்ட், 1567 முதல் ஸ்காட்லாந்தின் நிர்வாகப் பொறுப்பைக் கவனித்து வந்தார். இவர் அப்போதைய இளம் மன்னர் ஆறாம் ஜேம்ஸின் பிரதிநிதியாகச் செயல்பட்டார். ஆனால், அதிகாரப் போட்டியால் தனது சொந்தச் சகோதரி மேரியையே லாங்சைட் போரில் (13 மே 1568) தோற்கடித்து, அவரை இங்கிலாந்திற்குத் தப்பியோடச் செய்தார் ஜேம்ஸ் ஸ்டீவர்ட்.
நிழலாய் தொடர்ந்த கொலைகாரன்
ராணி மேரியின் தீவிர ஆதரவாளரான ஜேம்ஸ் ஹாமில்டன் என்பவர், தனது தலைவிக்கு நேர்ந்த அவமானத்திற்குப் பழிவாங்கத் துடித்தார். ஜேம்ஸ் ஸ்டீவர்ட்டை தீர்த்துக்கட்ட முடிவெடுத்த ஹாமில்டன், ஒரு நிழலைப் போல அவரைப் பின்தொடர ஆரம்பித்தார். எடின்பர்க், யார்க், லண்டன் என ஸ்டீவர்ட் சென்ற இடமெல்லாம் இவரும் பின் தொடர்ந்தார். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் காத்திருந்த ஹாமில்டனுக்கு, லின்லித்கோ (Linlithgow) நகரில் சரியான வாய்ப்பு கிடைத்தது.

துணிகளுக்குப் பின்னால் மறைந்திருந்த எமன்!
1570 ஜனவரி மாதம், லின்லித்கோ வீதியில் ஜேம்ஸ் ஸ்டீவர்ட் தனது பரிவாரங்களுடன் ஊர்வலமாகச் சென்றுகொண்டிருந்தார். அந்த வீதியில் இருந்த ஒரு கட்டிடத்தின் மேல் மாடியில், துணிகள் காயப்போடப்பட்டிருந்த மறைவில் துப்பாக்கியுடன் ஹாமில்டன் காத்திருந்தார். ஸ்டீவர்ட் சரியாகத் தனது இலக்கிற்கு நேரே வந்ததும், ஹாமில்டன் துப்பாக்கியால் சுட்டார்.
வரலாற்றில் பதிந்த முதல் குண்டு
இந்தத் தாக்குதலில் ஜேம்ஸ் ஸ்டீவர்ட் சரிந்தார். உலக வரலாற்றிலேயே துப்பாக்கியைப் பயன்படுத்தி ஒரு நாட்டின் தலைவர் படுகொலை செய்யப்பட்டது இதுவே முதல்முறை எனக் கருதப்படுகிறது. தாக்குதலுக்குப் பிறகு கொலையாளி ஹாமில்டன் தப்பித்து பிரான்சுக்கு ஓடினார். உயிரிழந்த ஜேம்ஸ் ஸ்டீவர்ட்டின் உடல் எடின்பர்க்கில் உள்ள செயின்ட் கில்ஸ் கதீட்ரலில் அடக்கம் செய்யப்பட்டது.
ஒரு நாட்டின் ஆளுமைப் போட்டியும், தனிமனிதப் பகையும் சேர்ந்து உலக வரலாற்றில் ஒரு புதிய வகை படுகொலைச் சம்பவத்திற்கு வித்திட்டது இச்சம்பவம்.
தனுஜா


