தமிழகத்தை வாட்டும் கத்திரி வெயில்: பாதங்கள் மூலம் உடலின் உஷ்ணத்தை தணிக்கும் எளிய தெரபி!

தமிழகத்தை வாட்டும் கத்திரி வெயில்: பாதங்கள் மூலம் உடலின் உஷ்ணத்தை தணிக்கும் எளிய தெரபி!

மிழகத்தில் வழக்கம் போல் நடப்பு ஆண்டில் சூரியனின் உக்கிரம் உச்சத்தைத் தொட்டுள்ளதால், அக்னி நட்சத்திர வெயிலின் பிடியில் இருந்து தப்பிக்கவும், சன் ஸ்ட்ரோக் எனப்படும் வெப்பத் தாக்குதலில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் மக்கள் புதுப்புது வழிமுறைகளைக் கையாண்டு வருகின்றனர். அந்த வகையில், தற்போது சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்து, பேசுபொருளாக மாறியிருப்பதுதான் ‘ஃபுட் இம்மெர்ஷன்’ (Foot Immersion) எனப்படும் பாதங்களைக் குளிர்விக்கும் எளிய இயற்கை மருத்துவம். 15 நிமிடங்களில் உடலின் உள் வெப்பநிலையைக் கட்டுக்குள் கொண்டு வரும் இந்தத் தற்காலிக முதலுதவிக்கு பின்னால் உள்ள மருத்துவ உண்மைகளை விரிவாகப் பார்ப்போமா?.

பாத சிகிச்சை எவ்வாறு உடலைக் குளிர்விக்கிறது?

அதிகப்படியான வெக்கையின் காரணமாக உடல் சூடாகி, சோர்வடையும் போது, ஒரு பாத்திரத்தில் சாதாரணக் குளிர்ந்த நீரை ஊற்றி, அதில் கணுக்கால் முழ்கும் வரை பாதங்களை நனைத்து அமர்வது வியக்கத்தக்க மாற்றத்தைத் தருகிறது.

இதன் அறிவியல் பின்னணி என்னவென்றால், மனித உடலின் மற்ற பகுதிகளை விட நம்முடைய உள்ளங்கால்கள் மற்றும் கணுக்கால் பகுதிகளில் ரத்த நாளங்கள் தோலுக்கு மிக அருகில், அடர்த்தியாகக் காணப்படுகின்றன. கால்களை நீரில் வைக்கும் போது, அந்தப் பகுதியில் பாயும் ரத்தத்தின் உஷ்ணம் உடனடியாகக் குறைகிறது. இந்தத் குளிர்ந்த ரத்தம் இதயம் வழியாக உடல் முழுவதும் மிக வேகமாகச் சுழற்சி செய்யப்படுவதால், உடலின் ஒட்டுமொத்த வெப்பமும் சில நிமிடங்களிலேயே தணிகிறது.

இயற்கையாகவே மனித உடலால் வெப்பத்தை வெளியேற்ற முடியாத இக்கட்டான சூழலில்தான் மயக்கம், வாந்தி, நீர்ச்சத்து இழப்பு போன்ற ஆபத்துகள் ஏற்படுகின்றன. அதற்கு இந்த முறை ஒரு சிறந்த தற்காப்பாக அமைகிறது.

அறிவியல் ஆய்வுகள் தரும் சான்று

சர்வதேச மருத்துவ ஆய்வு இதழான JAMA Network Open வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையில், 20 டிகிரி செல்சியஸ் அளவிலான சாதாரணக் குளிர்ந்த நீரில் பாதங்களை நனைத்து வைப்பது, கோடைக் காலத்தில் ஏற்படும் உடல் அசௌகரியங்களையும், அதீத வெப்ப அழுத்தத்தையும் (Heat Stress) கணிசமாகக் குறைக்கிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

கடுமையான வெயிலில் களப்பணியாற்றும் தொழிலாளர்கள், முதியவர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் வீடுகளில் ஏசி வசதி இல்லாத நடுத்தர மக்களுக்கு இந்த எளிய முறை ஒரு வரப்பிரசாதமாகும்.

கடைப்பிடிக்க வேண்டிய சரியான வழிமுறைகள்

இம்முறையைச் செயல்படுத்தும் போது பின்வரும் விதிமுறைகளைக் கட்டாயம் கவனிக்க வேண்டும்:

  • ஐஸ் கட்டிகளைத் தவிர்க்கவும்: அதிதக் குளிர்ந்த ஐஸ் தண்ணீரையோ அல்லது ஐஸ் கட்டிகளையோ பயன்படுத்தக் கூடாது. ஏனெனில், அளவுக்கு அதிகமான குளிர்ச்சி ரத்த நாளங்களைச் சுருங்கச் செய்து, வெப்பம் வெளியேறுவதைத் தடுத்துவிடும். குழாய் நீரையே (Tap water) பயன்படுத்தலாம்.

  • நீரின் அளவு: பாதங்கள் மட்டும் நனைந்தால் போதாது, கணுக்கால் பகுதி (Ankle) வரை நீர் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

  • கால அளவு: சோர்வு நீங்கி உடல் புத்துணர்ச்சி பெற 10 முதல் 20 நிமிடங்கள் வரை கால்களை நீரில் வைத்திருந்தால் போதுமானது.

அதிக பாதிப்புக்குள்ளாகும் பிரிவினரும் எச்சரிக்கை அறிகுறிகளும்

வெப்ப அலையின் போது அதிகக் கவனமுடன் இருக்க வேண்டிய உயர் ஆபத்துக் குழுவினர்:

  • முதியவர்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகள்

  • கர்ப்பிணிப் பெண்கள்

  • இதய நோய், நீரிழிவு நோய் போன்ற நாள்பட்ட குறைபாடு உள்ளவர்கள்

  • உடலில் இயல்பாகவே நீர்ச்சத்து குறைவாக உள்ளவர்கள்

உடனடி எச்சரிக்கை அறிகுறிகள்: திடீரென வியர்வை நின்று போவது, படபடப்பு, வாந்தி உணர்வு, தலைச்சுற்றல், கடுமையான தசைப்பிடிப்பு மற்றும் குழப்பமான மனநிலை ஆகியவை ஆபத்தின் அறிகுறிகள். இவற்றை அலட்சியப்படுத்தினால் பக்கவாதம் அல்லது உயிரிழப்பு வரை கொண்டு செல்லக்கூடும் என்பதால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்.

கோடையை எதிர்கொள்ள மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள்

பாதங்களைக் குளிர்விப்பது என்பது அவசரக் கால தற்காலிக நிவாரணம் மட்டுமே. கோடைக் காலம் முழுவதும் உடலின் ஆரோக்கியத்தைப் பேணப் பெங்களூருவைச் சேர்ந்த பிரபல மருத்துவர் அரவிந்தா S N சில முக்கிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார்:

  • தண்ணீர் குடிப்பதை நிறுத்தாதீர்: தாகம் எடுக்கும் வரை காத்திருக்காமல், தினமும் குறிப்பிட்ட இடைவெளியில் போதிய அளவு தண்ணீர் பருகி உடலில் நீர்ச்சத்தைத் தக்க வைக்க வேண்டும்.

  • பயணக் கட்டுப்பாடு: கதிரவனின் தாக்கம் உச்சத்தில் இருக்கும் மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை அத்தியாவசியத் தேவைகளின்றி வெளியில் செல்வதைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

  • ஆடைகளின் வடிவமைப்பு: காற்றோட்டமான, வெளிர் நிற பருத்தி (Cotton) ஆடைகளை உடுத்துவது உடலை லேசாக வைத்திருக்க உதவும்.

  • தற்காப்புக் கருவிகள்: வெளியே செல்லும் போது குடை, தொப்பி மற்றும் சன்கிளாஸ் போன்றவற்றைத் தவறாமல் பயன்படுத்த வேண்டும்.

  • உணவுக் கட்டுப்பாடு: எண்ணெயில் பொரித்த கனமான உணவுகள், மதுபானங்கள் மற்றும் காபி, டீ போன்ற காஃபின் கலந்த பானங்களை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். இவை உடலில் உள்ள நீர்ச்சத்தை வேகமாக உறிஞ்சி நீரிழப்பை ஏற்படுத்திவிடும். அதற்குப் பதிலாக மோர், இளநீர், தர்பூசணி போன்ற இயற்கை உணவுகளை நாடலாம்.

உடல் அதீத வெப்பமடைவதை உணர்ந்தால் உடனடியாக நிழலான இடத்திற்குச் சென்று, காற்றோட்டமாக ஓய்வெடுத்து, குளிர்ந்த நீர் பருகுவதே முதற்கட்டப் பாதுகாப்பாகும்.

வாத்தீ அகஸ்தீஸ்வரன்