கனடா குடியுரிமையை விரும்பும் இந்தியர்கள் எண்ணிக்கை அதிகம்!

கனடா குடியுரிமையை விரும்பும் இந்தியர்கள் எண்ணிக்கை அதிகம்!

னடாவில் சீக்கியச் சமயத் தலைவரும் காலிஸ்தான் தீவிரவாதியுமான ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் (Hardeep Singh Nijjar) கொலை விவகாரத்தால் கனடாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே அரசதந்திர ரீதியிலான சச்சரவு நிலவுகிறது. அதே சமயம் கனடாவைப் பொறுத்தவரை அங்குள்ள இந்திய சமூகத்தினரின் இயல்பு வாழ்க்கை எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை. இத்தனைக்கும் 2021 கனேடிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, நாட்டின் மக்கள் தொகையில் 2.1% சீக்கியர்கள் உள்ளனர். மேலும், இந்தியாவிற்கு வெளியே அதிக சீக்கிய மக்கள் வசிக்கும் நாடு கனடாவாக உள்ளது.

இப்படி இந்தியா – கனடா உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையில், 2018 – 2023–ம் ஆண்டு வரை இந்தியாவில் இருந்து வௌியேறிய இந்தியர்களில் 1.6 லட்சம் பேர் கனடாவில் குடியுரிமை பெற்றிருப்பதாக வெளியுறவு விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதாவது, இந்தியாவிலிருந்து வெளிநாடு சென்று வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்களில் 20 சதவீதம் பேர் கனடா நாட்டின் குடியுரிமையை பெற்றிருக்கிறார்கள். இந்த காலக்கட்டத்தில், இந்தியாவிலிருந்து வெளிநாடு சென்று அங்கு குடியுரிமை பெற அதிகம் விரும்பும் நாடுகளில் கனடா இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும், முதல் இடத்தில் அமெரிக்கா இருப்பதாகவும் இந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது. அடுத்தடுத்த இடங்களில் ஆஸ்திரேலியாவும், இங்கிலாந்தும் இடம்பெற்றுள்ளன. இந்த ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து வெளியேறி வெளிநாடுகளில் குடியுரிமை பெற்ற 8.4 லட்சம் இந்தியர்கள், கிட்டத்தட்ட 114 நாடுகளில் குடியுரிமை பெற்றிருக்கிறார்கள். அவர்களில் 58 சதவீதம் பேர் அமெரிக்கா அல்லது கனடாவில் குடிபெயர்ந்துள்ளனர்.

2023–ம் ஆண்டின் முதல் பாதியில் மட்டும் 87,000 இந்தியர்கள் வெளிநாட்டு குடியுரிமை பெற்றிருக்கிறார்கள். 2020 கொரோனா காலத்தைத் தவிர, தொடர்ந்து வெளிநாட்டில் குடியுரிமை பெறும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தரமான வாழ்கைமுறை, தங்கள் பிள்ளைகளுக்கு சர்வதேச கல்வி, வேலைவாய்ப்பு, தரமான சுகாதாரம் போன்றவை, கனடா, ஆஸ்திரேலியா போன்ற வளர்ந்த நாடுகளில் கிடைப்பதாலும், தங்களது பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்பதாலும், பலரும் நன்கு வளர்ந்த நாடுகளில் குடியுரிமை பெற்று அங்கேயே தங்கிவிடுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விவகாரம் தொடர்பாக, நாடாளுமன்றத்தில் பேசிய இந்திய வெளிவிவகாரத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இந்தியர்கள் பலரும் வெளிநாட்டுக் குடியுரிமை பெற முனைவது குறித்து அரசு கவனத்தில் கொண்டுள்ளது, இங்குள்ள மக்களின் திறமைகள் மற்றும் அவற்றின் நன்மைகளை உள்நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படும் வகையில் கொண்டு செல்ல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

error: Content is protected !!