அதிமுக – பாஜக இடையிலான கூட்டணி முறிவு -பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

அதிமுக – பாஜக இடையிலான கூட்டணி முறிவு -பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள், கட்சிக்குள் பூத் கமிட்டி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறைகள் என பல்வேறு கட்சிகளும் பரபரப்பாக இயங்கி வருகின்றன. கூட்டணியில் இல்லாத கட்சிகள் கூட எந்த பக்கம் சென்று யாருடன் இணைவது என்று யோசித்து வரும் நிலையில் 2019 முதல் இணைந்து பயணித்து வந்த அதிமுகவும், பாஜகவும் ஆளுக்கொரு திசையில் செல்ல தீர்மானித்துவிட்டன. இந்த சூழலில் இன்று நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகி விட்டது.

இத்தனைக்கும் பாஜகவின் தேசிய தலைமையுடன் அதிமுக தலைமை தொடர்ந்து இணக்கம் பாராட்டி வருகிறது. ஆனால் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுகவையும், அக்கட்சி தலைவர்களையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இது அதிமுக தலைமைக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்துகிறது. இதனால் அதிமுக தொண்டர்களும் கொதிப்படைந்துள்ளனர். அண்ணாமலையை அடக்கி வைக்காமல் அவர் தம் மீது பாய்வதை பாஜக தேசிய தலைமை ரசிப்பதாகவும் அதிமுகவினர் நினைக்கின்றனர்.

அதிலும் 1956 -ம் ஆண்டு மதுரையில் நடந்த விழாவில் பகுத்தறிவுக் கருத்துகளைப் பேசிய அறிஞர் அண்ணாவை, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மிகக் கடுமையாகச் சாடியதாகவும் மன்னிப்புக் கேட்காவிட்டால், மீனாட்சி அம்மனுக்கு பால் அபிஷேகத்துக்கு பதில் ரத்த அபிஷேகம் நடக்கும் என்று எச்சரித்ததாகவும், அதற்கு பயந்து அண்ணாவும், பி.டி.ராஜனும் ஓடிவந்து மன்னிப்புக் கேட்டனர் எனவும் கூறி நெருப்பைப் பற்றவைத்தார் அண்ணாமலை. இந்தத் தகவல் முற்றிலும் உண்மைக்கு மாறானது என வரலாற்று ஆசிரியர்களும், அச்சு ஊடகங்களும் சான்றுடன் தெளிவுபடுத்தின. அண்ணா குறித்து அவதூறுக் கருத்துகளைப் பரபரப்புவதா எனக் கொதித்து எழுந்தது அ.தி.மு.க.

அப்படி பேசி அதிரடிக் காட்டும் அண்ணாமலை ஒருவரைக் காரணம் காட்டி ‘கூட்டணியே இல்லை’ என அ.தி.மு.க அறிவித்தாலும், அசாராமல் அதிரடிக் காட்டிக் கொண்டிருக்கிறார் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை. கோவை செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர் “அண்ணா விவகாரத்தில் சரித்திரத்தைத்தான் பேசியிருக்கிறேன். நான் மன்னிப்புக் கேட்க முடியாது” என்றவர், “எப்படிப்பட்ட அரசியல் செய்ய வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். பா.ஜ.க இங்கு ஆட்சியமைக்க வேண்டும் என்பதற்காக நான் வந்திருக்கிறேன். கட்சியை நடத்தும் முறையும் வித்தியாசமாகத்தான் இருக்கும். யாரும் யார் காலிலும் விழவேண்டிய அவசியமில்லை” என்றிருக்கிறார் ஆக்ரோஷமாக.

பார்லிமெண்ட் தேர்தலை பொறுத்தவரை திமுகவின் கையே தற்போது ஓங்கியுள்ளது. பாஜகவுடனான கூட்டணி தொடர்ந்ததிலிருந்து அதிமுகவின் சிறுபான்மை வாக்குகள் அப்படியே திமுக பக்கம் சென்றுவிட்டன. இழந்த வாக்குகளை மீண்டும் பெற வேண்டுமானால் பாஜகவின் கூட்டணியை முறித்தாக வேண்டும். திமுகவின் அதிருப்தி வாக்குகளைப் பெற வேண்டுமானாலும் பாஜகவின் கூட்டணி தடையாக இருக்கிறது. இதனாலே பாஜக கூட்டணி வேண்டாம் என்ற முடிவுக்கு எடப்பாடி பழனிசாமி வந்துள்ளாராம்.

அண்ணாமலை சில பேட்டிகளில் சொன்னது போல் மத்திய அரசின் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, மாநில அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை ஆகியவை அதிமுகவை குறிவைத்தால் அதிலிருந்து தப்பிக்க பாஜகவின் அரண் அவசியம். எனவே கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்தித்து ஒரு சில இடங்களைப் பெற்று, தேர்தலுக்குப் பிறகு பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்கலாம். இதனால் அதிமுகவின் வாக்கு வங்கியையும் மீட்கலாம், தங்களையும் தற்காத்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு அதிமுக தலைமை வந்துள்ளது.!

இச்சூழலில்தான் சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அண்ணா திமுக மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு செல்லும் நிர்வாகிகளின் செல்போன் முகப்பிலேயே வாங்கி வைத்துக் கொண்ட நிகழவும் நடந்தது. பொதுச் செயலாளர் எடபபாடி பழனிசாமி தலைமை வகித்த்த இன்றையக் கூட்டத்தில் பாஜகவுடனான கூட்டணியை முறித்துதான் ஆக வேண்டும்; அதிமுக தலைமையில் திமுகவுக்கு எதிராக மெகா கூட்டணியை தனித்தே உருவாக்குவோம் என பெரும்பான்மை மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் கூறினர். : ஆனால் டெல்லி பாஜகவிடம் வசமாக சிக்கி இருக்கிறோம்; இந்த சூழ்நிலையில் பாஜகவை அனுசரித்துதான் போக வேண்டும்; பாஜக கேட்கும் தொகுதிகளை அதாவது லோக்சபா தேர்தலில் பாஜக கேட்கிற 20 தொகுதிகளைக் கொடுத்துவிட்டாலே பாதி பிரச்சனை முடிந்துவிடும்; அதனால் தேவை இல்லாமல் பாஜகவுடன் மோத வேண்டம; அப்படி மோதுவது என முடிவெடுத்துவிட்டால் அதிமுகவுக்குள் தேவை இல்லாத குழப்பங்கள் தானாக வரும்; அதற்கு நாங்கள் பொறுப்பாக முடியாது என சில தலைவர்களும் பேசி இருக்கின்றனர். இத்தகைய பேச்சுகளுக்கு கடும் எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது..

முடிவில் இந்தக் கூட்டத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவது என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் பாஜக தவிர இதர கட்சிகளுடன் இணைந்து லோக்சபா தேர்தலை எதிர்கொள்ளவும் அதிமுக முடிவு செய்தது. இதனை அதிமுக மூத்த தலைவர் கேபி முனுசாமி செய்தியாளர்களிடம் அறிவித்தார். பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்து கொண்டதை அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

நிலவளம் ரெங்கராஜன்

error: Content is protected !!