விளம்பர உலகின் ‘இதயம்’: தடைகளைத் தகர்த்த வி.ஆர். முத்துவின் வெற்றிக் காவியம்!
“வாழ்க்கையில் ஒரு பிரச்சனை வந்தால் அதற்கு மாலை போட்டு வரவேற்க வேண்டும்” என்று சொன்னவர், இன்று மீளாப் பயணத்தைத் தொடங்கிவிட்டார். தமிழகத்தின் சமையலறைகளில் ‘இதயம்’ என்ற பெயரைத் தரமான முத்திரையாகப் பதிய வைத்த மாபெரும் தொழிலதிபர் வி.ஆர். முத்து அவர்களின் மறைவு, நம் அனைவருக்கும் ஒரு பேரிழப்பு. வெறும் லாபத்தை மட்டும் குறிக்கோளாகக் கொள்ளாமல், நேர்மையையும் தனித்துவத்தையும் தன் தொழிலின் அடையாளமாக மாற்றியவர் அவர். ஒரு சாதாரண மனிதர் எப்படி ஒரு சாம்ராஜ்ஜியத்தை உருவாக்க முடியும் என்பதையும், சறுக்கல்களையே வெற்றிக்கான படிக்கட்டுகளாக மாற்றுவது எப்படி என்பதையும் தன் வாழ்நாள் முழுவதும் நிரூபித்துக் காட்டிய அந்தச் சாதனையாளரின் நினைவுகளைப் போற்றி, அவருக்கு நம் வாசகர்கள் & நண்பர்கள் குழு சார்பாக அஞ்சலி செலுத்துகிறோம்.

அவரது வாழ்க்கைப் பயணத்தில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய அந்தப் பொன்னான பாடங்கள் இதோ: விளம்பர உலகின் ‘இதயம்’: தடைகளைத் தகர்த்த வி.ஆர். முத்துவின் வெற்றிக் காவியம்!
“தினந்தோறும் வாங்குவேன் இதயம்” – இந்த ஒற்றை வரி, வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் ஒலித்த காலம் முதல் இன்று வரை நம் இல்லங்களில் ஒரு அங்கமாகிவிட்டது. விருதுநகரில் ஒரு சாதாரண குடும்பத் தொழிலாகத் தொடங்கி, இன்று 38 நாடுகளில் மணம் வீசும் ‘இதயம்’ நல்லெண்ணெய் சாம்ராஜ்ஜியத்தின் பின்னணியில் இருந்தது வி.ஆர். முத்து அவர்களின் அசாத்தியமான உழைப்பும், தொலைநோக்குப் பார்வையும்தான்.
மும்பை டூ விருதுநகர்: ஒரு எம்பிஏ கனவும் எதார்த்தமும்
மும்பையில் பி.காம் முடித்த முத்துவுக்கு எம்பிஏ படிக்க வேண்டும் என்பது பெரும் ஆசை. சூழ்நிலையால் அது நிறைவேறவில்லை என்றாலும், பின்னாளில் அவர் எம்பிஏ மாணவர்களுக்குப் பாடம் எடுக்கும் அளவுக்குத் தொழில் அனுபவத்தில் உயர்ந்து நின்றார். “எண்ணமும் அனுபவமும் இருந்தால் முதலீட்டாளர்கள் தேடி வருவார்கள்” என்பது மாணவர்களுக்கு அவர் புகட்டிய பாலபாடம்.
விளம்பர உலகின் முன்னோடி
80-களிலேயே நல்லெண்ணெய்க்கு விளம்பரம் கொடுத்தது முத்துதான். ரிமோட் கண்ட்ரோல் இல்லாத அந்த காலத்தில், மக்கள் சேனல்களை மாற்ற மாட்டார்கள் என்பதை உணர்ந்து விளம்பரங்களைச் சரியாகப் பயன்படுத்தினார். ஆனால் காலம் மாறியபோது, அவர் தனது யுக்தியையும் மாற்றினார்.
“பத்து லட்சம் ரூபாய்க்கு விளம்பரம் கொடுப்பதை விட, அதே தொகையில் வாடிக்கையாளர்களுக்குத் தள்ளுபடி கொடுத்தால் ஒரு லட்சம் வீடுகளைச் சென்றடைய முடியும்” என்று எதார்த்தமாகப் பேசியவர் அவர். விளம்பரம் என்பது விற்பனையாக மாறுகிறதா என்பதைத் தொடர்ந்து கவனிப்பதில் அவர் கில்லாடி.

பெங்களூரு கற்றுத் தந்த ‘விற்பனை’ ரகசியம்
தமிழகம் தாண்டி பெங்களூரு சந்தைக்குச் சென்றபோது அவருக்குப் பெரும் அவமதிப்பு கிடைத்தது. ஆனால், அங்கிருந்து விலகிச் செல்லாமல் “விற்க வரவில்லை, இலவசமாகக் கொடுக்க வந்திருக்கிறேன்” என்று கூறி வாடிக்கையாளர்களைக் கவர்ந்தார். “தடைகளைப் பார்த்து பயப்படக் கூடாது, அதை எப்படி படிக்கல்லாக மாற்றலாம் என்று யோசிக்க வேண்டும்” என்பதற்கு இதுவே ஆகச்சிறந்த உதாரணம்.
சவால்களைச் சந்தித்த விதம்
சமையல் எண்ணெய் சந்தையில் ‘ரீபைண்ட் ஆயில்’ மோகம் வந்தபோதும், முத்து தனது தரத்தில் சமரசம் செய்து கொள்ளவில்லை. “எங்கள் கவனம் நல்லெண்ணெயைச் சிதைக்கக் கூடாது” என்பதில் உறுதியாக இருந்தார். எள் உற்பத்தியில் இறங்கினால் தரம் பாதிக்கப்படலாம் என்பதால், விவசாயிகளுக்கு அந்த வாய்ப்பை வழங்கி, தான் தரமான எள்ளைத் தேர்ந்தெடுப்பதில் மட்டும் கவனம் செலுத்தினார்.
“இத்தாலிக்காரர் ஆலிவ் எண்ணெய் சாப்பிட வேண்டும், தமிழர்கள் நல்லெண்ணெய் சாப்பிட வேண்டும்” – இதுதான் மண்ணின் மீது அவர் கொண்டிருந்த பிடிப்பு.
வெற்றியின் சூத்திரம்
-
முதல் நாள் லாபம்: “தொழில் தொடங்கிய முதல் நாளிலிருந்தே லாபம் கிடைக்க முயற்சி செய்ய வேண்டும்; அதற்கு அனுபவம் அவசியம்” என்பது அவர் கருத்து.
-
பிரச்சனைகளை நேசி: வரி நோட்டீஸ் வந்தபோதும், கொரோனா காலத்திலும் சோர்ந்து போகாமல், புதிய லாப முறைகளைக் கண்டறிந்தார். “பிரச்சனைகளுக்கு மாலை போட்டு வரவேற்க வேண்டும்” என்றார்.
-
நேசிப்பைத் தேடு: “நீங்கள் விரும்பும் வேலையைச் செய்தால், வாழ்க்கையில் ஒரு நாள்கூட உழைப்பதாகவே தோன்றாது.”
தன்னம்பிக்கை, தளராத உழைப்பு, மற்றும் தெளிவான தொலைநோக்குப் பார்வை – இவைதான் வி.ஆர். முத்து அவர்களைத் தொழிலதிபர்களின் இதயங்களில் இன்றும் வாழச் செய்கிறது.
தென்காசி தேவா


