32°C

🙏 நன்றி சொல்லின் மகிமை: ‘தேங்க்ஸ் கிவ்விங் டே’- ஒரு சிறப்புப் பார்வை!

admin Published: November 27, 2025 5 நிமிட வாசிப்பு Exclusive
எழுத்து:

“நன்றி” என்ற ஒரு சிறு வார்த்தைக்குள் மகத்தான சக்தி அடங்கியுள்ளது. நாம் பெற்ற உதவிகளுக்கும், நாம் அனுபவிக்கும் வாழ்வின் வளங்களுக்கும், நம்மைச் சுற்றியுள்ள அன்புக்கும் நாம் செலுத்தும் மனப்பூர்வமான மரியாதையே நன்றி. இந்த உணர்வை வெளிப்படுத்தவும், கொண்டாடும் ஒரு நாளே அமெரிக்கா மற்றும் சில நாடுகளில் முக்கியப் பண்டிகையாக விளங்கும் நன்றி தெரிவிக்கும் நாள் (Thanksgiving Day)

🦃 அமெரிக்காவின் பாரம்பரிய அறுவடை திருநாள்

நாம் தமிழர்கள் தைப்பொங்கலைக் கொண்டாடுவது போல, அமெரிக்க மக்களுக்கு இந்த ‘தேங்க்ஸ் கிவ்விங் டே’ ஒரு பாரம்பரிய அறுவடைத் திருநாள் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தின் நான்காவது வார வியாழக்கிழமை இந்தப் பண்டிகை அமெரிக்காவில் கொண்டாடப்படுகிறது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

வரலாற்றின் தொடக்கம்:

  • புதிய பயணமும் பூர்வகுடிகளின் உதவியும்: 1620 ஆம் ஆண்டு செப்டம்பரில், இங்கிலாந்தில் மதரீதியான துன்புறுத்தலில் இருந்து விடுபடவும், வளமான வாழ்வை நாடியும், 102 பயணிகள் ‘மே ஃப்ளவர்’ கப்பலில் அமெரிக்காவிற்குப் புறப்பட்டனர். கடும் சவால்களுக்குப் பின் அமெரிக்கா அடைந்த அவர்களுக்கு, அங்கு வசித்து வந்த பூர்வகுடிகளான பழங்குடியினர் (செவ்விந்தியர்கள்) பெரும் உதவிகளைச் செய்தனர். சோளம் பயிரிடும் முறை, மீன்பிடித்தல் போன்ற வாழ்வாதார வழிகளைக் கற்றுக் கொடுத்தனர். புதிதாக வந்த இவர்கள் ‘யாத்திரிகள்’ (Pilgrims) என்று அழைக்கப்பட்டனர்.

  • முதல் நன்றி விருந்து (1621): பழங்குடியினரின் உதவியால் விளைச்சல் அமோகமாக இருந்த நிலையில், அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக 1621 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ‘யாத்திரிகள்’ ஒரு விருந்து வைத்தனர். இதுவே அமெரிக்காவில் நடந்த முதல் ‘நன்றி செலுத்தும் நாள்’ விருந்து என்று கருதப்படுகிறது.

📝 கவனிக்க: பிற்காலத்தில், அமெரிக்கப் பூர்வகுடிகள் (செவ்விந்தியர்கள்) கடுமையான அடக்குமுறைக்கு உள்ளான வரலாற்றுச் சோகமும் உண்டு.

🏛️ ‘நன்றி செலுத்தும் நாளின் தாய்’

‘நன்றி தெரிவிக்கும் நாள்’ ஒரு தேசிய விடுமுறையாக அங்கீகரிக்கப்படுவதற்குப் பின்னால் ஒரு மகத்தான போராட்டம் உள்ளது:

  • ஜார்ஜ் வாஷிங்க்டன் அறிவிப்பு (1789): அமெரிக்காவின் முதல் அதிபர் ஜார்ஜ் வாஷிங்க்டன், விடுதலைப் போரின் வெற்றிக்கும் அரசியலைப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டதற்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக நவம்பர் 26 ஆம் தேதி நன்றி தெரிவிக்கும் நாள் கொண்டாடப்படும் என்று அறிவித்தார். (ஆனால் இது விடுமுறை அல்ல).

  • சாரா ஜோசப் ஹேலின் போராட்டம்: 1827 ஆம் ஆண்டு முதல், பத்திரிகை பதிப்பாசிரியர் மற்றும் எழுத்தாளர் சாரா ஜோசப் ஹேல், இந்த நாளை பொது விடுமுறையாக அங்கீகரிக்கக் கோரி சுமார் 36 ஆண்டுகள் ஓயாமல் போராடினார். எண்ணற்ற கட்டுரைகள், விண்ணப்பங்கள், கடிதங்கள் எனப் போராடிய சாரா, ‘நன்றி தெரிவிக்கும் நாளின் தாய்’ (Mother of Thanksgiving Day) என்று போற்றப்படுகிறார்.

  • தேசிய விடுமுறை அறிவிப்பு (1863): சாராவின் போராட்டத்தின் பலனாக, 1863 ஆம் ஆண்டு, அதிபர் ஆபிரகாம் லிங்கன், நவம்பர் கடைசி வியாழக்கிழமையை ‘நன்றி தெரிவிக்கும் நாள்’ என்றும், அன்று அரசு விடுமுறை என்றும் அறிவித்தார்.

  • மாற்றங்கள்: 1939 இல் ஃபிராங்க்ளின் ரூஸ்வெல்ட் இதனை மூன்றாவது வியாழக்கிழமைக்கு மாற்றினார். பலத்த எதிர்ப்புக்கிடையே, 1941 ஆம் ஆண்டு, இந்த நாள் நவம்பர் மாதம் நான்காவது வியாழக்கிழமை அனுசரிக்கப்படும் என்று ரூஸ்வெல்ட் அரசாணை வெளியிட்டார்.

🍽️ பண்டிகையின் முக்கிய அம்சங்கள்

இந்த நாளின் மிக முக்கியமான நிகழ்வு குடும்பத்துடன் அமர்ந்து விருந்துண்ணுதல் ஆகும்.

  • பிரதான உணவு: இந்த விருந்தின் முக்கிய அங்கம் வான்கோழி (Turkey). ஏறத்தாழ 90% அமெரிக்க மக்கள் இந்த நாளில் வான்கோழியைச் சமைத்து உண்கின்றனர்.

  • பிற உணவுகள்: உருளைக்கிழங்கு, பழச்சாறு கலந்த பானம், சோளம், மற்றும் க்ரான்பெரி சாஸ் (தமிழில் சிருகிலா, கலக்கை) ஆகியவை விருந்தில் முக்கிய இடம்பிடிக்கின்றன.

  • அமெரிக்காவின் ஜனாதிபதி வெள்ளை மாளிகையில் “தேசிய வான்கோழிக்கு மன்னிப்பு வழங்கும் சடங்கை” (National Thanksgiving Turkey Presentation and Pardoning) நிகழ்த்துவது பல ஆண்டு காலமாகப் பின்பற்றப்படும் ஒரு வழக்கமாகும்.

    📜 இந்தச் சடங்கு பற்றிய கூடுதல் தகவல்கள்:

    • சடங்கின் நோக்கம்: நன்றி தெரிவிக்கும் விருந்துக்காகப் பல்லாயிரக்கணக்கான வான்கோழிகள் கொல்லப்படுவதால், அவற்றுக்குப் பதிலாக, சாவிலிருந்து தப்பிப் பிழைக்கின்ற இரண்டு அதிர்ஷ்டமான வான்கோழிகளுக்கு ஜனாதிபதி அதிகாரப்பூர்வமாக ‘மன்னிப்பு’ வழங்குவார்.

    • மன்னிப்பு பெற்ற வான்கோழிகள்: இந்த ‘மன்னிப்பு’ பெற்ற வான்கோழிகள் பின்னர் கொல்லப்படாமல், நாட்டிலுள்ள விலங்குக் காப்பகங்கள் (Farms/Sanctuaries) அல்லது வரலாற்றுப் பண்ணைகளுக்குப் பரிசாக அனுப்பப்பட்டு, அவற்றின் வாழ்நாளை அங்கே கழிக்கின்றன.

⚫ கருப்பு வெள்ளியும் வியாபார உத்தியும் (‘Black Friday’)

நன்றி தெரிவிக்கும் நாளுக்கு அடுத்த நாள் வரும் வெள்ளிக்கிழமை, அமெரிக்காவில் ‘கருப்பு வெள்ளி’ (Black Friday) என்று அழைக்கப்படுகிறது.

  • தள்ளுபடி விற்பனை: இந்த நாளில், ஏழை முதல் பணக்காரர் வரை பயனடையும் வகையில், எல்லா மால்களிலும் தரமான ஆடைகள், வீட்டுப் பொருள்கள், அழகு சாதனங்கள் ஆகியவை மிகக் குறைந்த விலைக்கு தள்ளுபடியில் விற்பனைக்கு வரும்.

  • பெயர்க் காரணம்: முன்னொரு காலத்தில் வியாபாரிகள் லாபத்தைக் குறிக்க கறுப்பு நிறத்தையும், நஷ்டத்தைக் குறிக்க சிவப்பு நிறத்தையும் பயன்படுத்தினர். அந்த வெள்ளிக்கிழமையில் அதிக விற்பனை மூலம் அதிக லாபம் (கறுப்பு) கிடைப்பதை எதிர்பார்த்து இது ‘பிளாக் ஃப்ரைடே’ ஆனது. இது ஆண்டுச் சில்லறை வணிகத்தின் மிக முக்கிய நாளாகக் கருதப்படுகிறது.

🌍 உலகம் முழுவதும் நன்றி!

நன்றி சொல்லும் வழக்கம் வட அமெரிக்காவிற்கு 1621-ல் வந்திருக்கலாம். ஆனால், அறுவடைத் திருநாட்கள் மூலமாக நன்றி சொல்லும் பண்பாடு அதற்கும் முன்னரே இந்திய, கிரேக்க, ரோமானிய, எகிப்திய கலாச்சாரங்களில் இருந்துள்ளது.

  • கனடா: அக்டோபர் மாதம், இரண்டாவது திங்கட்கிழமை ‘நன்றி செலுத்தும் நாள்’ அனுசரிக்கப்படுகிறது.

  • இந்தியா: நமது நாட்டில் பொங்கல், மகர சங்கராந்தி, பைசாகி போன்ற பெயர்களில் அறுவடைத் திருநாளாகக் கொண்டாடப்பட்டு, இயற்கைக்கு நன்றி சொல்லும் மரபு தொன்று தொட்டு பின்பற்றப்படுகிறது.

உதவி செய்த உள்ளங்களுக்கு, விளைச்சலைக் கொடுத்த பூமிக்கு, வாழ்வின் வளங்களுக்கு என ஒவ்வொன்றிற்கும் நன்றி சொல்லும் ஒரு அற்புதமான உணர்வின் வெளிப்பாடே ‘நன்றி தெரிவிக்கும் நாள்’. நாம் நன்றி செலுத்துவது என்பது வெறும் சடங்கு அல்ல; அது நம் மனதை நேர்மறையாக்கி, மகிழ்ச்சியைப் பெருக்கும் ஒரு உன்னதப் பண்பு.

நிலவளம் ரெங்கராஜன்