.ஊடகங்களின் கவனம் அரசை சுற்றியே உள்ளன.!- தினத் தந்தி விழாவில் மோடி பேச்சு!

.ஊடகங்களின் கவனம் அரசை சுற்றியே உள்ளன.!- தினத் தந்தி விழாவில் மோடி பேச்சு!

இன்று 24 மணி நேர டி.வி. செய்தி சேனல்கள் உள்ளது. ஆனாலும் ஒரு கையில் காபி, ஒரு கையில் பத்திரிகை வைத்து படிப்பது வழக்கமாக நீடித்து வருகிறது. பத்திரிகைகள் ஜனநாயகத்தில் நான்காவது தூணாக உள்ளது. பத்திரிகைகள் தான் மக்களிடம் குறிப்பாக அடித்தள மக்களிடம் சென்று மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.  ஒரு நாள் பயணமாக இன்று காலை 9.55 மணி அளவில் சென்னை வந்த பிரதமருக்கு விமான நிலையத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் மற்றும் முப்படை அதிகாரிகள் வரவேற்றனர்.

சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா கட்டிடத்தில் தினத் தந்தி பவள விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த பவள விழாவுக்கு தலைமை தாங்கி உரையாற்றிய அவர் பேசிய போது, “சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை பெய்துள்ளது. வெள்ளம் நிவாரணம் தொடர்பாக தமிழகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும். மழையால் உயிர் இழந்தவர்க ளுக்கும், மூத்த பத்திரிகையாளர் ஆர்.மோகன் மறைவிற்கும் இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் மக்களுக்கு தினத்தந்தி தனது பங்களிப்பை சிறப்பாக செய்து வருகிறது. சி.பா.ஆதித்தனார் எடுத்த முயற்சி சிறந்த வெற்றியை அடைந்திருக்கிறது. தமிழ் நாட்டிற்கு மட்டும் அல்லாமல் நாடு முழுவதற்கும் நல்ல பங்களிப்பை கொடுத்து வருகிறார்கள். எளிய முறையில் செய்திகளை புரியும் வண்ணம் கொடுப்பது தினத்தந்தியின் தனித்துவம்.

தினத்தந்தி தமிழ்நாட்டில் மட்டுமல்ல பிற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் பதிப்புகளை கொண்டுள்ளது. இப்போது தினத்தந்தி 17 பதிப்புகளாக வெளி வருகிறது. பெங்களூர், மும்பை என வெளிமாநிலங்களிலும், வெளிநாட்டில் துபாயிலும் தினத்தந்தி நடத்தப்பட்டு வருகிறது. தந்தி என்றால் “டெலி கிராம்’’ தினத்தந்தி என்றால் டெய்லி டெலிகிராம். அஞ்சல் துறையால் நிர்வகிக்கப்பட்டு வந்த தந்தி கொடுக்கும் முறை காணாமல் போய் விட்டது. ஆனால் தினத்தந்தி துடிப்பாக இன்னும் வெளி வந்துக் கொண்டிருக்கிறது.

75 ஆண்டுகளை கடந்து செய்திகளை தினத்தந்தியாக கொடுத்து வருகிறது. மக்களின் உணர்வுகளை சமூகத்தின் கடை கோடி வரை கொண்டு செல்கிறது தினத்தந்தி. இன்று 24 மணி நேர டி.வி. செய்தி சேனல்கள் உள்ளது. ஆனாலும் ஒரு கையில் காபி, ஒரு கையில் பத்திரிகை வைத்து படிப்பது வழக்கமாக நீடித்து வருகிறது. பத்திரிகைகள் ஜனநாயகத்தில் நான்காவது தூணாக உள்ளது. பத்திரிகைகள் தான் மக்களி டம் குறிப்பாக அடித்தள மக்களிடம் சென்று மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன.

மகாத்மா காந்தி, ராஜாராம் மோகன்ராய், லோக் மானிய திலக் உள்ளிட்டவர்களின் எழுத்து சாதாரண மக்களிடம் சென்றடைந்து அதன் மூலம் சுதந்திரம் கிடைக்க காரணமாக இருந்தது.மற்ற பத்திரிகைகளை விட உள்ளூர் மொழி பத்திரிகைகள் தான் மக்களிடையே நேரடியாக சென்றடைகிறது. பிரிட்டிஷ் ஆட்சியில் பல பத்திரிகைகள் வெளிவந்து நாட்டின் சுதந்திரத்துக்கு காரணமாக இருந்தன. பிரிட்டிஷ் காலத்தில் தொடங்கப்பட்ட பிராந்திய மொழி பத்திரிகைகளை பார்த்து ஆங்கிலேயர்கள் அச்சம் அடைந்தனர்.

தற்போது பத்திரிகைகள் செய்திகளை மட்டும் தாங்கி வருவதில்லை. விமர்சனங்களையும் முன் வைக்கிறது. இதில் கருத்து சுதந்திரத்தை தவறாக பயன்படுத்த கூடாது. அது குற்றமாகும். பொது நோக்குடன் மக்களை முன்னேற்றும் வகையில் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் செய்திகளை வெளியிட வேண்டும். செய்தி துறையின் சுதந்திரத்தை தவறாக பயன்படுத்த கூடாது.

ஊடகத்துறையில் தொழில் நுட்பம் அபார வளர்ச்சி அடைந்துள்ளது. ஊடகங்கள் தங்களது நம்பகத் தன்மையை உறுதி செய்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அத்துடன் ஆரோக்கியமான போட்டியில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும்.ஊடகங்களின் கவனம் அரசை சுற்றியே உள்ளன. அதே கவனம் 125 கோடி மக்களையும் சுற்றி இருக்க வேண்டும்.

தூய்மை இந்தியா திட்டத்துக்கு ஊடகங்களின் பங்களிப்பு சிறிய அளவில்தான் உள்ளது.தூய்மை இந்தியா திட்டத்துக்கு ஒவ்வொரு பத்திரிகையும் தனிப்பதிப்பு தொடங்க வேண்டும். ஒரு வருடத்துக்குள் அதை எளிமையாக மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். இன்று பருவநிலை மாற்றத்தால் இயற்கை பேரழிவுகள் ஏற்படுகின்றன. இதுபோன்ற விஷயங்களில் பத்திரிகைகள் சிறிய அளவிலேயே முக்கியத்துவம் கொடுக்கின்றன. இவை அல்லாமல் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் செய்திகளை வெளியிட வேண்டும்.

இன்று ஊடகங்கள் பல வழிகளில் செயல்படு கின்றன. ஒரு செய்தியை உறுதி செய்வதற்கு பல வழிகள் உள்ளது. அதே நேரத்தில் பத்திரிகைகள் பொறுப்புடன் செய்திகளை வெளியிட வேண்டும். பத்திரிகைகளை தனியார் துறைகள்தான் நடத்தி வருகின்றன. அதேநேரத்தில் அவர்கள் பொது மக்களுக்கு சேவையாற்றுகிறார்கள்.

அவர்கள் மக்கள் மத்தியில் ஒரு உந்து கருவியாக செயல்பட்டு மாற்றங்களை உருவாக்கும் சக்தியாக இருக்க வேண்டும். தேர்ந் தெடுக்கப்பட்ட அரசுக்கும், நீதி துறைக்கும் பக்கபலமாக இருந்து உரிய பொறுப்பை தர வேண்டும். பத்திரிகைகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள செய்தி சுதந்திரத்தை மக்களின் நன்மைகளுக்காக பயன்படுத்த வேண்டும். தவறான தகவல்கள் வெளி வந்துவிடக்கூடாது. மகாத்மா காந்தியும் இதே கருத்தைதான் கூறி இருக்கிறார்.

பத்திரிகைக்கு கிடைக்கும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினால் அது குற்றமாகும் என்று அவர் கூறி இருக்கிறார். தவறான தகவல் பரவி விடக்கூடாது என்பதை தங்கள் சமூக பொறுப்பாக எடுத்து கொள்ள வேண்டும். குறிப்பாக உள்ளூர் பத்திரிகைகளுக்கு இதில் அதிக பொறுப்பு உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

பிரதமர் மோடி 11.28 மணிக்கு தனது பேச்சை முடித்தார். மொத்தம் 26 நிமிடம் 17 வினாடிகள் பேசினார். அவர் குறிப்பு எதுவும் இன்றி இயல்பாக மனதில் பட்டதை சரளமாக பேசினார். பேச்சின் முடிவில் வணக்கம் என்று தமிழில் தெரிவித்தார். பின்னர் எம்ஆர்சி நகரில் மேயர் ராமநாதன் செட்டியால் திருமண மண்டபத்தில் நடைபெற்ற ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சோமநாதன் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

இதையடுத்து திடீர் என்று கருணாநிதி இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்து உடல்நலத்தை கேட்டறிந்தார்.இதற்காக நண்பகல் 12.10 மணிக்கு கோபாலபுரம் வந்த பிரதமர் மோடியை தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். எம்.பி., கனிமொழி பிரதமருக்கு சால்வை கொடுத்து வரவேற்றார்.

அப்போது, தி.மு.க முதன்மை நிலைச் செயலாளர் துரைமுருகன், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜன் ஆகியோர் உடனிருந்தனர். பின்னர், பிரதமரை கருணாநிதியிடம் அழைத்துச் சென்றார் மு.க.ஸ்டாலின். அப்போது, கருணாநிதியின் கையைப் பிடித்துக்கொண்டு பிரதமர் நலம் விசாரித்தார்.

அப்போது, முரசொலி பவளவிழா மலரை பிரதமர் மோடிக்கு கருணாநிதி பரிசாக வழங்கினார். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனும் கருணாநிதியிடம் நலம் விசாரித்தார். 15 நிமிடங்கள் இந்தச் சந்திப்பு நடந்த பின்னர், பிரதமர் மோடியை மு.க.ஸ்டாலின் வழியனுப்பிவைத்தார். அப்போது, காரில் ஏறிய பிரதமர் மோடி, அங்கிருந்தவர்களைப் பார்த்து கைகாட்டினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டார்.

error: Content is protected !!