நான் கவனித்த டிரைவர் ஷர்மிளா!

நான் ஷர்மிளாவை பேட்டி கண்ட வகையில் எந்த ஓர் அரசியல் கட்சி அடையாளமும் காட்டிக் கொள்ளவில்லை. ஆயினும் அவர் அப்பா அதிமுகவுடன் நெருக்கம் என்பதை கண்டுகொள்ள முடிந்தது. ஒரு பெண் பஸ் ஓட்டுநராக பிரபலப்படும் போது, அது சம்பந்தமான விஷயங்களை பேசுவதும், அவர் முன்னேற்றத்துக்கான விஷயங்களை பகிர்ந்து ஊக்கப்படுத்துவதும்தான் ஒரு பத்திரிகையாளன் / எழுத்தாளனின் கடமையே ஒழிய, அவர் என்ன ஜாதி, எந்த கட்சி, என்ன மதம், எந்த மாதிரி இயக்கங்களில் பங்கேற்றுள்ளார், ஏதும் வம்பு தும்புகளில் ஈடுபட்டுள்ளாரா என்பதை அவர்களிடமே கேட்பதும், அல்லது அப்படிக் கிடைத்த தகவல்களை பரபரப்புச் செய்திக்காக பகிர்வதும் ஒரு journalist செய்யும் வேலை அல்ல.
இப்போதெல்லாம் அது மட்டும்தான் இங்கே journalism ஆகி வருகிறது.
இந்த ஷர்மிளாவை பலமுறை பேட்டி கண்டதில் அவர் செய்தி என்youtube-ல் வைரலாகி உள்ளது. அதில் Comment செக்ஷனில் பலர் கண்றாவியான கருத்துக்களைப் பகிர்ந்தும் உள்ளார்கள். அதைக் கண்டு உடனே delite செய்தும் உள்ளேன். ஆனால் அதற்காக இந்தப் பெண்ணோ, குடும்பமோ சங்கடப்பட்டதில்லை. அந்தக் கமெண்ட்டை தூக்குங்க, அந்த செய்தியைத் தூக்குங்க என்றும் சொன்னதில்லை. அவ்வளவு சகிப்புத்தன்மை, maturity, பக்குவப்பட்ட தன்மை இந்தப் பெண்ணிடம் இருப்பது கண்டு ஆச்சர்யப்படுகிறேன். இப்பவும் வியக்கிறேன்.
அதே போல் எந்த நேரம், எந்த நிறுவனம், எந்தக் கட்சி கூப்பிட்டாலும் அவர்கள் தரும் பாராட்டை, பரிசை, சால்வையை வாங்கிக் கொள்கிறார். யாரையும், எதையும் புறக்கணிப்பதில்லை. அப்படித்தான் அவர் வடவள்ளி சந்திரசேகர் (அதிமுக) வாழ்த்துப் பெற்றதும், வானதியை (பாஜக) வரவேற்றுப் பேசியதும், கனிமொழியை (திமுக) எதிர்பார்த்துக் காத்திருந்து, கட்டிப் பிடித்து பாசம் காட்டியதும் என்று கருதுகிறேன்.
அவர் விளம்பரப் பிரியை என்கிறார்கள்.
யாருக்குத்தான் இங்கே விளம்பர மோகம் இல்லை. ஆளாளுக்கு, சின்ன சின்ன விஷயங்களுக்கு செல்ஃபி எடுத்து facebook-ல் போட்டு like வராதா என ஏங்கும் கும்பல்தான் நாம். இந்தப் பெண்ணும் எங்கே, யாருடனானாலும் செல்ஃபி எடுத்துக் கொள்வதை நான் கவனித்து வந்துள்ளேன். இவ்வளவு செல்ஃபி ஆர்வம் உள்ள ஓர் 23-24 வயதுப் பெண் வலைத்தள வைரலாகும்போது அவர் எந்த அளவு அதன் நாட்டத்தில் மகிழ்ந்திருப்பார் என யோசித்துப் பாருங்கள். அதைத் தவறு என்று சொல்ல முடியாது.
நான் அடிப்படையில் இடது சித்தாந்தவாதியாக இருந்தாலும் பா.ஜ.க சி.பி ஆர் முதல் இமக அர்ஜுன் சம்பத் வரை பல இந்துத்வா ஆட்களை பேட்டி கண்டு 1997 – முதல் நான் பணிபுரிந்த பத்திரிகைகளில் பிரசுரித்து வந்துள்ளேன். ஏன் குண்டு வெடிப்பு வழக்கு சிறைவாசிகளைக் கூட பேட்டி எடுத்து எழுதியிருக்கிறேன். அதுதான் journalist-ன் கடமை என்றும் உணர்கிறேன். அப்படியிருக்க ஒரு சிறு பெண்ணை – ஒரு துறையில் சாதித்த ஒரு பெண்ணை ஒரு படத்தைப் போட்டு சங்கி என்றெல்லாம் கொச்சைப்படுத்துவது அருவெறுக்கத் தக்கதாக உணர்கிறேன். அவர் முழு நேர சங்கிப் பிரச்சாரம் செய்தால் விமர்சனம் செய்யலாம். எதிர்க்கலாம். அவர் பேட்டியில் அது தொனித்தால் இஷ்டமில்லாவிட்டால் அதை தவிர்க்கலாம். புறக்கணிக்கலாம்.
அதை விட்டு டிரைவர் தொழிலை நேர்த்தியாக செய்யும் இவர் மீது இவ்வளவு வன்மம் ஏன்? ஒரு போட்டோ, வீடியோவை வைத்து இந்த சாத்து, சாத்துவதுதான் படித்தவர்கள் செய்யும் காரியமா? ஏன் இப்படி? எதற்காக இப்படி செய்கிறார்கள்? ஓவரா வாய் பேசி, பிரபலமாகி விட்டாரே என்ற ஆழ் மனதில் எழும் பொறாமை/வக்கிரத் தீயைத் தவிர வேறு என்ன இருக்க முடியும்?