இந்தக் கால பிள்ளைகளைப் புரிந்துகொள்வதுதான் பெரிய சவால்!

இந்தக் கால பிள்ளைகளைப் புரிந்துகொள்வதுதான் பெரிய சவால்!

மேலோட்டமான பார்வைக்கு மிகச் சாதாரணமாகத் தெரிகின்ற அனைத்துமே சாதாரணமானவை அல்ல. சற்று உற்று நோக்கினால் அதன் சிக்கலான அல்லது பிரமாண்டமான வடிவங்களும், கூறுகளும் தெரியும். இந்தத் தலைமுறைப் பிள்ளைகள் இதுவரைப் பார்த்த பிள்ளைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர்கள். எண்பதுகளில், தொன்னூறுகளில் பிள்ளைகளாக இருந்தவர்கள், தாம் பிள்ளைப் பருவத்தில் இருந்ததுபோன்றே, தாம் கையாளும் இந்தத் தலைமுறை பிள்ளைகளும் இருப்பார்கள் என்று நினைத்தால், அது மிகப் பெரிய பிழை என்பதை காலம் தொடர்ந்து உணர்த்திக் கொண்டேயிருக்கின்றது. காலம் காலமாக நாம் பார்த்த பிள்ளைகள்தானே, புதிதாக கையாளுதல் என்ன இதில் இருக்கின்றது எனத் தோன்றலாம்.

ஆசிரியர்களுக்கான பயிலரங்குகளுக்கு அழைக்கப்படும்போது அவர்களின் மேம்பாட்டில் மட்டுமே கவனம் இருப்பதில்லை. மாறாக “தற்கால மாணவர்களைக் கையாள்வது” குறித்தே என் கவனம் கூடுதலாக இருக்கும். நான் சந்திக்கும் ஆசிரியர்களிடம், அவர்கள் கையாண்டு கொண்டிருக்கும் பிள்ளைகளின் தற்கால மனநிலை எவ்விதம் இருக்கும் என்பதை என் அறிதல், புரிதல் மற்றும் அனுபவத்தில் இருந்து பகிர்கின்றேன். ஒவ்வொரு பயிலரங்கு நிகழ்விலும் 60-70% கவனம் இதற்காக மட்டுமே கொடுக்கிறேன். அதற்குபிறகுதான் அவர்களின் பணித்திறன், உறவு முறைகள், இலக்குகள், மன-உடல் நலம் ஆகியவையெல்லாம்.

அதிகப்படியான கவனம் செலுத்த வேண்டிய தேவை உள்ளது என்பதற்கான ரத்தமும் சதையுமான சம்பவம் ஒன்றினைப் பகிர நினைக்கின்றேன். மிகுந்த அதிர்ச்சிக்கும் வருத்தத்திற்கும் உரியதுதான் என்றாலும், நாம் இது குறித்து விரிவாக தொடர்ச்சியாக உரையாடியே தீர வேண்டும். அன்று காலை, கடை ஒன்றின் முகப்பில் தொங்கவிடப்பட்டிருந்த நாளிதழ் தலைப்புச்செய்தியில் ”அம்மாவின் தலையில் கல்லைப் போட்டுக் கொன்ற மகன்” எனும் செய்தி பார்வையில் பட்டது. இப்படியான தலைப்புச் செய்திக்கு கடைசியாக எப்போது அதிர்ச்சி அடைந்தேன் என்பதும்கூட நினைவில் இல்லை. அந்த வரியை வாசித்ததும், வழக்கம்போல் குடிகார மகனாக இருக்கலாம், குடும்பத்தில் ஒன்றாதவனாக இருக்கலாம், அம்மாவிடம் காசுகேட்டு தர மறுத்ததால் இப்படிக் கொலை செய்திருக்கலாம்’ என்று மட்டுமே மனதில் தோன்றியது. கூடவே, குடும்பத் தகராறு, சொத்துத் தகராறு உள்ளிட்ட பல சாத்தியங்களையும்கூட மனம் கணக்கிட்டு கடந்துபோனது. சில நிமிடங்களில் அதை மறந்தும் போனேன்.

சில மணி நேர இடைவெளிக்குப் பிறகு வாட்ஸப் பகிர்வாக வந்திருந்த செய்தி மிகுந்த பெரும் அதிர்ச்சியைத் தந்தது. இந்தத் தலைமுறை பிள்ளைகள் மூலம் எதுவெல்லாம் நடக்கும் ஆபத்து உண்டு என ஆசிரியர்களிடம் தொடர்ந்து அறிவுறுத்துகின்றேனோ அதுபோன்றதொரு செய்தி. அந்தத் தலைப்புச் செய்தி, நான் நினைத்துக் கடந்ததுபோல் இல்லை. தாயின் தலையில் கல்லைப் போட்டுக் கொன்றது ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது மகன். இறந்தது 36 வயது அரசு அலுவலர். கொலை செய்ததற்கான காரணமாக முதற்கட்ட விசாரணை அடிப்படையில் தெரிவிக்கப்பட்ட தகவல் ’பள்ளிக்கு செல்ல மறுத்த மகனை வற்புறுத்தியது’. தூங்கிக் கொண்டிருந்த அம்மாவின் தலையில் பூத்தொட்டி, ஹாலோப்ளாக் கல் ஆகியவற்றைக் கொண்டு நள்ளிரவு நேரத்தில் தாக்கியிருக்கிறான். இதைப் பார்த்த ஆறாம் வகுப்பு படிக்கும் தங்கை சப்தமிட்டதால், வீட்டை விட்டு தப்பி சென்றிருக்கிறான். செல்லும் வழியில் அம்மாவின் செல்ஃபோனில் பாட்டு கேட்டவாறு அல்லது கேம் விளையாடியவாறு சென்றதை சிலர் பார்த்துள்ளனர்.

மிகச் சாதாரணமாகத் தெரியும் ஒரு செயலுக்கு, பதினான்கு வயதுப் பிள்ளை இப்படியெல்லாம் நடந்துகொள்ளும் சாத்தியம் கூடி வருவதை முதலில் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அவன் குழந்தை, மாணவன், நம்ம வீட்டுப் பிள்ளை என்பதுள்ளிட்ட சமாதானங்களில் நம்மை ஏமாற்றிக் கொள்வதைவிட இந்தக் குழந்தைகளின் மன அமைப்பு எப்படிப்பட்டதாக இருக்கின்றது, எதனால் இப்படி இருக்கின்றார்கள், அவர்களை எதுவெல்லாம் இயக்குகின்றது உள்ளிட்ட அனைத்தையும் அலசுவதும், அறிய முற்படுவதுமே அவர்களைக் கையாள உதவும். அதைவிடுத்து காலம் காலமாக எல்லாரும் கையாண்ட முறைகளையே தொடர்ந்து செயல்படுத்தினால் மிக மோசமான விளைவுகளையே சந்திக்க நேரும்.

இந்தச் சம்பவத்தை ஒரு மரணத்தின் இழப்பாக மட்டுமே கடக்க முடியாது. மற்ற மூவரின் வாழ்வும் சிதையும் சாத்தியமுண்டு. கைது செய்யப்பட்ட மகன் சீர்திருத்தப் பள்ளிக்குச் செல்ல வேண்டும். விடுதலையாகும்போது சீர்திருத்தப்ப பள்ளி என்ன செய்து அனுப்பும் என்பது ஓரளவு தெரிந்ததுதானே? பனிரெண்டு வயது மகள் பார்க்கக்கூடாத, அனுபவிக்கூடாத அதிர்ச்சியையும், இழப்பையும் சந்தித்திருக்கிறாள். இந்த அதிர்ச்சி ஆழ்மனதில் அழுத்தமாய் பதியும். எப்போது எங்கனம் மீண்டு வருவாள்? சீராகப் போய்கொண்டிருந்த வாழ்வில், அந்தக் கணவன் மனைவியை இழந்ததோடு, மகன் சீர்திருத்தப்பள்ளியில், மகள் மீண்டு வரவேண்டும் எனும் நிலைகளை எதிர்கொண்டாக வேண்டும். இவை அத்தனைக்கும் பதினான்கு வயது பையன் பொறுப்பாகிறான்.

ஒன்று மட்டும் அழுத்தமாகச் சொல்கிறேன், இந்தத் தலைமுறைப் பிள்ளைகள் முற்றிலும் வேறானவர்கள். அதென்ன முற்றிலும் வேறானவர்கள்? அவர்கள் நம் பிள்ளைதானே? நம்மைப் போன்ற மனிதர்கள்தானே? ஆமாம், நம் பிள்ளைகள்தான், மனிதர்கள்தான். ஆனால் அவர்கள் பிறந்து வாழ்ந்து வரும் இந்தக் காலம் குறிப்பாக, அவர்களின் ‘தலைமுறைத் தன்மை’யை அறியாமல் கையாள்வது என்பது மனநிலை பிறழ்ந்தவன் கையில் இருக்கும் கத்தி போன்றதுதான்.

ஆண்டாண்டுகளாக மாணவர்களைக் கடந்து வரும் ஆசிரியர்களுக்கு, வழி வழியாய் கைக்கொண்டிருக்கும் வளர்ப்பு முறையில் இருக்கும் பெற்றோர்களுக்கு பிள்ளைகள் குறித்து புதிதாக என்ன உணர்த்திட இருக்கின்றது எனும் கேள்வி வருகின்றதா? இப்போது மாணவர்களாக இருப்பவர்கள் எந்தத் தலைமுறையினர் என்பதில் தெளிவடைந்தால் மட்டுமே அவர்களைக் கையாளும் திறன் கைவரப்பெறும். இரண்டாம் உலகப்போர் முடிந்த பிறகு 1946 முதல் 1964 வரையான காலத்தில் பிறந்தவர்கள் பூமர் எனும் தலைமுறையினராகக் கருதப்படுகின்றனர். 1965 முதல் 1980வரை பிறந்தவர்கள் ஜென்–X (Gen-X), 1981 முதல் 1996 வரை பிறந்தவர்கள் மில்லேனியல்ஸ் என்று அழைக்கப்படுகின்றனர். 1997 முதல் 2012 வரை பிறந்தவர்கள் ஜென்–Z (Gen-Z), 2012ற்குப் பிறகு பிறந்தவர்கள் ஆல்பா ஜென் (Alpha Gen) தலைமுறையினராகக் கருதப்படுகின்றனர்.

இதில் உள்ள ஒவ்வொரு தலைமுறையினருக்கும், அவரவர் குழந்தைப் பருவம் மற்றும் பதின்பருவத்தில் கிடைத்தவைகள் மற்றும் பல்வேறு காரணிகளின் அடிப்படையிலான குணாதிசயங்கள், பழக்கங்கள், நிலைப்பாடுகள், நடவடிக்கைகள் உண்டு. இவைகளில் வேறுபாடு என்பது மிக நுண்ணிய அளவில் இருந்தாலும் குறிப்பிட்ட சில நிலைகளில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

பெற்றோர்களும் ஆசிரியர்களும் தம் பிள்ளைகளின் தலைமுறை தன்மை என்னவென்பதை தெரிந்து கொண்டேயாகவேண்டும் என்பதை வலியுறுத்திச் சொல்கிறேன். நீங்கள் பிள்ளைகளாக இருந்த எழுபது மற்றும் எண்பதுகளின் தன்மையிலேயே அவர்கள் இருப்பார்கள் என நினைத்திருந்தால், நம்பியிருந்தால் அவர்களோடு மிகப் பெரிய முரணைச் சந்திப்பீர்கள். இதற்கு நிறைய உதாரணங்களை நாம் பார்த்திருப்போம். ஆயிரமாயிரம் அனுபவங்கள் இன்னும் வெளிவரவில்லை அல்லது வெளிப்படுத்தப்படவில்லை.

உதாரணத்திற்கு ஜென்–Zக்கு கிடைத்த முதல் விளையாட்டுப் பொருளே செல்ஃபோனாக இருக்கலாம். அவர்களைப் பெற்றெடுத்த தலைமுறை X அல்லது மில்லேனியலைச் சார்ந்த பெற்றோருக்கு அந்த செல்ஃபோன் என்கின்ற கருவி கிடைப்பதற்கு தேவைப்பட்ட உழைப்பும், காலமும் மிகப் பெரியதாக இருக்கலாம். இதுவொரு எளிய உதாரணம் மட்டுமே, இப்படி நிறைய வேறுபாடுகள் ஒவ்வொரு தலைமுறைக்கு இடையேயும் உண்டு. இந்த கால இடைவெளி மட்டுமே இத்தனைக்கும் காரணம் அல்ல. சமகாலம் அவர்களுக்கு என்னவெல்லாம் கொடுக்கின்றது என்பது மிகப் பெரிய தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.

எல்லாமே எளிமைப்பட்டுவிட்ட இந்தக் காலத்தில், எதற்கும் பெரிதாக முனைப்புக் காட்டாமல், எல்லாமும் எளிதாக தன் கைக்கு வர வேண்டும் எனும் மனநிலை படைத்தவர்களாகத்தான் அவர்கள் இருக்கின்றார்கள். அப்படி எதிர்பார்த்தது கிடைக்காதபோது உடனுக்குடன் எதிர்வினையாற்றத் தயங்குவதில்லை அவர்கள். காரணம் அச்சம் குறைந்ததொரு தலைமுறை இது. எதுவாக இருந்தாலும் நான் பார்த்துக்குவேன் எனும் அசாத்திய தைரியம் கொண்டவர்கள். அசாத்தியம் என்கிற இடத்தில் அசட்டுத்தனம் என்றும் நிரப்பிக்கொள்ளலாம்.

இன்னொன்று அவர்கள் முன் துருத்திக் காட்டப்படும் உதாரணங்கள் அனைத்துமே அவர்களை ஏதோ ஒருவகையில் சிதைக்கக் கூடியவைகளாகவே இருக்கின்றன. அவர்கள் இணையத்தில் விளையாடும் விளையாட்டுகள் தொடங்கி அவர்களை ஈர்க்கும் ஆளுமைகள் வரை கூடுதல் வெறி கொண்டவைகளாக இருப்பதை நாம் அனைவருமே அறிந்திருக்கின்றோமா? அவர்களின் கொண்டாட்டங்கள்கூட ஆக்ரோஷமாக இருப்பதை எத்தனை பேர் அறிந்திருக்கின்றோம். உதாரணத்திற்கு பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது கேட் வெட்டுவதாக ஒருகாலத்தில் இருந்தது, பின்னர் திரில்லான சூழல்களில் கேக் வெட்டுவதாக இருந்தது. அதன்பிறகு வெட்டிய கேக்கை சாப்பிடாமல், பிறந்தநாள் கொண்டாடுபவனின் முகத்தில் பூசுவதாக மாறியது. இப்பொழுதெல்லாம் மாணவர்களின் விடுதிகளில் பிறந்தநாள் கொண்டாட்டம் என்பது பிறந்தநாள் கொண்டாடுபவனை தாறுமாறாக குத்துவதாக மாறியிருப்பதை எல்லாரும் அறிந்திருக்கின்றோமா?

சமீபத்தில் நான் கலந்து கொண்ட மாணவர்களுக்கான நிகழ்வுகளில் சோதனை அடிப்படையில் தொடர்ந்து ஒரு கேள்வியை எழுப்புகிறேன். 2022ல் வெளியான படங்களில் எது வெற்றிப்படம் என்கிறேன். மிகப் பெரும்பான்மையானோர் ’விக்ரம்’ எனச் சொல்கிறார்கள். படத்தில் எந்தப் பாத்திரம் அல்லது எந்த நடிகரை அதிகம் பிடித்தது எனும் கேள்விக்கு கமல், விஜய்சேதுபதி, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்ட அனைவரையும் கடந்து ஒருமித்த குரலில் ‘ரோலக்ஸ் – சூர்யா’ எனச் சொல்கிறார்கள். இத்தனைக்கும் அவர்கள் சூர்யா ரசிகர்கள் மட்டுமே அல்ல. ரோலக்ஸ் பாத்திரம் அத்தனை ஈர்த்திருக்கின்றது. கூடவே சிலர் ”லைஃப் டைம் செட்டில்மெண்ட்!” என்ற வசனத்தையும் உச்சரிக்கின்றனர். இதே விக்ரம் படத்தில் வழக்கமாக வில்லன் பாத்திரம் ஏற்கும் ஒரு நடிகர் ரோலக்ஸ் பாத்திரத்தில் அந்தக் காட்சியில் வந்திருந்திந்தால் இத்தனை ஈர்த்திருக்க மாட்டார். லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் தொடர்ச்சியில் ரோலக்ஸ் பாத்திரத்தில் சூர்யா முழுப்படமும் நடிக்கவிருக்கும் சாத்தியம் இருக்கின்றது. அது இன்னும் எந்தெந்த விதங்களில் ஈர்க்கப்போகின்றதெனத் தெரியவில்லை.

இன்னொரு கேள்வியாக சூர்யா நடித்த பாத்திரங்களில் எது மிகவும் பிடிக்கும் என்றால் ரோலக்ஸ்தான் பதிலாக வருகின்றது, ’நெடுமாறன் ராஜாங்கம்’ வரவில்லை என்பது பெரும் வருத்தத்திற்குரியதாக எனக்குத் தோன்றுகிறது. ஒருகாலத்தில் அம்மாக்களின் கனவு நாயகனாக இருந்த நடிகர் அர்விந்த சாமி, குறிப்பாக ஜென்-Z தலைமுறைப் பிள்ளைகளிடம் வரும் ‘சித்தார்த் அபிமன்யு’வாக ஊடுருவி அவர்களின் சமூக வலைதள முகப்புப் படமாக அமர்ந்திருக்கின்றார் என்பதெல்லாம் ஏனோதானோவென்று கடந்து போகக்கூடிய ஒன்றல்ல. முந்தைய தலைமுறையினர் ரசித்த திரைப்படங்களில் வில்லன் பாத்திரம் ஏந்திய எத்தனை பேர் இப்படி ஈர்த்திருக்கிறார்கள் என்றால் ஏறத்தாழ இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் இன்று வியாபார நிமித்தமாக எதிர்மறைப் பாத்திரங்களை மிக ஈர்ப்புடையாதாக வடிவமைக்கின்றனர். தொடர்ந்து அவற்றை ரசிக்கும் ஒருவன், எளிதாக உள்வாங்கி எல்லாமும் இயல்பானதென்று (normalization) கருதும் மனநிலை எளிதில் வாய்த்துவிடுகின்றது.

போக்குவரத்து நெரிசல் உள்ள நம் நெடுஞ்சாலையில் பைக்கில் 240 கி.மீ வேகம் சென்ற இளைஞனை 38 லட்சம் பேர் யூடியூபில் தொடர்கின்றனர். அவர்களில் இந்த இரண்டு தலைமுறையைச் சார்ந்தவர்கள் எப்படியும் 90% பேர் இருக்கலாம் என்பது முந்தைய தலைமுறையினரில் எத்தனை பேருக்குத் தெரியும்?. பப்ஜி எனும் விளையாட்டை விளையாடுவதோடு ஆபாசமாக, வக்கிரமாப் பேசியதாக கைது செய்யப்பட்டவரை பல லட்சம் பேர் ரசித்து பின் தொடர்ந்தார்கள் என்பதை அறிந்திருக்கிறோமா? இப்படி பட்டியலிடும்போது, அவசரமான கேள்வியொன்று, இவர்களை எப்படிச் சரி செய்வது?

சரி செய்வதைப் பற்றி யோசிக்கும் முன், உண்மையில் அவர்களை எந்த வகையான சிக்கல்கள் வந்து சூழ்ந்திருக்கின்றன, அவை எங்கிருந்து வருகின்றன, அவற்றைத் தடுப்பது அல்லது அவர்களைத் தற்காப்பது எவ்விதம் என்பது குறித்து தெரிந்தாக வேண்டும். அதைத் தெரியாமல் சரி செய்ய முடியாது. காரணம் பிள்ளைகள் ஒரு அலைவரிசையிலும், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மற்றொரு அலைவரிசையிலும் இருக்கும்போது இணைந்து பயணிப்பது எதிர்பார்க்க நியாயம் எதுவும் இல்லையே!

முந்தைய தலைமுறைகளைவிட இந்த இரண்டு தலைமுறைப் பிள்ளைகள் எதார்த்தமானவர்கள், கூடுதல் நேர்மையுடையவர்கள் மற்றும் அறிவார்ந்தவர்கள் என்பதுள்ளிட்ட பலங்களைக் கொண்டிருப்பவர்கள். அனுபவமின்மை, அவசரம், எளிய வெற்றி, மிக குறுகிய வட்டம், குறைந்த அனுதாபம், அவசர முடிவு என்பதுள்ளிட்ட பலவீனங்களைக் கொண்டவர்கள். நமக்கு அறிமுகமில்லாததொர் உலகில் அவர்கள் வசித்துக் கொண்டிருக்கின்றனர் என்பதைப் புரிந்து ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்களின் உலகம் எத்தகையது என்பதை எப்படியாவது முயன்று கற்றுக்கொள்ள வேண்டும். அதன்பிறகு அவர்களோடு இணைந்து பயணித்து தேவையானவற்றை சரி செய்ய உதவிட வேண்டும்.

கல்வி நிறுவனங்களில் பயிலரங்கு மற்றும் உரை நிகழ்வு எதுவாக இருந்தாலும் அவை பெரும்பாலும் பிள்ளைகளை மட்டுமே இலக்காக வைத்து ஏற்பாடு செய்யப்படுகின்றன. கல்விக்கூடங்களில் மாணவர்களுக்கு நடத்தாமல் வேறு யாருக்கு நடத்தவேண்டும் எனும் கேள்வி எழலாம். ’பிள்ளைகளை மட்டுமே மனதில் வைத்து நிகழ்ச்சிகளைத் திட்டமிடுகிறோம். அந்தப் பிள்ளைகள் இத்தகைய தன்மையில் இருக்கின்றார்கள் என்பதை அவர்களைக் கையாளும் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு எப்போது உணர்த்தப்போகின்றோம்?’

– ஈரோடு கதிர்

error: Content is protected !!