தலைக்கூத்தல் – விமர்சனம்!

தலைக்கூத்தல் – விமர்சனம்!

வீட்டுக்குச் சுமையாக இருக்கும் வயதான முதியவர்களை சில பல சடங்குகள் மூலம் கொல்லும் தலைக்கூத்தல் என்னும் பழக்கமும் இன்னமும் தமிழகத்தின் சில பகுதிகளில் வழக்கத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருது பெற்ற ‘பாரம்’ திரைப்படமும் இதைப் பற்றியதே. இச்சூழலில் சர்வதேச அளவில் அதிகரித்து வரும் முதியவர்களின் வாழ்வாதாரம் பெரும் பிரச்சனையாக எதிர்கொள்ளப்படும் கால கட்டத்தில் நம் வீட்டு முதியவர்களுக்கு முடியாத நிலை வந்தால் என்ன செய்வோம் என்ற எண்ண வைக்க முயன்றிருக்கிறது ‘தலைக்கூத்தல்’ என்ற பெயரில் வந்துள்ள படம்.

பிரைவேட் கம்பெனி ஒன்றில் செக்யூரிட்டியாக ஒர்க் செய்பவர் சமுத்திரக்கனி. அவருடைய ஒய்ஃப் வசுந்தரா. இந்த தம்பதிக்கு ஒரே மகள். இவர்களுடன் சமுத்திரக்கனியின் வயதான அப்பா மரண படுக்கையில் சுயநினைவில்லாமல் ஒரே வீட்டில் வசிக்கிறார்கள். வசதி குறைந்த அக்குடும்பத்தில் பெரியவர் பாரமாக தோன்றுகிறார். அந்த கிராமத்தில் வயதானவர்களை தலைக்கூத்தல் முறையில் கொலை செய்கிறார்கள். அதுபோல் சமுத்திரகனியின் தந்தையையும் கொல்ல மனைவி வசுந்தரா மற்றும் அவருடைய குடும்பத்தினர் திட்டமிடுகிறார்கள். ஆனால் பாசத் தந்தையை அநியாயமாக கொலை செய்வதற்கு மனசு வரமால் தவிக்கிறார் சமுத்திரக்கனி. அத்துடன் மனைவிக்கு தெரியாமல் வீட்டு பத்திரத்தை அடகு வைத்து தந்தைக்காக செலவு செய்கிறார். அப்படி கடன் கொடுத்தவர் ஒரு கட்டத்தில் வீட்டை விற்று பணத்தை எடுத்துக்கொள்ள திட்டமிடுகிறார். ஏற்கனவே அப்பாவை காரணம் காட்டி சமுத்திரக்கனியிடம் வம்பு இழுத்த வசுந்தரா கடன் வாங்கிய விஷயம் தெரிந்ததும் ஆங்காரமாகச் சண்டை போடுகிறார். இடையில் இப்படியே கதை சொன்னால் எடுபடாது என்பதை புரிந்து படுத்தப் படுக்கையாக இருக்கும் சமுத்திரக்கனியின் தந்தைக்குப் பழைய காதல் நினைவுகள் வருவதை எல்லாம் வைத்து சில சீன்களை உருவாக்கி கவர முயன்றுள்ளார்கள்.. முதியவரின் இளம் வயது நடிகராகக் கதிர் நடித்துள்ளார். கதிருக்குக் காதலியாக வங்காள நடிகை கத நந்தி நடித்துள்ளார். இவர்களின் காதல் என்னவோ அனைவரையும் ரசிக்க வைக்கிறது. சாதி கொடுமையால் இருவரையும் அடித்து ஊர்மக்கள் பிரிக்கின்றனர். பிரியும் காதலர்கள் ஒன்று சேர்கிறார்களா என்பது கதையில் மிஸ்ஸிங் ஆகிவிட்டது தனி சோகம்.. இச்சூழலில் சமுத்திரக் கனியால் மனைவியை சமாதானப்படுத்தி குடும்பம் நடத்த முடிந்ததா? உயிர் ஊசலாடும் சமுத்திரக்கனியின் அப்பாவின் உயிர் தப்பித்ததா? என்பது மீதி கதை.

தத்துவமாக அல்லது சவடால் பேசியபடி பல படங்களில் உலா வந்த சமுத்திரக்கனிக்கு அதிகம் பேசாமல் நடிப்பை மட்டுமே வழங்கக்கூடிய கேரக்டர். அதை அவரும் சரியாக உணர்ந்து தன்னால் இப்படியும் முடியும் என்று வியப்பில் ஆழ்த்துகிறார். தந்தைக்கு பாசமான மகனாக, மனைவி அவமானப் படுத்துவதை தாங்கும் அமைதியான கணவனாக, மகளை அரவணைக்கும் அன்பான தந்தையாக வாய் சொல்ல வைக்கிறார் வசுந்தரா இயலாமை, பாசத்தை எல்லாம் நொடிக்கு நொடி காட்டி அடடே சொல்ல வைக்கிறார். பிளாஷ்பேக்கில் வரும் கதிர் கெட்டப், ஹேர் ஸ்டைல், நடிப்பு எல்லாம் ஓ கே. அவருடைய காதலியாக வரும் கத்தா நந்தி சிறிது நேரமே வந்தாலும் மனதில் ஒட்டிக் கொள்கிறார். இதை எல்லாம் தாண்டி படம் முழுக்க படுத்துக்கொண்டே மனதை பிசைய வைக்கிறார் கலைச் செல்வன்,

ஒளிப்பதிவு யதார்த்தமான வாழ்வை காட்டுகிறது. இசை படத்திற்கு உயிர் தந்துள்ளது. நேரடி ஒலிப்பதிவு படத்திற்கு பெரும்பலம்.

மொத்தத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் தலைமுறை, வாழ்ந்த தலைமுறையில் அருமை, பெருமைகளை உணர்த்த உந்தும் படமிது

error: Content is protected !!