அடுத்தடுத்து வந்த தமிழக அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் எப்பூடி? – மினி அலசல்

அடுத்தடுத்து வந்த தமிழக அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் எப்பூடி? – மினி அலசல்

திமுக, மநகூ, அதிமுக, பாஜக, பாமக தேர்தல் அறிக்கைகளில் சில பொதுவான விஷயங்கள் உள்ளன. அப்படியென்றால் இவை மக்களின் பொதுக்கருத்து, உடனடியாகச் செய்யவேண்டிய விஷயம் என்று எடுத்துக்கொள்ளலாம்.

edit may 6

(1) மதுவிலக்கு: அதிமுக தவிர அனைவரும் முதல் கையெழுத்திலேயே செய்துவிடலாம் என்கிறார்கள். அதிமுக “படிப்படியாக” என்கிறது. உண்மையில் “படிப்படியாக” என்பதுதான் சாத்தியமானது. எப்படியோ, யார் ஜெயித்தாலும் அடுத்த ஐந்தாண்டுகளில் மதுவின் ஓட்டம் குறைக்கப்படும், நீக்கப்படும். பார்ப்போம்.

(2) ஊழல் ஒழிப்பு/லோக் ஆயுக்தா: இது எனக்குப் பெரிய சர்ப்ரைஸ். இந்தியா முழுதும் “லோக்பால்/லோக் ஆயுக்தா” போராட்டம் நடந்தபோது தமிழகத்தில் அவ்வளவாக ஆதரவு அலை இருக்கவில்லை. ஆனால் இப்போது மக்கள் யாரும் பெரும் போராட்டம் நடத்தாமலேயே, இதனைக் கொண்டுவந்தே தீருவேன் என்று அனைவருமே சொல்லிவிட்டார்கள். எப்படிச் செய்யப்போகிறார்கள், எவ்வளவு சுதந்திரமாக இந்த அமைப்பு இயங்கும், முதல்வர் முதல் அமைச்சர்கள் வரை அனைவரும் இதன்கீழே வருவார்களா, ஊழல் புகார்கள் எவ்வளவு விரைவில் எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரணை நடத்தப்படும்…

(3) பயிர்க்கடன் ரத்து: அனைவரும் இதனைச் செய்வதாகச் சொல்லியிருக்கிறார்கள்.

(4) கல்விக்கடன் ரத்து: பாமக தவிர பிறர் அனைவரும் இதனைச் செய்வதாகச் சொல்லியிருக்கின்றனர்.

(5) கிரானைட்/மணல்: கிட்டத்தட்ட அனைவருமே இந்த வளங்களை அரசே கையகப்படுத்தும் என்கிறார்கள். அதிமுக, கிரானைட் தொடர்பாகப் புதிய கொள்கையை உருவாக்கும் என்கிறது.

(6) வேலைவாய்ப்பு: பாமக/மக்கள் நலக் கூட்டணி கொஞ்சம் யோசித்திருக்கிறார்கள். திமுக முன்வைக்கும் சில கருத்துகள் ஒப்பேறாது என்று நினைக்கிறேன். அதிமுக கவலையே படவில்லை. வீட்டுக்கு ஒரு வேலை என்று சூடம் அடித்துச் சத்தியம் செய்துவிட்டார்கள். எப்படி என்றெல்லாம் சொல்லவேண்டியதில்லை. அம்மாவுக்கு எல்லாம் தெரியும்!

(7) தொழில்துறை வளர்ச்சி, விவசாய வளர்ச்சி, நீர்ப்பாசன வளர்ச்சி, கட்டுமான வளர்ச்சி: அனைவரும் இதுகுறித்து நிறையப் பேசியிருக்கிறார்கள். பக்கம் பக்கமாகப் பேசியிருக்கிறார்கள். ஆனால் நம்பிக்கை குறைவாக இருக்கிறது.

(8) இலவசங்கள்+மானியங்கள்: அள்ளி வீசியிருப்பது அதிமுக மட்டும்தான். மொபைல் போன், லாப்டாப்+இணையம், தாலிக்குத் தங்கம் 4->8 கிராம், பெண்களுக்கு மொபெட்டில் 50% மானியம் என்று நீண்டு செல்லும் பட்டியல். திமுக, மநகூ, மின்கணக்கீட்டை மாதாமாதம் செய்வதாகவும் அதனால் மின்கட்டணம் குறையும் என்றும் சொல்கிறார்கள். அதிமுக 100 யூனிட் இலவசம் என்கிறது. இவை காரணமாக அரசுக்கோ அல்லது மின்வாரியத்துக்கோ ஏற்படும் இழப்பு பற்றிப் பேச்சே இல்லை.

(9) மின் உற்பத்தி: அனைவருமே மின் உற்பத்தியை அதிகரிப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் அதிமுக மட்டும்தான் தெளிவாக 18,500 மெகாவாட் புதிதாக அதிகரிப்போம் என்று எண்களை முன்வைக்கிறது. என் கணக்கீட்டின்படி குறைந்தபட்சம் 13,000 மெகாவாட் புதிய உற்பத்தி வேண்டும். ஆனால் அதிமுக, அனல் மின் திட்டங்கள்மூலமாகவே 13,000 மெகாவாட் எடுப்போம் என்று எந்த தைரியத்தில் சொல்கிறார்கள் என்று புரியவில்லை. தனியார்மூலமா, அரசுமூலமா என்று தெரியவில்லை. அரசு மூலமாக என்றால் இதற்குத் தேவையான முதலீடு எங்கிருந்து வரப்போகிறது?

நிறைய ஒப்பிடலாம். ஆனால் அதிமுகவின் அறிக்கை தாறுமாறாக, ஊதாரித்தனம் உடையதாக, நேர்மையற்றதாக, நம்பிக்கை வைக்க முடியாததாக உள்ளது. திமுகவின் அறிக்கை அதிமுக அளவுக்கு மோசமல்ல, ஆனாலும் நம்பிக்கை குறைவுதான். மக்கள் நலக் கூட்டணி, பாமக அறிக்கைகள் இந்த இரண்டையும்விடச் சிறந்தவை. இருவருமே இலவசங்களைக் கடுமையாகச் சாடுகிறார்கள். (ஆனால் கடன் ரத்து மட்டும் உண்டு!)

ஆனால் திமுக, அதிமுகவுக்குத்தான் ஜெயிக்க அதிக வாய்ப்பு. இதுதான் மாபெரும் சோகம்.

பத்ரி சேஷாத்ரி

error: Content is protected !!