தமிழக சட்டசபைக்குள் நுழைந்த முதல் பெண்மணி டி.எஸ். செளந்தரம்!

தமிழக சட்டசபைக்குள் நுழைந்த முதல் பெண்மணி டி.எஸ். செளந்தரம்!

நம்ம தமிழ்நாட்டில் மறக்க முடியாத சாதனையாளர்களுல் ஒருவரா டி.வி.எஸ். மோட்டார் நிறுவன அதிபர் டி.வி.சுந்தரம் அய்யங்கார் – லட்சுமி அம்மாள் தம்பதிக்கு, 1905-ம் ஆண்டில் இதே நாளில் மகளாகப் பிறந்தவர்தான் சௌந்தரம்.

தக்கனூண்டு வயசிலேயே பாட்டு, வீணை என பல கலைகளைக் கற்றுத் தேர்ந்தவர்… துணிவு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, பிறரைச் சார்ந்திராத தன்மை, சுயமாகச் சிந்தித்து முடிவெடுக்கும் பக்குவம் போன்றவற்றையும் கூடவே வளர்த்துக் கொண்டார். இவையெல்லாம்தான்… பிற்காலத்தில் லட்சக்கணக்கான மக்களுக்கு வழிகாட்டும் ஓர் தலைவியாக அவரை உருவெடுக்கச் செய்தன!

இவருக்கு அந்த கால வழக்கப்படி ஜஸ்ட் பன்னிரண்டாம் வயதிலேயே திருமணம் நடந்துச்சு, ஆனா மணமாகி சில வருடங்களில் பிளேக் நோயினால் கணவர் இறந்துவிட, இளம் விதவையாக வீட்டுக்குள் முடக்கப்பட்டார் சௌந்தரம்.

ஒரு சமயம், அப்பா சுந்தரத்தைத் தேடி வீட்டுக்கு வந்திருந்தார் விடுதலைப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா. சௌந்தரத்தின் நிலை கண்ட அவர், ‘வீட்டிலேயே பூட்டி வைத்து, வாழ்க்கையை வீணடிக்காதீர்கள். கல்வியைத் தொடரச் செய்யுங்கள்’ என்று சொன்னதுதான்… சௌந்தரத்தின் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது.

படு ஆர்வமாய் பள்ளிப் படிப்பு, அதைத் தொடர்ந்து டெல்லி மற்றும் சென்னையில் மருத்துவப் படிப்புகளை முடித்து, சிறந்த மருத்துவ நிபுணராக உருவானார். 1935ஆம் ஆண்டு செளந்தரம் டெல்லியிலுள்ள லேடி ஹார்டிஞ்சு மருத்துவக் கல்லூரியில் படித்து மருத்துவத்தில் டாக்டர் பட்டம் பெற்றார். பிறவியிலேயே அறிவுச் சுடராக பிரகாசித்த இவரது திறமை நாட்பட நாட்பட மேலும் மேலும் பிரகாசிக்கத் தொடங்கியது. பல்கலைக் கழகத்தில் முதல் மாணவராக இவர் தேர்ந்தார். எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்ற பிறகு மகளிர் மருத்துவம் (Gynaecology) தாய் சேய் நலம் (Obsterics), ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றார். சென்னையில் சுமார் இரண்டு ஆண்டுகள் மருத்துவராகப் பணியாற்றினார்.

இவர் டெல்லியில் படித்துக் கொண்டிருந்த காலத்திலேயே சேவா கிராமம் சென்று மகாத்மாவைச் சந்தித்திருக்கிறார். அங்கு பல சேவைகளில் பங்கு கொண்டிருக்கிறார். அதுதவிர சென்னை, மதுரை ஆகிய நகரங்களிலும் பல்வேறு காங்கிரஸ் தலைவர்களைச் சந்தித்து சுதந்திரப் போரில் தனது பங்கினை அளித்து வந்திருக்கிறார்.

அப்பாவைப் போலவே சமூக சேவை மற்றும் அரசியல் ஆர்வம் சௌந்தரத்துக்கும் இருந்தது. அதனால், மதுரையில் சொந்தமாக இலவச மருத்துவமனையை ஆரம்பித்தார்.கிராமங்களில் வாழும் ஏழை மக்களுக்கு மருத்துவ சேவையை அளித்தவர், கூடவே சமூக சேவைகளையும் மேற்கொண்டார். அப்பகுதிகளில் தீண்டாமை ஒழிப்பு, காங்கிரஸ் கட்சிப் பணி என்று ஈடுபட்டிருந்த ‘ஹரிஜன சேவா சங்க’ காரியதரிசி ராமச்சந்திரனோடு பழகும் வாய்ப்பு, சௌந்தரத்துக்கு கிடைத்தது. அவருடைய பணிகள், ஆங்கிலச் சொற்பொழிவு இவையெல்லாம்… அவரையே திருமணம் செய்து கொள்ளும் அளவுக்கு சௌந்தரத்துக்கு ஈர்ப்பை ஏற்படுத்தின. பெற்றோர் உள்பட பலரும் எதிர்த்தனர். அதை மீறி, 1940-ம் ஆண்டில், ராட்டையில் நூற்ற நூலில் மாங்கல்ய நாண் தயாரித்து, மஞ்சள் தடவிக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார் காந்தி அடிகள். இந்த விதவை ப்ளஸ் கலப்புத் திருமணம்… அக்காலத்தில் படுபரபரப்பாக பேசப்பட, பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக வலம் வந்தார் சௌந்தரம்.

சௌந்தரத்தின் சிறப்பான சேவைகளைப் பாராட்டியதோடு, கிராமப்புறங்களில் இன்னும் அதிக அளவிலான சேவைகள் நடைபெறவேண்டும் என்று ஆலோசனைகளை வழங்கினார் காந்தி. இதையடுத்து, 1947-ம் ஆண்டில் திண்டுக்கல் அருகே ‘காந்தி கிராமம்’ தொடங்கப்பட்டு, பள்ளி, கல்லூரி, மாணவ மாணவியர் விடுதி, விவசாயம், நெசவு, சுகாதாரம், கட்டடவேலை, பயிற்சி முகாம், ஆராய்ச்சி மையம், வேலை வாய்ப்பு என அனைத்து உதவிகளும் மக்களுக்குக் கிடைக்கச் செய்தார் சௌந்தரம்.

1952இல் சுதந்திர இந்தியாவில் நடந்த முதல் பொதுத் தேர்தலில் இவர் சட்டசபைக்குத் தேர்ந் தெடுக்கப் பட்டார். அப்போது சட்டசபைக்குள் நுழைந்த முதல் பெண்மணி என புகழ் பெற்றார். வினோபா பாவே தமிழகம் விஜயம் செய்தபோது டாக்டர் செளந்தரம் அவர்களுடன் பயணம் செய்து அவரது பூதான இயக்கத்தில் பங்கு கொண்டார். 1956இல் பிரதமர் ஜவஹர்லால் மற்றும் திருமதி இந்திரா காந்தியுடன் இவர் சீனாவிற்கு விஜயம் செய்தார். கிராமப் பொருளாதாரம், கிராம சுகாதாரம் ஆகியவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்டு பணியாற்றினார்.

1957ஆம் ஆண்டு தேர்தலில் மிகவும் பிந்தங்கிய வேடசந்தூர் தொகுதியில் நின்று சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்தத் தொகுதிக்கு கல்வி, சுகாதாரம், சாலை வசதிகள், மின்சாரம் இவற்றைக் கொண்டு வந்து பெருமை சேர்த்தார். இந்தியாவிலுள்ள நான்கு காந்தி மியூசியங்களில் மதுரை மியூசியத்தை டாக்டர் பி.என்.ராமசுப்பிரமணியத்துடன் சேர்ந்து உருவாக்கினார். 1960இல் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் துணைத் தலைவர் ஆனார். 1962ஆம் ஆண்டு தேர்தலில் திண்டுக்கல் தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு ஐந்தாண்டுகள் கல்வி மற்றும் சமூக நலத்துறை அமைச்சராகப் பணியாற்றினார். குழந்தைகள் கல்வி, சமூக நலம் ஆகியவற்றில் இவர் அதிக கவனம் செலுத்தினார்.

1974 இல் காந்தி கிராமத்தின் இயக்குனராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கிழக்கு இராமநாதபுரம் மாவட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தின் போது இவர் கிராமம் கிராமமாகச் சென்று மக்களிடையே ஒற்றுமையும் அமைதியும் ஏற்பட பாடுபட்டார். தான் ஒரு செல்வந்தர் வீட்டுப் பெண் என்ற நினைப்பே இல்லாமல், எப்போதும் ஏழை எளிய மக்களின் வாழ்க்கை, சுகாதாரம், பொருளாதார வளர்ச்சி இவற்றுக்காகவே இறுதி வரை பாடுபட்டார்.

இன்றைக்கு, ‘காந்திகிராம் கிராமிய பல்கலைக் கழகம்’ என விருட்சமாகத் தழைத்தோங்கி நிற்கிறது அந்த நிறுவனம். தொண்டு செய்தே வாழ்ந்து வந்த நல்லுள்ளம், 1984-ம் ஆண்டு மறைந்து போனது. அவருடைய கண்கள், தானமாக அளிக்கப்பட்டு, இன்னொருவருக்கு பார்வையைத் தந்தன.

மருத்துவத்தை சேவையாகக் கருதி தொண்டாற்றிய சௌந்தரம், சென்னை மாகாண சட்டசபை உறுப்பினர், மத்திய துணைக் கல்வி அமைச்சர் போன்ற பதவிகளையும் வகித்தார். குழந்தைகள் மற்றும் பெண்கள் முன்னேற்றத்துக் காக இவர் செய்த சேவைகளைப் பாராட்டி, 1962-ம் ஆண்டு ‘பத்ம பூஷண்’ என்ற உயரிய விருதைக் கொடுத்துக் கௌரவித்தது இந்திய அரசு.

error: Content is protected !!