ராகுல் காந்தி எம்.பி.யாக செயல்பட தடை போட்ட தண்டனை நிறுத்தி வைப்பு – சுப்ரீம் கோர்ட் அதிரடி.

ராகுல் காந்தி எம்.பி.யாக செயல்பட  தடை போட்ட  தண்டனை  நிறுத்தி வைப்பு – சுப்ரீம் கோர்ட் அதிரடி.

வதூறு வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தண்டனையை சுப்ரீம் கோர்ட் அதிரடியாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. அதிகபட்சமாக 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பதற்கான காரணத்தை விசாரணை நீதிமன்றம் தெரிவிக்கவில்லை என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. தனக்கு எதிரான அவதூறு வழக்கில் புகார்தாரரான பூர்ணேஷ் மோடியின் அசல் குடும்பப்பெயர் மோடி அல்ல என்றும் அவர் (பூர்ணேஷ்) மோத் வனிகா சமாஜைச் சேர்ந்தவர் என்றும் சுப்ரீம் கோர்ட்டில் காந்தி வாதிட்டதை தொடர்ந்து இந்த உத்தரவு வந்துள்ளது.

ராகுல்காந்திக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் குஜராத் சூரத் கீழமை நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இந்த சிறைத்தண்டனையை எதிர்த்து ராகுல்காந்தி, சூரத் நீதிமன்றம் மற்றும் குஜராத் உயர் நீதிமன்றம் ஆகியவற்றில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து, ராகுல்காந்தி தரப்பு சூரத் கீழமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று இந்த வழக்கின் மீதான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதில், ராகுல்காந்திக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனை தீர்ப்பை நிறுத்தி வைப்பதாக உத்தரவிட்டது. மேலும், சூரத் நீதிமன்றம் ஏதன் அடிப்படையில் மக்கள் பிரதிநி மீது அவதூறு வழக்கில் அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்டது என விளக்கம் கேட்டும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த காரணத்தாலே வயநாடு தொகுதி எம்பி பதவியில் இருந்து அவரை தகுதிநீக்கம் செய்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டு இருந்தார்.

இந்நிலையில் அவதூறு வழக்கில் காங்கிரஸ் தலைவரின் தண்டனையை உறுதி செய்த குஜராத் ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்த ராகுலின் மனுவை நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.எஸ்.நரசிம்ஹா மற்றும் சஞ்சய் குமார் அடங்கிய சுப்ரீம் கோர்ட் அமர்வு விசாரித்தது. “முதலில், பூர்ணேஷ் மோடியின் (புகார்தாரர்) அசல் குடும்பப்பெயர் மோடி அல்ல… அவர் தனது குடும்பப்பெயரை மாற்றிக்கொண்டார்… காந்தி தனது உரையின் போது குறிப்பிட்ட நபர்களில் ஒருவர் கூட வழக்குத் தொடரவில்லை. பாரதிய ஜனதா அலுவலகத்தில் இருந்தவர்களே வழக்கு தொடுத்துள்ளனர்” என காந்தியின் வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதாடினார்.

சிங்வி மேலும், “நீதிபதி இதனை தார்மிக ஒழுக்கக் கேடான ஒரு கடுங்குற்றமாக பார்க்கிறார். இது ஒரு பிணையில் வரக்கூடிய குற்றமாகும். இந்தக் குற்றம் சமூகத்துக்கு எதிரானதோ, கடத்தலோ, பாலியல் வன்கொடுமையோ, கொலைக் குற்றமோ இல்லை. அப்படியிருக்கையில், இது எப்படி தார்மிக ஒழுக்கக் கேடான குற்றாமாகும்? ஜனநாயகத்தில் நமக்குள் கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஜனநாயகத்தில் நமக்குள் மாற்றுக் கருத்துக்கள் உள்ளன. ராகுல் காந்தி ஒன்றும் கொடுங்குற்றவாளி கிடையாது. பாஜக தொண்டர்களால் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், எதற்கும் தீர்ப்பு வழங்கப்படவில்லை. ராகுல் காந்தி ஏற்கெனவே இரண்டு நாடாளுமன்ற அமர்வுக்கு செல்ல முடியவில்லை” என்று வாதிட்டார்.

இதற்கு பதில் அளித்த புர்னேஷ் மோடி சார்பில் ஆஜரான மகேஷ் ஜெத்மலானி, “அந்த மொத்தப் பேச்சும் 50 நிமிடங்கள் நீடித்தன. தேர்தல் ஆணையத்தின் ஆவணங்களில் அதற்கான ஆதாரங்களும் வீடியோ பதிவுகளும் இணைக்கப்பட்டுள்ளன. ராகுல் காந்தி ஒட்டுமொத்த சமூகத்தையும் இழிவுபடுத்தியுள்ளார்” என்றும் வாதிட்டார்.

இந்த வாதங்களை அடுத்து உச்ச நீதிமன்றம், ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இன்று வழங்கப்பட்ட உத்தரவில், “இந்திய தண்டனை சட்டம் பிரிவு 499இன் கீழ் அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் வழங்கலாம். கற்றறிந்த விசாரணை நீதிபதி, அதிகபட்ச தண்டனையான இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையை வழங்கியுள்ளார். இந்த அவதூறு வழக்கின் விசாரணையின் போது மனுதாரருக்கு (ராகுல் காந்தி) அறிவுரை வழங்கியதை தவிர, கற்றறிந்த நீதிபதியால் வேறு எந்த காரணமும் வழங்கப்படவில்லை. அதிகபட்ச தண்டனையான இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டதால்தான் மக்கள் பிரிதிநிதித்துவ சட்டப் பிரிவு 8(3) கீழ் நாடாளுமன்ற உறுப்பினராக ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஒரு நாள் குறைவாக தண்டனை வழங்கியிருந்தாலும் இந்த சட்ட பிரிவு பொருந்தி இருக்காது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.ஆர். கவாய், பி.எஸ். நரசிம்மா, சஞ்சய் குமார் ஆகியோர் கொண்ட அமர்வு, தண்டனைக்கு இடைக்கால தடை விதித்துள்ளனர். இந்த தீர்ப்பை வரவேற்று எதிர்க்கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்திருப்பது குறித்து கருத்து தெரிவித்த ராகுல் காந்தி, “என்ன நடந்தாலும் கடமை தவற மாட்டேன். இந்தியாவின் கருத்தாக்கத்தை பாதுகாப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

நிலவளம் ரெங்கராஜன்

error: Content is protected !!