ஜோதிகா நடிக்கும் ‘காற்றின் மொழி’ படத்தில் சிம்பு!

ஜோதிகா நடிப்பில் ராதாமோகன் இயக்கி வெளியான படம் ‘மொழி’. 2007-ம் ஆண்டு ரிலீஸான இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘காற்றின் மொழி’ என்ற பாடல் வரியைத் தலைப்பாகக் கொண்டு ஒரு படத்தை இயக்கி வருகிறார் ராதாமோகன்.
வட மாநிலங்களில் வெற்றிகரமாக ஓடிய ‘துமாரி சுலு’என்ற இந்தி படத்தை தழுவிய கதை, இது. இந்தி படத்தில், வித்யாபாலன் கதாநாயகியாக நடித்து இருந்தார். அவருக்கு ஜோடியாக மானவ் கவுல் என்ற இளம் கதாநாயகன் நடித்து இருந்தார். இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில், நேகா நடித்திருந்தார். இந்த மூன்று பேரை சுற்றி கதை பின்னப்பட்டு இருந்தது.
ஒரு ரேடியோ ஸ்டேஷனில் ஆர்.ஜே.வாக பணிபுரியும் வித்யாபாலன் வாழ்க்கையில் நடைபெறும் சுவாரஸ்யமான சம்பவங்களே திரைக்கதையாக அமைந்திருந்தது. அவருடைய கணவராக மானவ் கவுல் நடித்திருந்தார். இந்த படத்தில் நடித்ததற்காக வித்யாபாலனுக்கு பல விருதுகள் கிடைத்தன. அவர் நடித்த கதாபாத்திரத்தில், தமிழ் படத்தில் ஜோதிகா நடிக்கிறார். அவருடைய கணவராக விதார்த் நடிக்கிறார். நேகா நடித்த வேடத்தில், லட்சுமி மஞ்சு நடிக்கிறார். இவர், தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகள் ஆவார்.
பாஃப்டா மீடியா ஒர்க்ஸ் சார்பில் தனஞ்ஜெயன் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங், கடந்த மாதம் 4-ம் தேதி பூஜையுடன் தொடங்கியது. 50 நாட்கள் ஒரே ஷெட்யூலில் படமாக்கத் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்தப் படத்தில் சிம்பு சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். நடிகராகவே அவர் நடித்துள்ளார் என்பது சிறப்பு. ரேடியோ ஜாக்கியான சிம்புவிடம், ஜோதிகா கேள்வி இன்டர்வியூ செய்வது போன்ற காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது. ‘சரவணா’ படத்துக்குப் பிறகு சிம்பு – ஜோதிகா நடிக்கும் படம் இது.