3D பயோ பிரிண்டர் மூலம் (செயற்கை) தோல் உருவாக்கியாச்சு!

3D பயோ பிரிண்டர் மூலம் (செயற்கை) தோல் உருவாக்கியாச்சு!

மனித உடலின் ஒவ்வொரு உறுப்பும் மிகவும் இன்றியமையாததாகும். அவற்றில் ஏதேனும் ஒன்றில் பாதிப்பு ஏற்பட்டாலும் உடல் முழுமையாக பாதிப்படையும். இத்தகைய உறுப்புகளில் தோல் அதாவது சருமமும் ஒன்று. மனித உடலின் மிகப் பெரிய உறுப்பும் தோல்தான். அத்தகைய தோல் உடலின் உள்ளே உள்ள தசைகள், எலும்பு, இதயம், நுரையீரல் போன்ற அனைத்து உறுப்புகளையும் பாதுகாக்கிறது. உடலுக்குள் எந்தவிதமான அன்னியப் பொருட்களும் உட்புகாதபடி பாதுகாக்கிறது. புறச் சூழ்நிலைக்கேற்ப உடலின் வெப்பநிலையை சீராக்குகிறது. சருமம்தான் ஒருவனுக்கு புற அழகைக் கொடுக்கிறது. ஆனால் ஒவ்வொருவரின் நிறத்தையும் வெளிக்காட்டுவதோடு நம் சருமத்தின் வேலை முடிவதில்லை. சூரிய ஒளியில் இருந்து வைட்டமின் டி-யைத் தயாரிப்பது, வெளியில் இருந்து வரும் கிருமிகளை அண்டவிடாமல் அரண்போல் காப்பது, குளிர் காலத்தில் உடலைச் சூடாகவும், கோடைக் காலங்களில் குளிர்ச்சியாகவும் வைத்துக்கொள்வது எனப் பற்பல பணிகளை மேற்கொள்கிறது.

skin jan 26

இந்நிலையில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் வித்தியாசமான 3D பயோபிரின்டர் சாதனம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் மனித உடலில் கச்சிதமாக பொருந்தி இயங்கக் கூடிய ‘செயற்கை தோலை’ உருவாக்க முடியும். இந்த செயற்கை தோல் கொண்டு ஆராய்ச்சி பணிகளை தவிர்த்து ஒப்பனை மற்றும் இரசாயனம் சார்ந்த பொருட்களை சோதிக்கவும், மனித உடலில் பொருத்தி கொள்ளவும் முடியும்.

ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கும் புதிய பயோபிரின்டர் மூலம் உருவாக்கப்படும் தோல் மனித உடலில் ஏற்கனவே இருக்கும் தோல் பகுதியின் மேல்புறமாக பொருத்தப்படும், இது உள்ளிருக்கும் தோல் பகுதியை வெளிப்புற சூழ்நிலைகளில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.

இந்த செயற்கை தோலினை நோயாளிகள் மீது பயன்படுத்த முடியும் என்பதோடு வியாபார ரீதியாக இரசாயன பொருட்களை சோதனை செய்யவும் பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ள புதிய செயற்கை தோல் இரு விதங்களில் உருவாக்கப்படுகின்றது.

முதல் விதமாக அல்லோஜெனிக் தோல் உருவாக்கப்படுகின்றது. இது தொழில்துறை பயன்பாடுகளுக்காக அதிகளவில் உருவாக்கப்படுகின்றது. இரண்டாவது விதமாக ஆட்டோலோகஸ் தோல் மனிதர்களின் உடலில் ஏற்பட்ட தோல் சார்ந்த காயங்களை குணப்படுத்தி இந்த புதிய தோலினை குறிப்பிட்ட பாகத்தில் பொருத்த முடியும்.

தற்சமயம் ஆராய்ச்சியாளர்கள் மனித உடலில் இருக்கும் திசுக்கள் மற்றும் உயிரணுக்களை கொண்டு உயிரியக்க தோல் வகைகளை உருவாக்கி வருகின்றனர். இது மற்ற முறைகளில் பயன்படுத்தக் கூடிய விலங்கு கொலாஜென்களை பயன்படுத்துவதை தவிர்க்கிறது. மனித தோல்களை அச்சடிக்கும் வழிமுறைக்கான ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்திருக்கும் புதிய வழிமுறைகள் குறைந்த செலவில் செய்யக் கூடியது என்றும் இவற்றை வணிகம் செய்யும் உரிமைக்கான பேச்சுவார்த்தைகள் பல்வேறு நிறுவனங்களுடன் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!