68 வருஷம் ஆச்சு.. ஆனாலும் குறையுண்டு – ஜனாதிபதியின் குடியரசு தின உரை

68 வருஷம் ஆச்சு.. ஆனாலும் குறையுண்டு – ஜனாதிபதியின் குடியரசு தின உரை

68-ஆவது குடியரசு தின விழாவையொட்டி, நாட்டு மக்களிடம் தொலைக்காட்சி வாயிலாக பிரணாப் முகர்ஜி புதன்கிழமை உரையாற்றினார். தேசத்தின் விடுதலைக்காகவும், வளர்ச்சிக்காகவும் முன்னோர்கள் செய்த தியாகத்தை நினைவுகூர்ந்த அவர், நாம் கடந்து வந்த இந்தப் பயணம், சம்பவங்கள் நிறைந்தது. சில சமயம் வேதனைகளும் சூழ்ந்தது. என்றாலும், பெரும்பாலான சமயங்களில் நமக்கு உற்சாகம் ஊட்டியுள்ளது. என்று தெரிவித்தார்.

p i i jan 26

இதுதொடர்பாக   ஜனாதிபதி பிரணாப் ஆற்றிய உரை இதுதான்:

அன்பார்ந்த குடிமக்களே, இந்த 68-வது குடியரசு தின நிகழ்ச்சியில் உங்களுக்கும், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் எனது அன்பான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.நமது பாதுகாப்புப் படை வீரர்களுக்கும், துணை இராணுவப் படை வீரர்களுக்கும் உள்நாட்டு பாதுகாப்புப் படைவீரர்களுக்கும் எனது பிரத்யேக வாழ்த்துகள். இந்தியாவின் எல்லை மற்றும் ஒருமைப்பாட்டை கட்டிக்காப்பதிலும், சட்டம்-ஒழுங்கை பேணுவதிலும் மகத்தான உயிர்த்தியாகம் செய்த நமது துணிவு மிக்க வீரர்களுக்கும், பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் அஞ்சலி செலுத்துகிறேன். 1947 ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்தியா சுதந்திரம் பெற்றபோது நம்மிடம் நமக்கென ஆளுகைக்கான சாதனம் எதுவும் இருக்கவில்லை. நமது மக்கள் அனைவரும் நீதி, விடுதலை, சமத்துவம், பாலினப்பாகுபாடின்மை, பொருளாதார சமத்துவம் பெறும் வகையில் 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள், இந்திய மக்கள் அரசியல் சாசனத்தை உருவாக்கி ஏற்றுக் கொள்ளும் வரை நாம் காத்திருந்தோம்.

சகோதரத்துவம், தனிநபர் கண்ணியம், நாட்டின் ஒற்றுமை-ஒருமைப்பாட்டை முன்னெடுத்துச் செல்வோம் என்று உறுதியளித்தோம். அன்றுதான் உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடாக நாம் உருவெடுத்தோம்.நமது மக்களின் நம்பிக்கையும், உறுதியும் நமது அரசியல் சாசனத்துக்கு உயிரூட்டியது. ஏராளமான பிராந்திய ஏற்றத்தாழ்வுகளையும், அடிப்படை வசதிகளைக் கூட பெற்றிராத மக்களையும் உள்ளடக்கி, நலிவுற்ற பொருளாதாரமாக இருந்த நமது நாட்டை, தங்களின் அறிவாற்றலாலும், பக்குவமான அணுகுமுறையாலும் துன்பங்களில் இருந்து விடுவித்த பெருமை நமது நாட்டை நிர்மாணித்த தலைவர்களைச் சாரும்.

பன்முகத்தன்மையும், வேற்றுமையில் ஒற்றுமை பாராட்டும் தன்மையுமே இந்தியாவின் வலிமைகளில் பிரதானமானவை. இந்தப் பண்பு தேசத்தின் கலாசாரத்தோடு இரண்டறக் கலந்த அம்சமாகும். பல்வேறு வகையான சித்தாந்தங்களும், கருத்துகளும், எண்ண ஓட்டங்களும் வியாபித்துள்ள போதிலும், அமைதியான வழியில் அவற்றைப் பரிமாறிக் கொள்ளும் பெருமைமிகு நாடாக இந்தியா விளங்குகிறது.இத்தகைய ஜனநாயக மாண்பு பல நூறு ஆண்டுகளாக இங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருவது கூடுதல் சிறப்பு. சுதந்திர இந்தியாவில் பிறந்த கடந்த மூன்று தலைமுறை இளைஞர்கள், பல்வேறு வாய்ப்புகளையும், உரிமைகளையும் பெற்றுள்ளனர். கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்து உரிமைகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அவற்றைத் தாண்டி சிறகுகளை விரித்து சாதனை படைப்பதற்கான வாய்ப்புகளும் இளையோருக்கு உருவாக்கித் தரப்பட்டுள்ளது. இத்தனை வசதிகள் தற்போது இருக்கின்றன; அதேவேளையில், அவற்றை நாம் அனுபவிக்க காரணமாக இருந்த விடுதலை போராட்ட வீரர்களையும், தலைவர்களையும் மறக்கக் கூடாது. அவர்களது விலைமதிப்பற்ற தியாகம்தான் தற்போது நாம் சுதந்திரக் காற்றை சுவாசிப்பதற்கான மூலகாரணம்.

ஜனநாயக தேசமான இந்தியாவுக்கு பிறரை மதித்துப் போற்றும் மாண்பும், பொறுமையும், சகிப்புத்தன்மையுமே தற்போது மிகவும் தேவைப்படுகிறது. இந்தப் பண்புகள் ஒவ்வோர் இந்தியனின் இதயத்திலும் குடிகொண்டிருக்க வேண்டியவை. சமூகப் பொறுப்புணர்வும், புரிந்துணர்வும் ஒருசேரக் கொண்டு இந்தியர்கள் செயலாற்ற வேண்டும்.பல சவால்கள் நம் முன்னே இன்னமும் நீடித்து வருகின்றன. உணவுப் பாதுகாப்பு, வேலைவாய்ப்பில் தன்னிறைவு, வறுமை ஒழிப்பு, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை உறுதிசெய்ய வேண்டிய அவசியம் நமக்கு உள்ளது. அதேபோன்று தேசத்தையே அச்சுறுத்தும் பயங்கரவாதத்தை வேரறுக்க வேண்டிய முக்கியக் கடமையும் நம் முன்னே இருக்கிறது.

தற்போது நாட்டின் ஜனநாயகம் கூச்சல், குழப்பம் மிகுந்ததாக உள்ளது (நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஏற்படுத்தும் அமளியை மறைமுகமாகக் குறிப்பிடுகிறார்). மாண்பு நிறைந்த நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற வேண்டும். மக்கள் நலன் சார்ந்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். அதனைக் கருத்தில்கொண்டு எம்.பி.க்கள் செயல்படுவது அவசியம். நாடாளுமன்றத்தின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை வலுப்படுத்த வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு உள்ளது.
சுதந்திரத்துக்கு பிறகு சில ஆண்டுகளாக மக்களவைக்கும், மாநில சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில்தான் தேர்தல்கள் நடைபெற்றன. அதே நடைமுறையைத் தற்போது அமலாக்க தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும். இதுதொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளுடனும் தேர்தல் ஆணையம் கலந்தோலோசிக்க வேண்டும்.

உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு வாபஸ் பெற்றதால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி சற்று பாதிக்கப்பட்டது உண்மைதான். ஆனால், இது தாற்காலிகமான சுணக்கம்தான். அதேவேளையில், பணமதிப்பிழப்பின் தொடர் நடவடிக்கையாக மின்னணு பரிவர்த்தனைகள் அதிக அளவில் நடைபெறுவது ஊழலை வேரறுக்க வழிவகுக்கும். நாட்டின் நிதிசார்ந்த நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க துணைநிற்கும் .

இதனிடையே நமது குடியரசு 68-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்த போதிலும், நாம் கொண்டுள்ள தற்போதைய முறைமை நேர்த்தியானது என்று கூறமுடியாது. இந்த குறைபாட்டை கண்டறிந்து நிவர்த்தி செய்ய வேண்டும். நாம் மெத்தனம் காரணமாக விடுபட்டவற்றையும் பரிசீலிக்க வேண்டும். நமது நம்பிக்கை மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும். சுதந்திரம் பெற்றதும் மக்களவைக்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடந்தது போன்று மீண்டும் நடத்தலாமா என்ற தேர்தல் சீர்திருத்தம் குறித்து ஆக்க பூர்வமான விவாதம் நடத்த இது தக்க தருணம். இது குறித்து அரசியல் கட்சிகளுடன் கலந்து முடிவெடுக்க வேண்டியது தேர்தல் ஆணையம்தான்”என்றார் பிரணாப் முகர்ஜி.

Related Posts

error: Content is protected !!