இந்தியப் விண்வெளித் வரலாற்றில் புதியதொரு பொன்னேடு எழுதப்பட்டுள்ளது. தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் தயாரித்த ‘விக்ரம்-1’ (Vikram-1) ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு புவி சுற்றுவட்டப்பாதையை அடைந்துள்ளது. இந்தியாவின் முதல் தனியார் ஆர்பிட்டல் ஏவுதலான (Private Orbital Launch) இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி, நாட்டின் விண்வெளித் தொழில்நுட்பத்தின் முக்கிய மையமாக ஹைதராபாத் நகரம் உருவெடுத்துள்ளதை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
செயற்கைக்கோள் அமைப்புகள், உந்துவிசை (Propulsion) தொழில்நுட்பம், சுற்றுவட்டப்பாதை ரோபாட்டிக்ஸ் மற்றும் மறுபயன்பாட்டு ஏவூர்திகள் (Reusable Launch Vehicles) என விண்வெளித் துறையின் அனைத்துப் பிரிவுகளிலும் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களும், ஆராய்ச்சி நிறுவனங்களும் நிகழ்த்தி வரும் சாதனைகள் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளன.
‘மிஷன் ஆகமன்’ மற்றும் விண்வெளிக் கழிவு மேலாண்மை
விக்ரம்-1 ராக்கெட்டின் ‘மிஷன் ஆகமன்’ (Mission Aagaman) திட்டத்தில் பல முன்னோடித் தொழில்நுட்பங்கள் வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டன. குறிப்பாக, காஸ்மோசெர்வ் ஸ்பேஸ் (Cosmoserve Space) நிறுவனத்தின் ‘எம்பிரேஸ்’ (Embrace) பேலோட் இதில் முக்கியப் பங்கு வகித்தது.

எதிர்காலத்தில் விண்வெளிக் கழிவுகளைப் பாதுகாப்பாக அகற்றுவதற்காக (Space Debris Removal), மென்மையான ரோபோடிக் பிடிப்பு முறையை (Soft Robotic Capture System) பரிசோதிக்கும் நோக்கில் இந்த பேலோட் விண்ணிற்கு அனுப்பப்பட்டு தனது திறனை நிரூபித்துள்ளது.
இதேபோல, ஸ்பான்ட்ரிக் (Spantrik), ஸ்டார்டோர் (Stardour), சன்யார்க் ஸ்பேஸ் (Sanyark Space), நிபியா டிவைசஸ் (Nibiaa Devices), ஒன்னெஸ் (Onnes) மற்றும் ரிசர்ச்சாட் (ResearcSat) ஆகிய ஹைதராபாத் சார்ந்த முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள், விண்வெளிச் சோதனைகள், சர்வதேச கூட்டாண்மைகள் மற்றும் விரிவான ஆராய்ச்சிகள் மூலம் அடுத்த கட்ட விண்வெளிப் பயணங்களுக்குத் தயாராகி வருகின்றன.
T-Hub மற்றும் 105 ஸ்பேஸ்-டெக் ஸ்டார்ட்அப்கள்
ஹைதராபாத்தின் இந்தத் தொழில்நுட்பப் புரட்சிக்கு அம்மாநிலத்தின் முன்னணி தொழில்முனைவோர் மையமான T-Hub முக்கியத் தூணாகச் செயல்பட்டு வருகிறது. T-Hub வளாகத்தில் மட்டும் தற்போது 105 தீவிர விண்வெளி-தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் (Space-Tech Startups) நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
மேலும், இதன்கீழ் இயங்கும் ‘ஆர்பிட்’ (ORBIT) முடுக்கித் திட்டம் (Accelerator Program) இதுவரை 3 தவணைகளில் (Cohorts) 36 புதுமை முயற்சிகளுக்குத் தேவையான நிதியுதவி, வழிகாட்டுதல் மற்றும் தொழில்நுட்பக் கட்டமைப்புகளை வழங்கி ஆதரவளித்துள்ளது.
“ஹைதராபாத்தின் விண்வெளிச் சூழலியல் (Ecosystem) இப்போது ஒன்றிணைந்து, உலகளாவிய விண்வெளிச் சந்தைக்குத் தேவையான ஒரு முழுமையான தொழில்நுட்பத் தொகுப்பை (Complete Package) வழங்கும் நிலையை எட்டியுள்ளது” என ரெட் பலூன் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான கிரண் சி. தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத் விண்வெளிச் சூழலியல்: துறைவாரியான பங்களிப்பு
சர்வதேச அளவில் தடம் பதித்து வரும் ஹைதராபாத் விண்வெளித் துறையின் தற்போதைய தொழில் கட்டமைப்பு குறித்து IIIT-ஹைதராபாத் (IIIT-H) வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கை, இதன் பன்முகத்தன்மையை விரிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது:
-
ஏரோஸ்பேஸ் நிறுவனங்கள் (Aerospace): 37.8%
-
உந்துவிசை தொழில்நுட்பம் (Propulsion): 27%
-
செயற்கைக்கோள் தயாரிப்பு (Satellite Ventures): 21.6%
-
புவிசார் தகவல் அமைப்பு (Geospatial): 8.1%
-
கல்வி மற்றும் ஆராய்ச்சி குழுக்கள் (Academic Research): 5.4%
ஏவுகணை தயாரிப்பு முதல் செயற்கைக்கோள் தரவு பகுப்பாய்வு வரை விண்வெளித் தொழில்நுட்பத்தின் அனைத்துப் பிரிவுகளும் ஒரே நகரத்தில் செழித்து வளர்ந்திருப்பது, ஹைதராபாத்தை இந்தியாவின் ‘ஸ்பேஸ் கேப்பிட்டல்’ (Space Capital of India) என அழைப்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது.

