32°C

‘ஜி.டி.என்.’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு கோலாகலம்! மாதவன், சத்யராஜ் நெகிழ்ச்சி!

admin Published: August 5, 2026 2 நிமிட வாசிப்பு Running News
எழுத்து:

புரட்சிகர தொழிலதிபர், கண்டுபிடிப்பாளர் மற்றும் கொடையாளர் ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவான ‘ஜிடிஎன்’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நேற்று சென்னையில் நடைபெற்றது.

டிரைகலர் பிலிம்ஸ் உடன் இணைந்து வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இத்திரைப்படத்தில், ஜி.டி. நாயுடுவின் கதாபாத்திரத்தில் மாதவன் நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், துஷாரா விஜயன், அதிதி பாலன், விஜய் யேசுதாஸ், அரவிந்த், மோகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கியுள்ள இப்படம் ஆகஸ்ட் 7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

ப்ரீ ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகர் மாதவன், “குரு, ராக்கெட்டரி போன்ற படங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு உண்மை கதாபாத்திரத்தில் நடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஜி.டி. நாயுடுவின் குடும்பத்தினர் எங்களுக்கு அளித்த வாய்ப்பிற்கு நன்றி. இப்படத்தின் மூலம் ஜி.டி. நாயுடுவின் சாதனைகளை உலகம் முழுவதும் கொண்டு சேர்ப்பது எங்களின் பொறுப்பு” என்றார்.

மேலும் பேசிய மாதவன், “நான் இன்ஜினியரிங் படிக்கவில்லை, ஆனால் அதன் மீது அதிக ஆர்வம் இருந்தது. ஜி.டி. நாயுடுவைப் பற்றி இப்படத்திற்கு முன் எனக்குத் தெரியாது. அதுவே ஒரு குற்ற உணர்ச்சியாக இருந்தது. அவரைப் பற்றி மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற போராட்டம் இப்படத்தில் முக்கியமாகப் பேசப்பட்டுள்ளது. இன்றைக்கு நடக்கும் பல விஷயங்களை அன்றே அவர் செய்துள்ளார்” என்றார்.

நடிகர் சத்யராஜ் பேசுகையில், “நான் கோயம்புத்தூரில் பிறந்தாலும், ஜி.டி. நாயுடு மியூசியத்தை இத்தனை நாட்களாகப் பார்க்கவில்லையே என்ற குற்ற உணர்வு இப்படத்தில் நடிக்கும்போது எழுந்தது. இப்படத்தின் கதை ஒரு கமர்ஷியல் படத்திற்குத் தேவையான விஷயங்களை விடவும் அதிகமாக உள்ளது. உலகம் முழுவதும் இப்படம் சாதனை படைக்கும் என நம்புகிறேன்” என்றார்.

இயக்குநர் கிருஷ்ணகுமார் ராமகுமார், ஜி.டி. நாயுடு பற்றிய புத்தகம் படித்தபோது, அவரது சாதனைகள் தன்னை மிகவும் கவர்ந்ததாகக் கூறினார். சமானிய மனிதனுக்கும் பயன்பட வேண்டும் என்பதுதான் அவரது கண்டுபிடிப்பின் நோக்கமாக இருந்தது. இப்படத்தை எடுக்க தயாரிப்பாளர்கள் மிகப்பெரிய பலமாக இருந்தனர் என்றார்.

நிகழ்வில் கலந்து கொண்ட பிற நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களும் படம் குறித்து தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். ‘ஜிடிஎன்’ திரைப்படம் ஆகஸ்ட் 7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.