கர்ப்பிணிகள் சுக பிரசவத்திற்காக அம்மி, உரல் பயன்பாட்டின் விழிப்புணர்வு- வீடியோ!

கர்ப்பிணிகள் சுக பிரசவத்திற்காக அம்மி, உரல் பயன்பாட்டின் விழிப்புணர்வு- வீடியோ!

குழந்தை பெற்றெடுக்கும் பிரசவம் என்பதே  செத்துப் பிழைக்கிற சம்பவம்தான். அப்படி யிருக்கை யில் அதென்ன சுகப்பிரசவம் என்று கேட்போருமுண்டு. .தானாக வலியெடுத்து, பெரிய மருத்துவ உதவிகள் எதுவும் இல்லாமல், பத்து மாதக் கர்ப்பம் முடிவுக்கு வந்து, கர்ப்பப்பை வாய் திறந்து, குழந்தை  வெளியில் வருவதையே சுகப்பிரசவம் என்கிறோம். இதில் மருத்துவர் மற்றும் செவிலியரின் உதவியே தேவையிருக்காது. சுகப்பிரசவத்தில் குழந்தை பிறந்ததாக யாரேனும் சொன்னால் அவர்களை விசித்திரமாகப் பார்க்கிற காலம் இது. தேவையோ, இல்லையோ,  பெரும் பாலான பிரசவங்கள் சிசேரியனாகத்தான் இருக்கின்றன. மருத்துவர்கள் மக்களையும் மக்கள் மருத்துவர்களையும் மாறி மாறி காரணம்  காட்டுகிறார்கள். இன்னொரு பக்கம் ஐஸ்வர்யா ராய் போன்ற பிரபல பெண்களே சுகப்பிரசவத்தை விரும்பி, அதற்காக மெனக்கெட்டு, முயற்சியில்  வெற்றியும் பெறுகிறார்கள்.

இப்படியான சூழலில் சுகப் பிரசவத்தை ஊக்குவிக்கும் வகையில் கர்ப்பிணிகள் அம்மி, உரலைப் பயன்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்வு சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. “புளூம்’  கருத்தரித்தல் மையத்தின் சார்பில் அன்னையர் தினத்தையொட்டி நடைபெற்ற இந் நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் பங்கேற்றனர். பாரம்பரிய பிரசவ முறைகளை மீட்டெடுக்கும் முயற்சியாக இத்தகைய நடவடிக்கைகளில் நாங்கள் ஈடுபட்டிருக்கிறோம் என நிகழ்ச்சி ஏற் பாட்டாளர்கள் தெரிவித்தனர். பல கர்ப்பிணிகளுக்கு நடனப் பயிற்சியும் அளிக்கப்பட்டது. குறிப்பிட்ட சில உடற் பயிற்சிகளை நடன அசைவுகள் மூலமாக கற்பிக்கும் வகையில் அது அமைந்திருந்தது.

இதுகுறித்து “புளூம்’ கருத்தரித்தல் மையத்தின் தலைமை மருத்துவர் கவிதா கெளதம் விளக்கம் அளித்த போது, “முன்பெல்லாம் இந்தியாவில் அதிக அளவில் சுகப் பிரசவங்கள் நடைபெற்று வந்தன. ஆனால், தற்போது வாழ்க்கை முறை மாற்றம், சரியான உடற்பயிற்சிகள் இல்லாமை உள்ளிட்ட காரணங்களால் அறுவை சிகிச்சை பிரசவங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.
மருத்துவமனைகள்தான் அதற்கு காரணம் என பரவலாகக் கூறப்பட்டாலும், கருத்தரிக்கும் பெண்களில் பெரும்பாலானோர் சுகப் பிரசவத்துக்கான முயற்சிகளை முன்னெடுப்பதில்லை என்பதுதான் உண்மை.

கடந்த காலங்களில் கர்ப்பிணிகள் வீட்டு வேலை செய்தார்கள்; எங்கு போவதாக இருந்தாலும் நடந்து சென்றார்கள். ஆனால், தற்போது ஒரு பெண் கருவுற்றாலே, அவரை எந்த வேலையும் செய்ய விடாமல், குனிய விடாமல், நிமிர விடாமல் பல கட்டுப்பாடுகளை குடும்பத்தினர் விதிக்கின்றனர். அதன் காரணமாகவே, சுகப் பிரசவத்துக்கான வாய்ப்புகள் அவர்களுக்கு குறைந்து விடுகின்றன. மீண்டும் பழையபடி அத்தகைய பிரசவங்கள் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில் நாங்கள் இதுபோன்ற விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் என்றார் அவர்.

error: Content is protected !!