அன்னா ஹசாரே உண்ணாவிரத போராட்டம் வாபஸ்!.

அன்னா ஹசாரே உண்ணாவிரத போராட்டம் வாபஸ்!.

லோக் ஆயுக்தா மற்றும் லோக் பால் அமைக்க வலியுறுத்தி கடந்த 7 நாட்களாக போராட்டி வந்த  சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே செவ்வாய்க்கிழமை இரவு தன் உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்தார். மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் இரண்டு மத்திய அமைச்சர்களுடனான சந்திப்புக்கு பின் தன் போராட்டத்தை வாபஸ் பெற்றார்.

ஊழலுக்கு எதிரான லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா அமைப்புகள் உடனடியாக அமைக்கப்பட வேண்டும். சுவாமிநாதன் கமிட்டி அறிக்கையில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் அமல்படுத்த வேண்டும். விவசாய கடன்கள் தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கடந்த ஜனவரி 30ம் தேதி தன் சொந்த ஊரான ராலேகன் சித்தியில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை துவங்கினார்.

இது அன்னா ஹசாரே மேற்கொள்ளும் மூன்றாவது உண்ணாவிரத போராட்டம் ஆகும்.

அன்னா ஹசாரேவின் போராட்டத்திற்கு நாடு முழுவதும் இருந்து ஆதரவு குவிந்தது. ராஜ் தாக்கரே, நீர்வள ஆர்வலர் ராஜேந்திர சிங் ஆகியோர் அன்னா ஹசாரேவை நேற்று நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

அப்போது ராஜ் தாக்கரே பயனில்லாத மத்திய அரசுக்காக உங்கள் உயிரை விடாதீர்கள் என்று அன்னா ஹசாரேவிடம் கோரினார். சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவும் அன்னா ஹசாரேவின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். உள்ளூர் கிராம மக்கள் அவரது போராட்டத்திற்கு ஆதரவாக இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தின் ஏழாவது நாளான இன்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், மத்திய அமைச்சர்கள் ராதா மோகன் சிங் மற்றும் சுபாஷ் பாம்ரே மற்றும் மாநில அமைச்சர் கிரிஷ் மஹாஜன் ஆகியோர் அன்னா ஹசாரேவை நேரில் சந்தித்து விரிவாக பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அன்னா ஹசாரேவின் அனைத்து கோரிக்கைகளையும் அரசு ஏற்றுக்கொண்டதாகவும் லோக்பால் அமைப்பதற்கான நடவடிக்கைகள் விரைவில் துவங்கும் என்றும் முதல்வர் பட்னாவிஸ் உறுதி அளித்தார்.

அதை தொடர்ந்து தன் உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அன்னா ஹசாரே அறிவித்தார்.

முதல்வர் பட்னாவிஸ் மற்றும் மத்திய அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தை திருப்தி அளித்ததால் எனது போராட்டத்தை கைவிட முடிவு செய்துள்ளேன் என்று அன்னா ஹசாரே செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Related Posts