கங்கை நதி கால்வாயில் கழிவுநீர் ; உ.பி.அரசுக்கு 25 லட்சம் அபராதம்!

வேதங்களிலும், புராணங்களிலும், ராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற இதிகாசங்களிலும் இடம் பெற்ற கங்கை நதி கால்வாயில் கழிவு நீர் கலப்பதை தடுக்காத உத்தரபிரதேச அரசு மீது தேசிய பசுமை தீர்ப்பாயம் இன்று ரூ. 25 லட்சம் அபராதம் விதித்தது.
கங்கை மிகவும் புனிதமான நதி. இது லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதரமாகவும் விளங்கு கிறது. உண்மையில், கங்கைச் சமவெளி உலகத்திலேயே அதிக மக்கள் வசிக்கும் சமவெளியாகும். துரதிர்ஷ்டவசமாக உலகிலேயே அதிக மாசுபடிந்த ஐந்து நதிகளில் ஒன்றாக கங்கையும் உள்ளது. ஆனால் உத்தரபிரதேசத்தின் நிவாரி நகர் பஞ்சாயத்து சட்டவிரோதமாக கழிவு நீர் குழாய் அமைத்து நீர்பாசனத்துறைக்கு சொந்தமான மேல் கங்கை கால்வாயில் கழிவு நீரை கலந்து வருவதாக அந்த பகுதியில் வசிக்கும் விவேக் தியாகி என்பவர் தேசிய பசுமை தீர்பாயத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் நிவாரி நகர் பஞ்சாயத்து சட்டவிரோதமாக அங்கிருக்கும் இரண்டு குளங்களில் கழிவு நீரை கொட்டி வருகிறது. இதனால் இரு குளங்கள் மட்டுமல்லாமல் நிலத்தடி நீரும் மாசடைந்துள்ளது. நிவாரி நகர் பஞ்சாயத்தில் சேமிக்கப்படும் குப்பைகளும் அங்கு கொட்டப்படுகின்றன. அதன் காரணமாக இந்த நீர்நிலைகள் அழியும் அபாயத்தில் உள்ளன.
இங்குள்ள கழிவுநீரை சுத்திகரிக்க எந்த வழியும் இல்லாததால் இந்த மாசடைந்த நீர் கங்கை நதி கால்வாய் மூலம் சென்று கங்கை நதி உள்ளிட்ட மற்ற நீர்நிலைகளையும் பாழாக்கி வருகிறது என்று விவேக் தியாகி தன் மனுவில் தெரிவித்துள்ளார். விவேக் தியாகியின் மனு இன்று தேசிய பசுமை தீர்பாயத்தின் தலைவர் நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் மேல் கங்கை கால்வாயில் இப்படி சட்டவிரோதமாக கழிவுநீர் கலக்கப்படுவதை தடுக்கவும் முறையான கழிவுநீர் சுத்திகரிப்புக்கான வசதிகளை செய்து தரவும் உத்தரபிரதேச அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என சாடினர்.
நிவாரி பஞ்சாயத்து தொகுதியில் கட்டப்பட்டு வரும் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை 6 மாதங்களில் முடிந்து விடும் என்று உத்தரபிரதேச அரசு அறிக்கை சமர்பித்ததையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
இறுதியில் கங்கை நதி கால்வாயில் கழிவுநீர் கலப்பதை தடுக்க தவறியதற்காக தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரபிரதேச அரசு மீது 25 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது.
இந்த விவகாரம் தொடர்பாக உயர்மட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை தலைமை செயலாளர் தாக்கல் செய்ய வேண்டும். சுத்தமான சுற்றுச்சூழல் என்பது ஒருவரின் அடிப்படை உரிமை. இந்த விவகாரத்தில் அக்கறை காட்டாத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.