June 7, 2023

சிக்னல், டெலிகிராம் யாருக்குச் சொந்தம்? ரமேஷ் கிருஷ்ணன் பாபு!

வாட்ஸ் அப்பின் புதிய விதிமுறைகளைக் காரணம் காட்டி பலபேர் இப்போது சிக்னல், டெலி கிராம் எனப் புதிய செய்திச் செயலிகளுக்கு கட்சி மாறிக் கொண்டிருக்கின்றனர். இதற்கு மூல காரணமாக இருந்தவர் டெஸ்லாவின் உரிமையாளரும், உலகின் நெ 1 பணக்காரருமான இலான் மஸ்க் ஆவார். வாட்ஸ் அப் தனது பயனர்களிடம் அவர்களது தரவுகள் வாட்ஸ் அப்பின் தாய் நிறுவனமான ஃபேஸ்புக்கிற்கு வழங்கப்படும் என்று தெரிவித்த உடன் பலருக்கு இதன் பொருள் புரியவில்லை.

ஃபேஸ்புக்கைப் பயன்படுத்தும் பயனர்கள் பலர் வாட்ஸ் அப்பையும் பயன்படுத்துகின்றனர். இவர்களுக்குப் புதிய விதிமுறைக்குறித்து பெரிய அலட்டல் இல்லை. ஏனெனில் ஏற்கனவே ஃபேஸ்புக் தரவுகள் ஃபேஸ்புக்கின் வியாபாரத்திற்குப் பயன்படுகிறது என்பதுடன் அவர்களது தனிப்பட்ட விவரங்கள் பகிர்ந்துக் கொள்ளப்படாதவரைப் பிரச்சினையில்லை என்று கருதுகிறவர்கள். ஃபேஸ்புக் மூலம் உங்களுக்கு கடன் அட்டை போன்றவை வேண்டுமா என்று கேட்டு அழைப்பு வந்தால்தான் அதன் தாக்கம் தெரியும். ஆனால் ஃபேஸ்புக் அவ்வாறு செய்வதில்லை எனும் வரை சிக்கல் இல்லை.

ஆயினும் ஃபேஸ்புக் டிரம்ப் போன்ற தலைவர்களுக்கு உதவுவதாக எழுந்தக் குற்றச்சாட்டும், ஐரோப்பாவில் அதற்கு விதிக்கப்பட்ட அபராதமும் ஓர் எச்சரிக்கையாக இருந்ததால் உடனடியாக தனிப்பட்டத் தகவல்களையோ, விவரங்களையோ விற்பனைச் செய்யாது என நம்பலாம். மேலும் வணிகப்போட்டி என்பது எப்போதும் இருப்பதாகும். ஃபேஸ்புக்கிற்கு இல்லாவிட்டாலும் வாட்ஸ் அப்பின் மேலாதிக்கத்திற்கு சவால் விடும் வகையில் புதிய செய்தி/தகவல் அனுப்பும் செயலிகளின் வருகைத் தவிர்க்க இயலாதது.

அப்படியொரு வகையில் ஃபேஸ்புக் தனது விலையுயர்ந்த செயலி ஒன்றை தானாகவே போட்டிக்குத் தள்ளாது. இதன் பின்னால் ஏதேனும் ஒரு விரிவாக்கத் திட்டம் இருக்க வேண்டும். சென்ற ஆண்டு பொதுமுடக்கத்திற்கு முன்னால் பலப் புதிய திட்டங்கள் குறித்து ஒரு கலந்துரையாடலை மார்க் ஸூகர்பெர்க் செய்தார். அதில் பல காணொலி, வெர்ச்சுவல் ரியாலிட்டி அடிப்படையிலான புரோடக்ட்டுகள் இருந்தன. ஒருவேளை இதில் ஏதேனும் ஒன்றையோ, பலவற்றையோ இணைத்துப் புதிய புரொடக்ட் ஒன்றை அறிமுகப்படுத்தலாம்.

இது ஒருபுறம் இருக்க இலான் மஸ்க்கினால் பரிந்துரைப்பு செய்யப்பட்ட இரண்டு செயலிகள் யாவை? அவற்றின் உரிமையாளர்கள் யார் எனப் பார்க்கலாமா? சிக்னல் செயலி கலிஃபோர்னி யாவிலிருந்து துவங்கப்பட்ட ஒன்று. இதில் வாட்ஸ் அப்பின் முன்னாள் இணை நிறுவுனரான பிரையான் ஆக்டன் அமெரிக்க கிரிஃப்டோகிராபரான மோக்சின் மர்லின்ஸ்பைக்குடன் இணைந்து நிறுவியுள்ளார். இதிலுள்ள சிறப்பு அம்சம் நீங்கள் கணக்கைத் துவங்கும் போது மொபைல் எண்ணை மட்டும் கேட்கும்; ஆனால் உங்கள் கணக்குடன் மொபைல் எண்ணைச் சேர்க்க கேட்பதில்லை. இதில் குறிப்பிடத்தக்கத் தகவல் என்னவென்றால் சிக்னலை ஜனநாயகத்தைக் காப்பதற்குப் போராடும் இதழியலாளர்களும், மனித உரிமைப் போராளிகளும் சிக்னலை அதிகம் பயன்படுத்துகின்றனராம்! கடந்த 2017 ஆம் ஆண்டில் வாட்ஸ் அப்பிலிருந்து விலகி சிக்னல் அறக்கட்டளையை நிறுவினார்.

டெலிகிராமானது ரஷ்யாவில் துவங்கப்பட்டு பின்னர் ஜெர்மனிக்கு இடம் பெயர்ந்து தற்போது துபாய்யில் செயல்பட்டு வருவதாகத் தெரிகிறது. உண்மையிலேயே தந்தி மாதிரி ஓரிடத்தில் நில்லாது பயணிக்கிறது. இதன் துவக்கம் நிகோலாய், பாவெல் துரோவ் ஆகிய சகோதர்கள் மூலம் 2013 ஆம் ஆண்டில் நிகழ்ந்தது. துரோவ்வின் பங்கு தாரரான ஆக்செல் நெஃப் இரண்டாம் இணை நிறுவுனராக இணைந்தார். தற்போது மாதம் 500 மில்லியன் பயனர்களைக் கொண்டு உள்ளது. இதன் சிறப்பம்சம் தகவல் பாதுகாப்பு எனப்படுகிறது. முதலில் இலாப நோக்கமற்ற நிறுவனம் என்று அறிவித்த டெலிகிராம் தற்போது அவ்வாறு கூறிக்கொள்வதில்லை. இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவிலும் இந்நிறுவனம் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.