32°C
விளம்பரம்
Advertisement

எம்.பி. & எம்.எல்.ஏ.க்கள் மீதான கிரிமினல் வழக்குகள் குறித்த விவரங்கள்! – சுப்ரீம் கோர்ட் காட்டம்!

admin சேலம் Published: August 30, 2018 3 நிமிட வாசிப்பு Updated: August 31, 2018 Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




ஊழல் வழக்குகளில் கைதானவர்கள் மற்றும் கிரிமினல் குற்றவாளிகள் தேர்தலில் நிற்க நிரந்தரத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி ஏராளமான மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளன. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வரும் நிலையில் அரசியல்வாதிகள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் மீதான வழக்கு விவரங்களைத் தாக்கல் செய்யும் விவகாரத்தில் மத்திய அரசு தோல்வி அடைந்து விட்டது என்று மத்திய அரசை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கடுமையாக கடிந்து கொண்டனர்.

பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வானி குமார் உபாத்யாயா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் கடந்த பொதுநலன் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் அரசியல்வாதிகள் கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டு நீதிமன்றத்தால் தண்டனை பெற்றால் அவர்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க வேண்டும், இந்த வழக்குகளை விசாரணை செய்து தீர்ப்பு வழங்க விரைவு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கை விசாரணை செய்த சுப்ரீம் கோர்ட், கடந்த ஆண்டு நவம்பர் 1-ம் தேதி பிறப்பித்த உத்தரவில், எம்.பி, எல்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரணை செய்ய சிறப்பு விரைவு நீதி மன்றங்களை அமைக்க வேண்டும். அந்த வழக்குகளை ஒரு ஆண்டுக்குள் முடித்துத் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது.

மேலும், எம்.பி,எம்எல்ஏக்கள் மீதான 1,581 வழக்குகள் விசாரணை எந்த நிலையில் இருக்கிறது, எப்போது வழக்கு விசாரணை முடியும் என்ற தகவலையும் தெரிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

இதுவரை எத்தனை வழக்குகளில் இருந்து எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர், தண்டனைப் பெற்றுள்ளனர் என்ற விவரத்தையும் தாக்கல் செய்யவும், 2014-ம் ஆண்டில் இருந்து எம்எல்ஏ, எம்.பி,க்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள், நீதிமன்றத்தில் வழக்குகள் விசாரணை நிலவரம், அதன் தீர்ப்புகள் உள்ளிட்டவற்றை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு இருந்தது.

அதன்பின் இந்த வழக்கு இம்மாதம் 21-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, சிறப்பு நீதிமன்றங்களில் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் மீது நிலுவையில் இருக்கும் வழக்குகள் விவரங்களை வரும் 28-ம் தேதிக்குள் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவின் சின்ஹா, கே.எம். ஜோஸப் ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது. ஆனால், சிறப்பு விரைவு நீதிமன்றங்களில் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் மீதான வழக்கு விவரங்களை மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தாக்கல் செய்யவில்லை.

இதைக் கேட்டு நீதிபதிகள் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்து, மத்திய அரசைக் கடுமையாக கடிந்து கொண்டனர். நீதிபதிகள் கூறுகையில்,‘‘நாங்கள் எம்.பி.எம்எல்ஏக்கள் மீது நிலுவையில் இருக்கும் கிரிமினல் வழக்குகள் குறித்த விவரங்களைத் தாக்கல் செய்யுங்கள் என்று உத்தரவிட்டிருந்தும் நீங்கள் தாக்கல் செய்யவில்லை.

நீதிமன்றம் சில குறிப்பிட்ட உத்தரவுகளை பிறப்பித்தால் அதற்கு அரசு கட்டுப்பட வேண்டும். ஆனால், மத்திய அரசு இந்த விவரங்களைத் தாக்கல் செய்வதற்கு தயாராக வரவில்லை. இந்த விவரங்களைத் தாக்கல் செய்வதில் தோல்வி அடைந்துவிட்டது. நாங்கள் இதற்கு மிகுந்த வேதனைப்படுகிறோம்’’ எனத் தெரிவித்தனர்.

அப்போது மத்திய சட்ட மற்றும் நீதித்துறை அமைச்சகம் சார்பில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘இந்த விவகாரத்தை மத்தியஅரசு தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது. அனைத்து விவரங்களையும் அதிகாரிகள் மூலம் விரைவாகச் சேகரிக்கவும், திரட்டவும், நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்களைக் கேட்டும் உத்தரவிட்டுள்ளோம்’’ எனத் தெரிவிக்கப்பட்டது.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்