சபரிமலை நடை திறப்பு: பெண்கள் அனுமதி சர்ச்சையும் தொடர்கிறது!!

சபரிமலை நடை திறப்பு: பெண்கள் அனுமதி சர்ச்சையும் தொடர்கிறது!!

சபரிமலை கோயிலுக்கு பெண்கள் எவரையும் அனுமதிக்காமல் போராட்டக்காரர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனை முடிவுக்கு கொண்டுவரும் எண்ணத்துடன் புனேவை சேர்ந்த பெண் செயற்பாட்டாளர் த்ருப்தி தேசாய் முயற்சி மேற்கொண்டுள்ளார். அதே சமயம் சபரிமலை விவகாரம் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இன்று நடந்த அனைத்து கட்சிக் கூட்டம் தோல்வியில் முடிந்தது.

கூட்டத்தின் முடிவில் அனைத்து வயது பெண்களையும் சபரிமலையில் அனுமதிக்கும் முடிவில் மாற்றம் இல்லை என கேரள அரசு தெரிவித்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.

சபரிமலை ஐயப்ப கோவிலுக்குள் 10 முதல் 50 வயதுகுட்பட்ட பெண்கள் செல்லலாம் என கடந்த செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின.

கடந்த அக்டோபர் மாதம் சபரிமலையில் 5 நாட்கள் நடை திறக்கப்பட்ட போது அங்கு பல இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். கோவில் சந்நிதியில் பக்தர்கள் முற்றுகை போராட்டம் நடத்தியதால் சபரிமலைக்கு வந்த பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இதன் காரணமாக கேரளாவில் பதற்றம் நிலவியது.

இந்நிலையில் நவம்பர் 17ம் தேதி மகர ஜோதியை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலின் நடை மீண்டும் திறக்கப்படவுள்ளது.

அதை தொடர்ந்து பிரச்சனைக்கு தீர்வு காண இன்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது. சபரிமலை தீர்ப்புக்கு எதிரான சீராய்வு மனுக்கள் வரும் ஜனவரி 22ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அதுவரை கேரள அரசு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்தக் கூடாது என கூட்டத்தில் எதிர்கட்சிகள் கோரின.முதல்வர் பினராயி விஜயன் எதிர்கட்சிகளின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டார்.

சபரிமலை தொடர்பாக செப்டம்பர் 28ம் தேதி அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்த நிலையில் அனைத்து வயது பெண்களையும் கோவிலுக்குள் அனுமதிப்பது தவிர வேறு வழியில்லை என பினராயி விஜயன் தெரிவித்தார்.

3 மணி நேரம் நடந்த கூட்டத்தில் சாதமான எந்த முடிவும் எட்டப்படவில்லை. கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்கும் முடிவில் கேரள அரசும் உறுதியாக இருந்தது. அதை தொடர்ந்து பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய பினராயி விஜயன் ‘‘சபரிமலை விவகாரத்தில் கேரள அரசு பிடிவாதமாக இல்லை. மாறாக உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அமல் செய்வதில் எங்கள் கடமையை செய்கிறோம். நாளை உச்சநீதிமன்றம் வேறு உத்தரவை பிறப்பித்தால் அதையும் அமல் செய்வோம் என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

மாலையில் பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதிகளுடனும் சபரிமலை தாந்திரி குடும்பத்தினருடனும் முதல்வர் பினராயி விஜயன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதனிடையேதான் புனேவை சேர்ந்த பெண் செயற்பாட்டாளர் த்ருப்தி தேசாய் சில நாட்களுக்கு முன்பாக கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு அவர் எழுதிய கடிதத்தில், தான் சபரிமலைக்கு தரிசனம் செய்ய வருவதாகவும், தனக்கு போதிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். இதைத் த்கொடர்ந்து,அவர் சக செயற்பாட்டாளர்களுடன் கொச்சி விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது அவரை சூழ்ந்து கொண்ட போராட்டக்காரர்கள், திரும்பிச் செல் என்று முழக்கமிட்டனர்.

மேலும் அவரை சபரிமலைக்கு ஏற்றிச் செல்ல எந்தவொரு ஆட்டோ, டாக்ஸி டிரைவர்களும் முன் வரவில்லை. இருப்பினும், சபரிமலைக்கு சென்ற தரிசனம் செய்யாமல் ஊர் திரும்ப மாட்டேன் என்று த்ருப்தி தேசாய் தெரிவிச்சிருக்கார்.

நாளை மாலை 5 மணிக்கு சபரி மலை கோயிலில் நடை திறக்கப்படுவதால் அப்போது, அங்கு தரிசனம் செய்யும் எண்ணத்தில் தேசாய் உள்ளார்.

ஏற்கெனவே மகாராஷ்டிராவில் கடந்த 2016-ல் ஷானி ஷிங்னாபூர் கோயிலில் நுழைந்து, 60 ஆண்டு காலமாக இருந்து வந்த நடைமுறையை த்ருப்தி தேசாய் முடிவுக் கொண்டு வந்தார். அதுவரையில் பெண்கள் எவரும் கோயிலில் அனுமதிக்கப்படாமல் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!