ஜியோ போனிலிருந்து இனி அவுட் கோயிங் ஓசி கால் ஸ்கீமுக்கு ஆப்பு! – முகேஷ் அம்பானி அம்பேல் அறிவிப்பு!

ஜியோ டு ஜியோ தவிர்த்த மற்ற இதர தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு செய்யும் வாய்ஸ் கால் களுக்கு இனி நிமிஷத்துக்கு 6 பைசா கட்டணம் வசூலிக்கப் போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது..
ஜியோ நெட்வொர்க் அனைத்தும் இலவசம் என்ற பெயரில் ரிலையன்ஸ் நிறுவனத்தால் மூன்று வருடங்களுக்கு முன்னாள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டு 17ம் ஆண்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், இந்தியாவின் நம்பர் 1 தொலைதொடர்பு நிறுவனமாக திகழ்கிறது. அளவுக்கு அதிகமானது மட்டுமின்றி மிக வேகமான டேட்டா, அன் லிமிட்டட் கால்கள், அதிக நாள் வேலிடிட்டி ஆகிய அனைத்தையும் குறிப்பிட்ட தொகைக்குள் வழங்கி அசத்தியது, இத்தனைக்கும் ஏனைய தொலைதொடர்பு நிறுவனங்கள், ஒரு நிமிடத்திற்கு ஒரு ரூபாய் என்று கட்டணம் வசூலித்து வந்த நிலையில், ஜியோ வின் அன்லிமிட்டட் கால்கள் இலவசம் என்ற அறிவிப்பே பல கோடி வாடிக்கையாளர்களை ரிலையன்ஸுக்கு பெற்றுத்தந்தது. ரிலையன்ஸ் எடுத்த பல அதிரடி முடிவுகளால், மற்ற தொலை தொடர்பு நிறுவனங்களும், அந்த இலவசம் என்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டன.
ஆனால் இதுவரை இலவசமாக வழங்கப்பட்டு வந்த, மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களுக்கான அழைப்புகளுக்கு இனி கட்டணம் வசூலிக்கப்படும் என்று முகேஷ் அம்பானி இன்று அதிரடியாக அறிவித்துள்ளார். மற்ற தொலைதொடர்பு நிறுவனங் களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் ஏர்டெல், வோடஃபோன் ஐடியா நிறுவனங்களுக்கு கிட்டத்தட்ட 13,500 கோடி ரூபாய் அளவிற்கு கட்டணமாக செலுத்தியுள்ளதால், இந்த முடிவை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு கட்டணம் செலுத்தியதால் ஏற்பட்ட இழப்பை, வாடிக்கையாளர்களிடம் கட்டணம் பெற்று சரிசெய்து கொள்ள முடிவெடுத்திருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், பயனாளர்கள் செலுத்தும் இந்த கட்டணத்திற்கு நிகரான இலவச டேட்டாவை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.
ஜியோ சிம்கார்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், இனி எப்போதும் செய்யும் ரீசார்ஜோடு சேர்த்து IUC(interconnect usage charge) ரீச்சார்ஜ் செய்ய வேண்டும் என்று அறிவித்துள்ளது. இந்த நடைமுறையானது வரும் அக்டோபர் 10 தேதி முதல் அமலுக்கு வருகிறது. ப்ரீ பெய்ட் வாடிக்கை யாளர்கள் மட்டுமல்லாமல் போஸ்ட் பெய்ட் வாடிக்கையாளர்களுக்கும் இந்த கட்டண முறை பொறுந்தும் என்று ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. ஜியோ வாடிக்கையாளர்கள் அவுட்கோயிங் அழைப்புகளுக்கு கட்டணம் செலுத்தப்போவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
எவ்வளவு ரூபாய்க்கு IUC ரீசார்ஜ் செய்யவேண்டும் தெரியுமா ?
➤10 ரூபாய்க்கு ரீச்சார்ஜ் செய்தால் 124 IUC நிமிடங்கள் மற்ற தொலைதொடர்பு சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளரிடம் பேசிக்கொள்ளலாம். இதற்கு இணையாக 1 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படும்.
➤20 ரூபாய்க்கு ரீச்சார்ஜ் செய்தால் 249 IUC நிமிடங்கள் மற்ற தொலைதொடர்பு சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளரிடம் பேசிக்கொள்ளலாம். இதற்கு இணையாக 2 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படும்.
➤50 ரூபாய்க்கு ரீச்சார்ஜ் செய்தால் 656 IUC நிமிடங்கள் மற்ற தொலைதொடர்பு சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளரிடம் பேசிக்கொள்ளலாம். இதற்கு இணையாக 5 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படும்.
➤100 ரூபாய்க்கு ரீச்சார்ஜ் செய்தால் 1,362 IUC நிமிடங்கள் மற்ற தொலைதொடர்பு சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளரிடம் பேசிக்கொள்ளலாம். இதற்கு இணையாக 10 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படும்.
மேற்கண்ட கட்டண முறையானது, ஜியோ வாடிக்கையாளர் மற்றொரு ஜியோ வாடிக்கையாளருக்கு செய்யும் அழைப்புகளுக்கு பொருந்தாது. அது எப்போதும் போல இலவசமாகவே வழங்கப்படும். இன்கம்மிங் அழைப்புகளுக்கு எந்த கட்டணமும் கிடையாது. தற்போதைய நிலையில், டேட்டாவிற்கு மட்டும் கட்டணம் பெற்றுவரும் ஜியோ, இனி வாய்ஸ் கால்களுக்கும் கட்டணம் வசூல் செய்ய முடிவெடுத்திருப்பது வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.