32°C

’ராவ் பகதூர்’- விமர்சனம்!

admin Published: July 10, 2026 4 நிமிட வாசிப்பு Running News
எழுத்து:

தெலுங்கு திரையுலகில் கமர்ஷியல் மசாலாக்களுக்கு நடுவே ‘கேர் ஆஃப் காஞ்சரபாலம்’, ‘உமா மகேஸ்வர உக்ர ரூபஸ்ய’ போன்ற எதார்த்தமான, மண்ணின் கதைகளைத் தந்து தனி முத்திரை பதித்தவர் இயக்குனர் வெங்கடேஷ் மஹா. வழக்கமான ஃபார்முலா சினிமாக்களை நிராகரித்து, மனிதர்களின் அக உலகத்தைப் பேசும் அவர், இந்த முறை முற்றிலும் மாறுபட்ட ஒரு புதிய பாதையில் பயணித்திருக்கிறார். அதுதான் ‘ராவ் பகதூர்’ (Rao Bahadur). ஒரு புதிய உலகத்திற்குள் நம்மை அழைத்துச் செல்லும் வரலாற்றுப் பின்னணி கொண்ட பீரியட் கதையாக இருந்தாலும், அதன் பின்னே ஒரு மிக வலுவான சமூக அக்கறையையும், மனித மனங்களின் கோரமான உளவியலையும் ஒளித்து வைத்து ஆடியிருக்கிறார் இயக்குனர்.

படம் தொடங்கும் முதல் காட்சியிலேயே பார்வையாளர்களை ஒரு விசித்திரமான, கடந்த கால உலகிற்குள் மிக லாவகமாக இழுத்துச் சென்று விடுகிறார் இயக்குனர். வழக்கமான ஒரு தெலுங்கு சினிமாவுக்கான பில்ட்-அப்கள், அதிரடி சண்டைக் காட்சிகள் ஏதுமின்றி, கதையின் உலகத்தை அறிமுகப்படுத்தும் விதமே அசாத்தியமான திரையரங்க அனுபவத்தைக் கொடுக்கிறது. ஹாலிவுட் பாணி படங்களுக்குச் சற்றும் சளைக்காத வகையில் ஒரு புதிய நிலப்பரப்பையும், அதன் விதிகளையும் காட்டி தொடக்கத்திலேயே நம்மை இருக்கையின் நுனிக்கு வரவழைக்கிறது இத்திரைப்படம்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

கதைக் களம்

மன்னர் பரம்பரைரையைச் சேர்ந்த நாயகன் சத்ய தேவ், வயது மூப்பு, உடல்நிலை பாதிப்பு மற்றும் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டு தன் வாழ்வின் இறுதி நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறார். மருத்துவர்கள் சொன்ன கெடுவை தாண்டியும் இறக்காமல் இருக்கும் அவர், தன் மனதுக்குள் இருக்கும் ஒரு பெரிய சந்தேகம் மனதை போட்டு உறுத்துகிறது. அதை தீர்த்து வைத்துவிட்டால், நான் நிம்மதியாக கண்ணை மூடிவிடுவேன், என்று தனது நண்பரும், மருத்துவருமான விகாஸிடம் தெரிவிக்கிறார்.

அந்த சந்தேகம் என்ன?, அதன் பின்னணியில் இருக்கும் அவரது கடந்த காலம் எப்படிப்பட்டது?, நாயகி தீபா தாமஸ் உடனான காதல் மற்றும் கல்யாணம், தன் இளைய மகன் மீதான அவரது வெறுப்புக்கு என்ன காரணம்? ஆகிய கேள்விகளுக்கான பதிலை ஒரு பீரியட் படமாக மட்டும் அல்லாமல் ஆழமான உளவியல் படமாகவும், சாதி மற்றும் நிற வெறிக்கு எதிரான சம்மட்டியடியாகவும் சொல்வதே ‘ராவ் பகதூர்’ படக் கதை.

நடிகர்களின் பங்களிப்பு

ராம்ப்பா ராவ் பகதூர் என்ற கணத்த கதாபாத்திரத்தில் நாயகனாக நடித்திருக்கும் சத்ய தேவ், முழு படத்தையும் தன் நடிப்பின் மூலம் சுமந்திருக்கிறார். இளமை மற்றும் முதுமை என இரண்டு வெவ்வேறு தோற்றங்களை தனது உடை மற்றும் மேக்கப்பில் மட்டும் இன்றி, உடல் மொழி, சிறு சிறு அசைவுகள், வசன உச்சரிப்பு என அனைத்திலும் மிக நேர்த்தியாக வெளிப்படுத்தி நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார். கோபம், வெறுப்பு, மன உளைச்சல், சந்தேகத்தால் ஏற்படும் தவிப்பு என அனைத்துவிதமான உணர்ச்சிகளையும் மிக அபாரமாக வெளிக்காட்டி, தன் நடிப்புக்காகவே படத்தை பார்க்க வைத்து விடுகிறார்.

நாயகனின் நண்பராகவும், மருத்துவராகவும் நடித்திருக்கும் விகாஸ் மப்புலா தன் வேலையை சரியாக செய்திருப்பதோடு, திரைக்கதையில் இருக்கும் உளவியல் ரீதியான திருப்பங்களுக்கு கைகொடுக்கும் விதத்தில் நடித்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் தீபா தாமஸ், தனக்கு கொடுத்த வேலையை குறையின்றி செய்திருப்பதோடு, இறுதிக் காட்சியில் எதிர்பார்க்காத ரகசியத்தை உடைத்து பார்வையாளர்களை ஆச்சரியப்பட வைத்திருக்கிறார். பாலா பரசர், ஆனந்த் பாரதி, பிரணய் வேகா, மாஸ்டர் கிரண் என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக பயணித்து பார்வையாளர்கள் மனதில் நின்று விடுகிறார்கள்.

தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பு

ஒரு வரலாற்றுப் படத்திற்குரிய வழக்கமான ஃபார்முலாக்களை உடைத்து, புதிய ஒளியமைப்பாலும் வண்ணத் தேர்வாலும் திரையில் ஒரு தனித்துவமான மாயாஜாலத்தை நிகழ்த்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் கார்த்திக் பரமர். கதையின் போக்கில் பல திருப்பங்கள் வந்தாலும், நாயகனின் அக உலக மாற்றங்களை அணுவளவும் பிசகாமல் தன் கேமராவின் வழியே மிகத் துல்லியமாகக் கடத்தியுள்ளார்.

படத்தின் ஆன்மாவிற்குப் பெரும் பலமாக அமைந்திருப்பது ஸ்மரன் சாயின் பின்னணி இசை. கதாபாத்திரங்கள் மௌனமாக இருக்கும் தருணங்களில்கூட, அவர்களின் உணர்வுகளைப் பழங்கால இசைக் கருவிகளின் பிஜிஎம் (BGM) மூலம் பேச வைத்திருக்கிறார்.

கலை இயக்குநர் ரோஹன் சிங்கின் அரண்மனை வடிவமைப்பு பிரமிக்க வைக்கிறது. அரண்மனையின் உட்புற வண்ணங்களையும், நாயகனின் ஆடைகளையும் ஒரே நேர்க்கோட்டில் இணைத்து ஒரு புதிய காட்சி உலகை உருவாக்கியுள்ளார்.

இயக்கம், திரைக்கதையோடு படத்தொகுப்பு (Editing) பொறுப்பையும் ஏற்றிருக்கும் வெங்கடேஷ் மஹா, சாதி வெறி, நிற வெறி மற்றும் ராஜ பரம்பரையின் ஆணவத்தை அக்குவேறு ஆணிவேறாக உடைக்கும் ஒரு உக்கிரமான கதையை, மிக நேர்த்தியான உளவியல் த்ரில்லர் பாணியில் கொடுத்து மிரட்டியிருக்கிறார்.

படம் ஏற்படுத்தும் தாக்கம்

‘ராவ் பகதூர்’ என்பது வெறும் பொழுதுபோக்கிற்கான கற்பனையோ அல்லது மன்னர் காலத்து வரலாற்றுப் பதிவோ மட்டுமல்ல; அது மனித மனங்களின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் சாதி மற்றும் நிற வெறிக்கு எதிரான ஒரு கூர்மையான சம்மட்டியடி. ஒரு மனிதனின் இறுதி நாட்களின் வழியே ஒட்டுமொத்த சமூகத்தின் அவலங்களையும், உளவியல் ரீதியான சிக்கல்களையும் படம் அக்குவேறு ஆணிвеறாக அலசுகிறது. திரையரங்கை விட்டு வெளியே வந்த பிறகும், சத்ய தேவின் அந்த கேள்வியும், அதற்கான விடையும் நம் மனதில் நீண்ட நேரத்திற்கு ஒரு மிகப்பெரிய தாக்கத்தையும், கனத்தையும் கடத்திச் செல்கிறது என்பதுதான் படத்தின் நிஜமான வெற்றி.

மொத்தத்தில் –  இந்த சினிமா டோலிவுட்டின் ஆச்சரியம்

மார்க்:  3/75 / 5