பில்லியனர்களின் கைகளில் இனி விண்வெளி? -ரமேஷ் கிருஷ்ணன் பாபு!

பில்லியனர்களின் கைகளில் இனி விண்வெளி? -ரமேஷ் கிருஷ்ணன் பாபு!

டந்த 2008 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் பொருளாதாரச் சிக்கல் ஏற்பட்டபோது நாம் 99%; அவர்கள் 1% எனும் முழக்கம் அதிரடியாக அரங்கேறியது. அதன் பொருள் ஏழ்மையின் கடுமை பெரும்பாலோர்க்கு இருக்கையில் ஒரு சிலர் மட்டுமே செல்வ வளத்தை அனுபவிக்கின்றனர் என்பதேயாகும். அதைத் தொடர்ந்து டிரம்ப் அதிபராக இருந்தபோதும் இதே முழக்கங்கள் எழுந்தவாறே இருந்தது. இப்போது பைடன் ஆட்சிக்காலத்தில் வளர்ச்சியை அனைவருக்கும் பகிரும் பொருளாதாரக் கொள்கைகள் நடைமுறைக்கு வரும் என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் உள்ளனர். கொரோனாவின் பொது முடக்கம் முன்பை விட பொருளாதாரச் சிக்கல்களை கூர்மைப்படுத்தியுள்ளது. ஒருபுறம் இப்படியிருக்க மற்றொருபுறம் உலகப் பெரும் பணக்காரர்கள் என அறியப்பட்ட சில அமெரிக்கர்கள் விண்வெளியில் பறப்பதற்கு போட்டிப் போட்டுக்கொண்டு பணத்தைச் செலவழிக்கிறார்கள். இலான் மஸ்க் என்பவரால் துவக்கி வைக்கப்பட்ட இந்த பணக்கார பொழுதுபோக்கு இப்போது தீவிரமடைந்து பணம் ஈட்டும் வணிகம் எனும் வடிவத்தை அடைந்துள்ளது. வெர்ஜின் குரூப் எனும் விமான நிறுவனத்தை நடத்தி வரும் ரிச்சர்ட் பிரான்சன் வானவெளியில் சில மணித்துளிகள் பறக்கச் சென்றார். அவருடன் ஒரு இந்தியப் பெண்மணி உட்பட சிலரும் சென்றனர். இதைத் தொடர்ந்து உலகின் இரண்டாவது பணக்காரரான ஜெஃப் பெசோஸ் கடந்த வாரம் விண்வெளிக்கு போய் விட்டு வந்திருக்கிறார். அடுத்த பணக்காரர் யார் என்பது தெரியவில்லை. இந்த விண்வெளி வணிகம் புதிய செலவுமிக்க பொழுதுபோக்கு என்பதைத் தவிர வேறெந்தப் பயனும் இல்லை. இதற்கான செலவை நாள்தோறும் பசி, பிணி, இன மோதல், வேலைத்தேடி புலம் பெயரும் மக்கள் ஆகியோர்க்கு வழங்கினால் என்ன என்ற கேள்வி எழுந்தாலும் வேறு சில விஷயங்களும் அடங்கியுள்ளன.

மனித இனத்தின் அழிவு இந்நூற்றாண்டின் இறுதியில் துவங்கிவிடும். புவி வெப்படமைதலை இனித் தடுக்க முடியாது எனும் வாதத்தை நம்புவோராக இப்பணக்காரர்கள் இருக்கலாம். மேலும் பூமிக்கு மாற்று கிரகம் ஒன்றையோ அல்லது வான்வெளியில் வாழ்வதற்கு செய்யப்படும் முயற்சியாகவும் கூட இப்போதைய பயணங்கள் இருக்கலாம். ஸ்பேஸ் எக்ஸ் எனும் வான்வெளிக்கு சென்று விட்டு மீண்டும் பூமிக்கு வந்தடையும் விண்கலத்தை உருவாக்கியுள்ள இலான் மஸ்க் முதலில் செவ்வாய் கிரகத்தில் செடி வளர்க்க ஓடத்தை செலுத்தப்போவதாக அறிவித்தார். பின்னர் யோசனையை மாற்றிக்கொண்டு அங்கு மனிதர்களை குடியேற்ற வழியுண்டா என ஆய்வு செய்யத் துவங்கியுள்ளார். அதற்கான திட்டங்களை செயல்படுத்தியும் வருகிறார். இவருக்கு அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவும் உதவி செய்கிறது.

கடந்த நூற்றாண்டில் விண்வெளியில் செயற்கைக்கோளைச் செலுத்தி பூமியின் மீது ஆய்வுகளைச் செய்வதே பெரும் திட்டமாக இருந்தது. அமெரிக்கா நிலவிற்கு பயணம் மேற்கொண்டதற்குப் பிறகும் விண்வெளி அறிவியலை மனித குலத்தின் நன்மைக்குப் பயன்படுத்துவது குறித்தே சிந்தனைகள் இருந்தன. ஒவ்வொரு நாடும் இப்போதும் சொந்தமாக செயற்கைக்கோள் செலுத்தும் ஆற்றலைப் பெற முனைந்துள்ளன. இதற்கு பின்னால் ஏவுகணைகளை தயாரிக்கும் திட்டம் இருந்தாலும் உண்மையில் விண்வெளி ஆய்விலும் அவை ஈடுபடுகின்றன. இப்படியொரு சூழலில் விண்வெளிப் பயணத்தை சுற்றுலா பயணம் போல வணிக முயற்சியாக செய்வது ஆய்வுகளின் தீவிரத்தை சிறுகச் செய்துவிடும் எனும் அச்சமும் ஏற்பட்டுள்ளது. விண்வெளி ஆய்வு என்பது மனிதர்களுக்கு பறவைகள் போல பறக்க வேண்டும் எனும் உள்ளுணர்வால் ஏற்பட்டது. அதையே மனித குலத்தின் நன்மைக்குப் பயன்படுத்துவது ஆகச் சிறந்தது. அதற்காக உருவாக்கப்பட்டத் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி உல்லாசப் பயணம் செய்வது முறையா? இது அனைவரின் மனதிலும் எழுகின்ற கேள்வி.

இந்தியாவைப் பொறுத்தவரை இஸ்ரோ முழுவதுமாக நாட்டின் வளர்ச்சிக்கே பணியாற்றி வருகிறது. அடுத்து நிலவிற்கும், விண்வெளியில் மனிதர்களை அனுப்புவதிலும் ஈடுபட்டு வருகிறது. நிலவின் தென்பகுதிக்கு அனுப்பிய செயற்கைக்கோள் கடைசி நிமிடத்தில் பழுதடைந்து காணாமல் போனது பின்னடைவு என்றாலும் அடுத்த முறை வெற்றியடையும் பயணத்தை சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இந்தியாவைப் போலன்றி சீனா வெண்வெளியில் ஆய்வுக்கூடத்தையும், ஓடத்தையும் உருவாக்கியுள்ளது. நிலவின் தென்பகுதிக்கு வெற்றிகரமாக செயற்கைக்கோளைச் செலுத்தி ஆய்வுகளைச் செய்துள்ளது.

இஸ்ரோ உலகம் முழுதும் செயற்கைக்கோள் ஏவும் தொழில்நுட்பத்தை வணிக ரீதியாக சந்தைப்படுத்தி ஒரே நேரத்தில் பல செயற்கைக்கோள்களை விண்வெளியில் மிதக்க விடும் தொழில்நுட்பத்தின் முன்னணி நாடாகவுள்ளது. இந்தியாவில் இருந்து எந்தப் பணக்காரரும் விண்வெளிப் பயணம் மேற்கொள்ள முன் வந்துள்ளார்களா என்பது தெரியவில்லை. பெசோஸ் விண்வெளிப்பயண திட்டத்திற்கும் பெரும்தொகையொன்றை கட்டணமாக வசூல் செய்யவுள்ளார். இதைக் கொடுத்து பயணம் செய்வதை வறுமை இன்னும் நிலவும் இந்தியச் சமூகம் விரும்பாது. அப்படியே போக வேண்டுமென்றால் இணையானத் தொகையை இஸ்ரோவிற்கு நன்கொடையாகக் கொடுத்து விட்டு போனால் பாராட்டுவார்களே?

விண்வெளியில் செய்யப்படும் வணிக திட்டங்களுக்கு பெரும் முதலீடும் சேர்கிறது. மேலும் ஏற்கனவே மஸ்க்கின் ஃபால்க்கன் 9 விண் ஓடத்தில்தான் நாசாவின் விண்வெளிப் பயணங்கள் நடக்கத் துவங்கியுள்ளன. பிரான்சன் இந்தியாவிற்குப் போட்டியாக சிறியச் சிறிய விண்வெளி ஏவுதல் திட்டங்களை செயல்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளார். எனவே, இப்போட்டியில் இந்தியா முன்னேற பெரும் முதலீடு செய்ய வேண்டியத் தருணம் வந்துவிட்டது. கடந்த சில வருடங்களாக விண்வெளி திட்டங்களில் தனியார் பங்கேற்பு வரத் தொடங்கியுள்ளது. இதை மேலும் வளர்த்தெடுக்க வேண்டும். அப்படி செய்தால்தான் வருங்காலத்தில் விண்வெளியில் மனிதர்கள் வசிக்கும் போது அங்கு ஒரு ‘இந்தியாவும்’ இருக்க முடியும்.

ரமேஷ் கிருஷ்ணன் பாபு

Related Posts

error: Content is protected !!