அமித்ஷாவின் லீலா விஜயம் வெற்றியா? தோல்வியா? ரமேஷ் கிருஷ்ணன் பாபு

அமித்ஷாவின் லீலா விஜயம் வெற்றியா? தோல்வியா?  ரமேஷ் கிருஷ்ணன் பாபு

நேற்றிலிருந்து பாஜக ஆதரவாளர்கள் 41 என்ற சங்கேதக் குறியீட்டை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். அ இஅதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், முதல்வர் இ பி எஸ் ஆகியோர் கூட்டணித் தொடரும் என்று அறிவித்தக்கையோடு ஹோட்டல் லீலாவிற்கும் சென்று தனியே அமித்ஷாவைச் சந்தித்தனர். அப்போது தொகுதி பங்கீடு குறித்தும் பேசப் பட்டதாகவும், அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 41 தொகுதிகளை ஒதுக்குவதாகவும் ஒப்புக்கொள்ளப்பட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் பாஜக ஆதரவாளர்கள் செய்தி பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தனர்.

இது குறித்து அதிகாரப்பூர்வமாக ஏதும் இப்போது தெரியவராது என்பது ஒருபுறம் இருக்க பாஜகவிற்கு 41 இடங்களைக் கொடுத்தால் பாமக, தேமுதிக, புதிய தமிழகம் போன்ற கட்சிகளுக்கு எவ்வளவு? அதிமுக போட்டியிடும் தொகுதிகள் குறையாதா? இது போன்ற கேள்விகள் எழுவதைத் தவிர்க்க இயலாது. கடந்த 2011 ஆம் ஆண்டில் ஜெ தேமுதிகவிற்கு 40 இடங்களைக் கொடுத்தார். அப்போது கூட்டணியில் கம்யூனிஸ்ட்கள் மட்டுமே பெரிய கட்சிகள். ஆனால் இப்போது பாமகவும், தேமுதிகவும் உள்ளன. அவற்றை கம்யூனிஸ்ட்கள் போலக் கருத முடியாது. வடக்கு, மேற்கு மாவட்டங்களில் பாமக ஆதரவுத் தேவை. சென்ற பேரவைத் தேர்தலில் பாமக பிரித்த வாக்குகளால் பலத் தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு மாறியது. தேமுதிகவின் தலைமையிலான ம.ந.கூவும் இதைத் செய்தது. இப்போது தேமுதிகவும், த.மாகாவும் அதிமுக கூட்டணியில் உள்ளன. எனவே பாஜகவிற்கு 41 தொகுதிகள் கிடைக்க வாய்ப்பில்லை. ஆயினும் 25 வரைக் கிடைக்கலாம். பாமகவுக்கும் 25, தேமுதிக+தமாகா+புதிய தமிழகம்+ இதரர் 30 போக மீதமுள்ள 164 இடங்களில் அதிமுக போட்டியிடலாம்.

அமித் ஷா திமுகவை நோக்கி சவால்விட்டிருக்கிறார். இதன் பின்னணி என்னவென்பது நிலுவையிலுள்ள 2ஜி வழகக்கின் முடிவைச் சுட்டுகிறது. ஒருவேளை எதிர்மறையாகப் போனால் திமுகவிற்கு சிக்கலாக மாறலாம். சசிகலாவின் விடுதலை எந்த அரசியல் மாற்றத்தையும் ஏற்படுத்தாது. அமமுக சென்றமுறைப் போல வாக்குகளைப் பிரிக்கும். இதை வளர்ச்சித் திட்டங்களை மேற்கொண்டோம் எனும் கோஷத்துடன் எதிர்கொண்டு நடுநிலை வாக்குகளைக் கவரவே அமித் ஷாவின் வருகையும், மெட்ரோ திட்டம், நீர்த்தேக்கம் திட்டங்களின் துவக்கம் சுட்டிக்காட்டுகிறது. மருத்துவக் கல்வியில் அதிரடிக் கொள்கை, புதிய கல்விக் கொள்கையில் சில மாற்றங்கள் என இப்படி முதல்வர் சில செயல்பாடுகளைச் செய்து தனது செல்வாக்கை நிலைநிறுத்தியுள்ளார். தமிழக மக்கள் கடந்த காலங்களில் மத்திய அரசுடன் இணக்கமான உறவிருக்கும் ஆட்சிகளைப் பாராட்டியே வந்துள்ளனர்.

அமித் ஷா ரஜினியைச் சந்திப்பார் என்று சொல்லப்பட்ட நிலையில் அப்படி ஏதும் நிகழ்ந்ததாகச் செய்தியில்லை. கமல் ஆட்சிக்கு எதிரான ஓட்டுக்களைப் பிரிப்பார் என்பதில் ஐயமில்லை. ரஜினி ஒருவேளை இரண்டு புறமும் பிரிக்கலாம். ஆகையால் அதிமுக அணிக்கு மூத்த நடிகர்களின் அரசியல் வருகை சாதகமே.

சென்ற இடைத்தேர்தல்களில் வெற்றி பெற எப்படி பாமக, பாஜக மற்றும் புதிய தமிழகம் உதவினவோ அதே போல பொதுத்தேர்தலிலும் செல்வாக்குள்ள இடங்களில் அவை அதிமுக வெற்றிக்கு உதவும். மேலும் கூட்டணிக் கட்சிகள் வைக்கும் கோரிக்கைகளை வரும் ஆறு மாதங்களில் நிறைவேற்றிக் கொடுத்தால் அதிமுகவிற்கு அவை பதிலுக்கு பேராதரவு தரும் என்பதில் சந்தேகமேயில்லை.

உள்கட்டுமான வளர்ச்சி, கோவை போன்ற நகரங்களில் மெட்ரோ அல்லது எல் ஆர் டி எஸ் (டிராம் வண்டிகள்) திட்டங்கள், புதிய தொழில் முதலீடுகள், விவசாயிகளுக்கு புதிய சட்டங்கள் மூலம் வருமான உயர்வு, டாஸ்மாக்கிற்கு அனைவரும் ஏற்கும் வகையிலானத் தீர்வு இப்படி திட்டமிட்டு செயல்பட்டால் அதிமுகவின் மாண்புமிகு அம்மாவின் ஆட்சி மூன்றாம் முறையும் தொடரலாம்.

எப்படி இருந்தாலும் மோடியும், அமித் ஷாவும் தமிழகம் வருவது இனி அடிக்கடி நடைபெறும். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1988-89 ஆம் ஆண்டுகளில் தமிழகத்தில் காங்கிரஸை ஆட்சியில் ஏற்றுவேன் என்று 17 முறை வருகைத் தந்தார். தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு 26 இடங்களை வென்றது. அப்போதெல்லாம் இவ்வளவு தகவல் தொடர்பு வளர்ச்சியில்லை. அன்று காங்கிரஸ்சிற்கு வாய்க்காத ஆட்சிப் பலன் பாஜகவுக்கு இப்போது மறைமுகமாவது வாய்க்குமா?

ரமேஷ் கிருஷ்ணன் பாபு

Related Posts

error: Content is protected !!