நவம்பர் 25ல் காரைக்கால் – மகாபலிபுரம் இடையே புயல்!
வங்க கடலில் உருவாகி இருக்கும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 2 நாட்களில் தாழ்வு மண்டலமாகவும், அதன் தொடர்ச்சியாக தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப் பெற்று தமிழக கடற்கரை நோக்கி நகரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையத்தால் கணிக்கப் பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம் வரும் 25ம் தேதி புயலாக மாறி கரையை கடக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது. நவம்பர் 25ல் காரைக்கால் – மகாபலிபுரம் இடையே புயல் கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள. நிலையில் வருகிற 24 (செவ்வாய்க்கிழமை), 25-ந்தேதிகளில் (புதன்கிழமை) நாகப் பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களுக்கு நிர்வாக ரீதியாக ‘ரெட் அலர்ட்’டும், 24-ந்தேதி கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கும், 25-ந்தேதி திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கும் ‘ஆரஞ்சு அலர்ட்’டும் வானிலை ஆய்வு மையம் தரப்பில் விடுக்கப்பட்டு உள்ளது.
‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டு இருக்கும் பகுதிகளில் 20 செ.மீ.க்கு மேல் அதி கனமழையும், ‘ஆரஞ்சு அலர்ட்’ விடுக்கப்பட்டு இருக்கும் பகுதிகளில் 11 செ.மீ. முதல் 20 செ.மீ. வரையிலும் கன முதல் மிக கனமழையும் பெய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.