மணிப்பூரில் மக்களை சந்திக்க ராகுலுக்கு தடை -ஹெலிகாப்டரில் பயணம்!

மணிப்பூரில் மக்களை சந்திக்க ராகுலுக்கு தடை -ஹெலிகாப்டரில் பயணம்!

ணிப்பூர் மாநிலத்தில் ராகுல் காந்தி வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்ற நிலையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் காவலர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, ராகுல் காந்தி தற்போது ஹெலிகாப்டரில் சூர்சந்த்பூர் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி பிரிவினர் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி போராடி வருகின்றனர். ஏற்கெனவே பழங்குடியினர் பட்டியலில் இருக்கும் குகி இனத்தவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். கடந்த மே மாதம் 3-ம் தேதி ‘பழங்குடியினர் ஒற்றுமை பேரணி’யை மைதேயி பிரிவினருக்கு எதிராக குகி இனமக்கள் நடத்தினர். அப்போது வன்முறை வெடித்தது. அன்று முதல் அங்கு தொடர்ந்து வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. 100 பேர் இதுவரை கலவரங்களில் உயிரிழந்துள்ளனர். மணிப்பூர் முழுவதும் தற்போது 300 நிவாரண முகாம்களில் 50 ஆயிரம் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, இன்று காலை ராகுல் காந்தி சூர்சந்த்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அந்தப் பகுதி மேய்த்தி – குகி இனக் கலவரத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாகும். அப்போது மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பிஷ்ணுபூர் பகுதியில் ராகுல் காந்தியின் பாதுகாப்பு வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டது. இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர். போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.

ராகுல் தடுத்து நிறுத்தப்பட்டது குறித்து பிஷ்ணுபூர் காவல்துறை கண்காணிப்பாளர் கூறுகையில், “ராகுலின் வாகனத்தை பாதுகாப்புக் காரணங்களுக்காகவே தடுத்து நிறுத்தியுள்ளோம். அவருடைய பாதுகாப்பு வாகனத்தை கலவரக்காரர்கள் அணிவகுத்து வரும் வாகனம் என்று பாதுகாப்புப் படையினர் தவறாக நினைத்துவிடக் கூடும். இதனால் பிரச்சினைகள் ஏற்படலாம். எங்களுக்கு ராகுல் காந்தியின் பாதுகாப்பு முக்கியம். அதனால், அவரை முன்னேறிச் செல்ல அனுமதிக்க முடியாது” என்றார். இந்நிலையில், காவல் துறையினரின் அறிவுறுத்தலின்படி ராகுல் காந்தி ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டுச் சென்றார். அங்கு ராகுல் காந்தி பல்வேறு நிவாரண முகாம்களுக்குச் செல்கிறார். மக்களிடம் நேரடியாகப் பேசி கலவரம் பற்றி கள ஆய்வு மேற்கொள்ளவிருக்கிறார்.

error: Content is protected !!