சீன ஓபன் பேட்மிண்டன் – சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் சிந்து!
புஸ்ஹொவ் நகரில் நடைபெற்ற சீன ஓபன் பேட்மிண்டன் தொடரில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற 7-ம் நிலை வீராங்கனையான இந்தியாவின் பிவி சிந்து 8-ம் நிலை வீராங்கனையான சீனாவின் சன் யுவை எதிர்கொண்டார். போட்டியின் தொடக்கம் முதலே பிவி சிந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிந்து முதல் செட்டை 21-11 என்ற கணக்கில் கைப்பற்றினார். சீன வீராங்கனைகள் ஆதிக்கம் நிறைந்த போட்டியில் 17 நிமிடங்களில் முதல் செட்டை கைப்பற்றினார்.

இரண்டாவது செட்டிலும் பிவி சிந்து ஆதிக்கம் செலுத்தி, ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் உள்ளூர் வீராங்கனையான சன் – யுவின் கை ஓங்கியது. 11-7 என்ற புள்ளிக் கணக்கில் சிந்து முன்னிலை பெற்று இருந்த நிலையில் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு பெற்ற சன் யு தொடர்ச்சியான புள்ளிகளை தன்வசப்படுத்த தொடங்கினார். 14-15 என்று கணக்கில் சிந்து பின்தங்கியதையடுத்து சன் யு பக்கம் ஆட்டம் சென்றது. இறுதியில் சன் யு 17-21 என்ற கணக்கில் ஆட்டத்தை கைப்பற்றினார்.
இதனையடுத்து ஆட்டம் வெற்றியை நிர்ணயம் செய்யும் மூன்றாவது செட்டை நோக்கி சென்றது. இதில் மீண்டும் சுதாரித்து ஆடிய பிவி சிந்து, சன் யுவை தோற்கடித்தார் 21-11 என்ற கணக்கில். 10-6 என்ற புள்ளிகளில் முன்னிலைப் பெற்ற சிந்து தொடர்ச்சியாக புள்ளிகளை தன்வசப்படுத்தி சாம்பியன் பட்டம் வென்றார். பிவி சிந்து பெற்ற முதல் சூப்பர் சீரியஸ் பட்டம் இதுவாகும்.
முன்னதாக கடந்த 2014-ம் ஆண்டு இந்தியாவின் மற்றொரு நம்பிக்கை வீராங்கனை சாய்னா நெக்வால் சீன ஓபன் பேட்மிண்டன் பட்டம் வென்றார். 2015-ம் ஆண்டு இறுதிப்போட்டி வரையில் சென்ற சாய்னா, உள்ளூர் வீராங்கனையான லீ சூய்ருவிடம் தோல்வி அடைந்தார். 2016-ம் ஆண்டு மீண்டும் ஒரு இந்திய வீராங்கனை பிவி சிந்து இந்த சாம்பியன் பட்டத்தை வென்று உள்ளார். பிவி சிந்துவிற்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.


