வங்கிகளின் ‘ஆப்’ தகிடுதத்தங்களுக்கு முற்றுப்புள்ளி! – களம் இறங்கியது ரிசர்வ் வங்கி!
ஸ்மார்ட்போன் வந்த பிறகு பேங்கிங் சேவைகள் அனைத்தும் கைக்குள் வந்துவிட்டன. ஆனால், அதே வேகத்தில் டிஜிட்டல் மோசடிகளும், தேவையற்ற விளம்பரத் தொல்லைகளும் அதிகரித்துள்ளன. இதனைத் தடுக்கும் பொருட்டு, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தற்போது டிஜிட்டல் வங்கிச் சேவை விதிமுறைகளை அதிரடியாகக் கடுமையாக்கத் திட்டமிட்டுள்ளது. வங்கிகளின் இஷ்டத்திற்கு இனி ஆப்-களில் எதையும் விற்க முடியாது என்ற நிலையை RBI உருவாக்கியுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள் இதோ.
மூன்றாம் தரப்பு தயாரிப்புகளுக்குத் தடை:
வங்கிகள் தங்கள் மொபைல் ஆப் (Mobile App) மற்றும் இணையதளங்களில் தங்களுடைய துணை நிறுவனங்களின் (Affiliates) காப்பீடு அல்லது பிற நிதித் தயாரிப்புகளைத் திணிப்பதாகப் புகார்கள் எழுந்தன. புதிய விதிமுறைகளின்படி, பிற நிறுவன தயாரிப்புகளை வங்கிகளின் டிஜிட்டல் தளங்களில் விளம்பரப்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் குழப்பமடைவது தவிர்க்கப்படும்.

முன் அனுமதி கட்டாயம்:
இனி வங்கிகள் எந்தவொரு புதிய டிஜிட்டல் வசதியையோ அல்லது புதுமையான முயற்சிகளையோ அறிமுகப்படுத்த விரும்பினால், அதற்கு முன்னதாகவே இந்திய ரிசர்வ் வங்கியிடம் முறையான அனுமதி பெற வேண்டும். “முதலில் அறிமுகப்படுத்திவிட்டு அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்” என்ற வங்கிகளின் போக்கிற்கு இதன் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளரின் ‘சம்மதம்’ மிக முக்கியம்:
வாடிக்கையாளர்களுக்குத் தெரியாமல் டிஜிட்டல் சேவைகளை ஆக்டிவேட் செய்வது இனி முடியாது. எந்தவொரு டிஜிட்டல் சேவையை வழங்குவதற்கு முன்பும், வாடிக்கையாளரிடம் இருந்து தெளிவான மற்றும் நேரடியான சம்மதத்தைப் (Explicit Consent) பெறுவதை RBI கட்டாயமாக்கியுள்ளது.
பாதுகாப்பு உறுதி:
இந்த மாற்றங்கள் அனைத்தும் வாடிக்கையாளர்களின் தரவுப் பாதுகாப்பு (Data Privacy) மற்றும் நிதிப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே கொண்டுவரப்படுகின்றன. இதன் மூலம் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தச்சை குமார்


