காவிச் சட்டை போட்டவர்களையும் தன்னைப் பற்றிப் பேச வைத்துவிட்ட பெரியார் பெரிய ஆள்தான்!

காவிச் சட்டை போட்டவர்களையும் தன்னைப் பற்றிப் பேச வைத்துவிட்ட பெரியார் பெரிய ஆள்தான்!

(ப்போது சனாதனம் பற்றி உதயநிதி பேசிய பேச்சு, அனைத்திந்திய அளவில் – பிரதமர் வரை ஒரு மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. இந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் சென்ற ஆண்டு மனுதர்மம் பற்றி ஆ. ராசா பேசிய பேச்சும் ஒருவித அதிர்வை ஏற்படுத்தவே செய்தது. அந்தச் சமயத்தில், ‘மெட்ராஸ் பேப்பர்’ டிஜிடல் வார இதழில் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். உதயநிதி – ஆ. ராசா ஆகிய இருவரின் பேச்சுகளினால் ஏற்பட்ட அதிர்வலைகளில் வித்தியாசம் இருந்தாலும் அடிநாதம் ஒன்றே. அதனால்தான், அப்போது நான் எழுதிய கட்டுரையை, இங்கே மீள்பதிவு செய்கிறேன்)

’நீங்கள் எப்போது பார்த்தாலும் கடவுள் இல்லை; இல்லை என்றே சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே, ஒருநாள் கடவுள் உங்கள் முன்னால் வந்து நின்றால் என்ன செய்வீர்கள்?’ என்று பெரியாரிடம் ஒருவர் கேட்டார்.

‘கடவுளே நேரில் வந்த பிறகு எனக்கென்ன பிரச்னை? கடவுள் இருக்கிறார் என்று பிரசாரம் செய்வேன்’ என்று சர்வசாதாரணமாகப் பதில் சொல்லி, கேட்டவரின் வாயை அடைத்துவிட்டார் பெரியார். பெரியார் எப்போதுமே தான் சொல்வதை அனைவரும் அப்படியே கண்ணை மூடிக் கொண்டு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பிரசாரம் செய்ததேயில்லை. ‘நான் சொல்வதை உங்கள் பகுத்தறிவைக் கொண்டு சிந்தித்துப் பாருங்கள்; சரியென்றால் ஏற்றுக் கொள்ளுங்கள்; இல்லையென்றால் விட்டுத் தள்ளுங்கள்’ என்றுதான் பிரசாரம் செய்தார்.உள்ளீடுள்ள இரும்புக் குண்டுகளைச் சம்மட்டியால்கூட உடைக்க முடியாது என்பதுபோல, உள்ளீடுள்ள பெரியாருடைய கருத்துக்களை, உள்ளீடுகளற்ற சனாதனிகளின் கருத்துக்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இன்றைக்கும் அவர் பேசுபொருளாகவே இருப்பதற்கு அதுதான் காரணம்.

அதுசரி, இன்றைக்கு என்ன பிரச்னை? ‘மனுதர்ம சாஸ்திரம்’தான் பிரச்னை. அதிலிருக்கும் எட்டாவது அத்தியாயத்திலுள்ள 415 வது ஸ்லோகம்தான் இப்போது பேசுபொருளாகியிருக்கிறது. அப்படி அதில் என்னதான் சொல்லப்பட்டிருக்கிறது?

‘யுத்தத்தில் ஜெயித்துக் கொண்டுவரப்பட்டவன், பக்தியினால் வேலை செய்கிறவன், தன்னுடைய தேவடியாள் மகன், விலைக்கு வாங்கப்பட்டவன், ஒருவனால் கொடுக்கப்பட்டவன், குலவழியாகத் தொன்றுதொட்டு வேலை செய்கிறவன், குற்றத்திற்காக வேலை செய்கிறவன் என தொழிலாளிகள் ஏழு வகைப்படுவர்.’ -இதுதான் மனு எழுதிய ‘மனுஸ்மிருதி’யிலுள்ள அந்த ஸ்லோகத்திற்கான தமிழ் மொழிபெயர்ப்பு. இதைத்தான் மேடைதோறும் பேசினார் பெரியார். குறிப்பாக ‘தேவடியாள் மகன்’ என்பதை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். அன்று அவர் பேசியதை, அண்மையில் திமுகவைச் சேர்ந்த ஆ. ராசா எடுத்துப் பேச, வெடித்தது பிரச்னை. ‘இது பெரியார் சொல்லும் அர்த்தம். உண்மையான அர்த்தம் இதுவல்ல’ என்று சனாதனிகள் கொதிக்க ஆரம்பித்துவிட்டனர். அந்த ஸ்மிருதியை எழுதிய மனு எந்த அர்த்தத்தில் எழுதினார்? எதற்காக எழுதினார்? யாருக்காக எழுதினார்? இதை முதலில் தெரிந்து கொள்வோம்.

பண்டைக் காலத்தில் ‘ஸ்ருதிகள்’ என்று சொல்லப்படும் வேதங்களைத்தான் ‘கடவுளின் பாஷை’ என்று ஆரியர்கள் பிரசாரம் செய்தார்கள். “வேதங்களில் எல்லாம் இருப்பதாகச் சொல்லுவார்கள். அவை, போர்கள் செய்வது பற்றியும் வேள்விகள் செய்வது பற்றியும் வேண்டுதல்கள் பற்றியுமே பேசுகின்றன. ஆனால் ஸ்மிருதிகள் என்பவை, செயல்படுத்துவதற்கான சட்டதிட்டங்களைச் சொல்கின்றன” என்கிறார் பேராசிரியர் அ. கருணானந்தன்.

‘ஸ்மிருதிகள் சட்டங்களல்ல’ என்று சனாதனிகள் உறுதியாக மறுக்கிறார்கள். அப்படியானால், அவை எதற்காகத் தோன்றின? ஸ்மிருதிகளின் தோற்றம், காலம், அவை எதற்காக, யாரால் தோற்றுவிக்கப்பட்டன என்ற கேள்விக்கு, பிபிசிக்கு அளித்த ஒரு பேட்டியில் விரிவாகப் பேசியுள்ளார் பேராசிரியர் கருணானந்தன்.

“பிராமணர்கள், ஆரியர்கள் என்ற இரு பதங்களையும் ஒன்று போல பாவித்து குழப்பிக் கொள்கிறார்கள். ஆரியர்கள் என்பது இனத்தைக் குறிக்கும் சொல். இந்தியாவுக்குள் ஆரியர்கள் வந்த தொடக்க காலத்தில் இங்கிருந்த மற்ற குடிகளோடு அவர்களுக்குத் தொடர்பு ஏதும் இருக்கவில்லை.அவர்கள் தங்கள் இனத்துக்குள்ளேயே மூன்று விதமான பிரிவுளை உருவாக்கிக் கொண்டனர்.அவர்களுக்கு அவர்கள் இனம்தான் உலகம் என்பதால் ஒட்டுமொத்த இனத்தையும் குறிக்க ‘விஸ்’ என்ற சொல்லைப் பயன்படுத்தினர். ‘விஸ்’ என்றால் உலகம் என்று பொருள். இந்த விஸ்ஸில் இருந்து சடங்குகளை நடத்துவதற்கான புரோகிதர்களைத் தேர்ந்தெடுத்தனர். இவர்கள் பிராமணர்கள் எனப்பட்டனர். பிறகு படைகளை நடத்துவதற்காக ‘ரஜனியர்கள்’ அல்லது ‘சத்திரியர்கள்’ என்பவர்களைத் தேர்ந்தெடுத்தனர். இவர்களைத் தவிர, மீதமிருந்த மற்ற பொதுமக்களைக் குறிக்க ‘வைஸ்யர்கள்’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. ‘விஸ்’ என்ற சொல்லில் இருந்தே வைஸ்யர்கள் என்ற சொல் பிறக்கிறது. ஆக, வைஸ்யர்கள் என்றால் உலகத்தார் என்று பொருள்” என்று சொல்கிறார் கருணானந்தன்.

“தொடக்கத்தில் முதல் இரண்டு வருணத்தார் பிறப்பின் அடிப்படையில் முடிவு செய்யப்படவில்லை. அவர்களைத் தேர்வுதான் செய்தார்கள். பிறகு, முதல் இரண்டு வருணங்ளில் இருந்தவர்கள் தங்கள் நிலைகளைத் தக்கவைத்துக் கொள்வதற்காக, இந்தப் பிரிவினையைப் புனிதப்படுத்தி, அதை நிரந்தரமானதாக, பிறப்பு அடிப்படையிலானதாக மாற்றிக்கொண்டனர்” என்கிறார் அவர். அதாவது ஆரிய இனத்துக்குள்ளேயே இருந்த சடங்குப் பிரிவு, படைப் பிரிவு, மற்ற பொதுமக்கள் என்பதே இந்த தொடக்க கால வருணப் பிரிவினை

அப்படியானால், நான்காவது வருணம் எப்படி வந்தது?

“ஆரியர்கள் நாடோடிகளாக, இடம் பெயர்ந்துகொண்டே இருந்தவரை முதல் மூன்று பிரிவினைகளே இருந்தன. கங்கைக் கரை முதலிய இடங்களை அடைந்து அவர்கள் நிரந்தரமாகக் குடியேறிய பிறகு, அவர்கள் நாகரிக சமூகத்தோடு தொடர்பு கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர்களில் சிலரை ஆள்வோராக ஏற்கவேண்டிய அவசியமும் ஏற்பட்டது.

“அந்த நிலையில் அவர்களைக் கட்டுப்படுத்தி, தங்களுக்கு ஏற்ற முறையில், ஆரிய பிராமணர்களின் தலைமையை ஏற்று ஆட்சி செய்ய வைப்பதற்காக உருவாக்கப்பட்ட சட்டதிட்டங்களே ஸ்மிருதிகள்” என்று கூறும் கருணானந்தன், “இவர்கள் புதிதாகத் தொடர்பு ஏற்படுத்திக்கொண்ட ஆரியர்கள் அல்லாத கருப்பு நிறம் கொண்ட மக்கள், ஏற்கெனவே நாகரிகம் மிகுந்தவர்களாக, கட்டடங்கள் கட்டுவது, கருவிகள் செய்வது உள்ளிட்ட பலவற்றை அறிந்தவர்களாக இருந்தனர். ஆரியர்கள் அல்லாத இந்த மக்களைக் குறிக்கவே ‘சூத்திரர்’ என்ற புதிய பிரிவை நான்காவதாக ஸ்மிருதிகள் இணைத்தன” என்கிறார்.

’சூத்திரம்’ என்றால் தொழில் திறம் (Technique) என்று பொருள். எனவே, சூத்திரம் அறிந்தவர்கள் சூத்திரர்கள்.

“அதுவரை ஆரியர்கள் பெரிய கட்டுமானங்களைக் கட்டத் தெரிந்திருக்கவில்லை. அதிகபட்சம் பர்ணசாலைகளே அவர்களது கட்டுமானங்கள். ஆகவே, தொழில்திறம் மிக்கவர்களான நாகரிக மக்களை வெற்றி கொண்டு அழிப்பதற்குப் பதிலாகப் பயன்படுத்திக் கொள்ளவே விரும்பினர். எனவே, அவர்களைத் தாங்கள் பயன்படுத்திக் கொள்வதோடு, அவர்களை எப்படி ஆள்வது என்பதையும் உள்ளடக்கிய விதிகளைக் கொண்டவையே ஸ்மிருதிகள்.

“உள்ளூர் மக்களில் சிலருக்கு ஆட்சி அந்தஸ்து தரும்போது அவர்கள் சத்ரியர்கள் என பிராமணர்களால் அங்கீகரிக்கப்பட்டார்கள். அவர்கள் இந்த ஸ்மிருதிகள் வகுத்த சட்டதிட்டங்களை ஏற்றே ஆட்சி புரிந்தார்கள்.

“அத்தகைய கருப்பு நிறம் கொண்ட உள்ளூர் ஆட்சியாளர்களே பிற்காலத்தில் ராமர், கிருஷ்ணர் போன்ற அவதாரக் கடவுளர்கள் ஆனார்கள். “பத்துக்கு மேற்பட்ட ஸ்மிருதிகள் இருப்பது தெரியும். ஆனால், இருநூறுக்கும் மேற்பட்ட ஸ்மிருதிகள் இருப்பதாகச் சொல்கிறார்கள். இவற்றில் ஒன்றுதான் மனு ஸ்மிருதி” என்பது கருணானந்தன் கருத்து.

இப்போது ஸ்மிருதிகள் சட்டங்களாக இல்லை என்பது உண்மைதான் என்றாலும் ஒருகாலத்தில் இருந்திருக்கின்றன என்பதை மெய்ப்பிக்கும் வகையில் மனுநீதிச் சோழன் இருக்கிறான். மனுநீதிப்படி அரசாண்டதால்தான் ‘எல்லாளன்’ என்கிற அவனுடைய இயற்பெயரே மறைந்துபோய், ‘மனுநீதிச் சோழன்’ என்கிற பெயரே நிலைத்து விட்டது.

சரி, ‘சூத்திரம் அறிந்தவர்கள் சூத்திரர்கள்’ என்று அவர்களை உயர்வாகத்தானே சொல்லியிருக்கிறார்கள். இதில் விமர்சிக்கவோ அவமானப்படவோ என்ன இருக்கிறது என்று கேட்கலாம். உண்மைதான். உழைக்கும் மக்களைப் புகழ்வதுபோல் புகழ்ந்தாலும் எந்த நிலையிலும் அவர்களைத் தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருப்பது அவசியமல்லவா? அதற்குத்தான் ‘ஸ்மிருதிகள்’ உருவாக்கப்பட்டன. அதில் ஒன்றுதான் மனுஸ்மிருதி.

இறுதியாக சர்ச்சைக்குரிய 415 வது ஸ்லோகத்திற்கு வருவோம். அதற்குப் பெரியார் சொல்லும் அர்த்தத்தை மறுப்பவர்கள் எப்படி அர்த்தம் சொல்கிறார்கள்?

த்வஜாஹாக்ருதோ பக்ததாஸோ க்ருஹஜ: க்ரிததத்ரிமெள/
பைத்ரிகோ தண்டதாஸச் ச சப்தைதே தாஸயோனய: // – இதுதான் அந்த ஸ்லோகம்

த்வஜாஹாக்ருதோ – போரில் வென்று சிறைபிடித்துக் கொண்டுவரப்பட்டவன்
பக்ததாஸோ – பக்தியுடன் தொண்டு செய்ய வந்தவன்
க்ருஹஜ: – பரம்பரை வேலையாட்களின் வாரிசுகள்
க்ரித: – விலைக்கு வாங்கப்பட்டவன்
தத்ரிம: – ஒருவரால் தானமாகக் கொடுக்கப்பட்டவன்
பைத்ரிகோ – பாகம் பிரிக்கும்போது, தந்தை வழியில் வந்த ஆதரவற்றவர்கள்
தண்டதாஸோ – ராஜாவினால் தண்டனை கொடுக்கப் பெற்று வேலை செய்பவன்
சப்தைதே தாஸயோனய: – இப்படியாக ஏழு காரணங்களினால் தாஸர்கள் வரிசைப்படுத்தப்படுகிறார்கள்.

இதில், ‘பைத்ரிகோ – பாகம் பிரிக்கும்போது, தந்தை வழியில் வந்த ஆதரவற்றவர்கள்’ என்பதுதான் விவாதத்துக்குரியதாக மாறியிருக்கிறது. ‘தந்தை வழியில் வந்த ஆதரவற்றவர்கள்’ என்றால் அவர்கள் யார்? புண்ணை மூடி மறைக்கத்தான் இப்படிப் புனுகு பூசுகிறார்களா?

பெரியார் ஒன்றும் சமஸ்கிருதப் பண்டிதர் அல்லர். அப்படி அவர் சொல்லிக் கொண்டதும் இல்லை. அதனால்தான், திருவந்திரபுரம் – கோமாண்டூர் – இளையவில்லி இராமாநுஜாசாரியர் என்னும் சமஸ்கிருதப் பண்டிதர் தமிழில் மொழி பெயர்த்த மனுதர்ம சாஸ்திரத்திலுள்ளதை மட்டுமே பெரியார் எடுத்துப் பேசினார். சரி, இராமாநுஜாசாரியார் சரியாகத்தான் மொழி பெயர்த்திருக்கிறாரா? ‘இளையவில்லி கெளசிக இராமாநுஜாசாரியாரென்னும் பண்டிதரால் தமிழில் வசநரூபமாக மொழிபெயர்க்கப்பட்ட மநுதர்ம நூலை வூகூளாபரணம், ஸோமயாஜி வேதாந்தாசாரியரென்னும் பண்டிதனாகிய யான் பார்வையிட்டதில் மிகவும் சிறந்ததாயும் மூலஸ்மிருதிக்குச் சரியான பொருளுள்ளதாயும் இருக்கின்றது’ என புதுவை சமாதாநநீதியில் தருமசாஸ்திராலோசனை மெம்பராகிய வே. வேததாந்தாசாரியர் வழிமொழிந்திருக்கிறார்.

இப்படிப்பட்ட மொழிபெயர்ப்பில், ‘தன்னுடைய தேவடியாள் மகன்’ என்றுதான் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இவர்கள் சொல்வதுபோல், ‘பாகம் பிரிக்கும்போது, தந்தை வழியில் வந்த ஆதரவற்றவர்கள்’ என்று மொழிபெயர்க்கப்படவில்லை. இன்றைக்குப் பெரியாருக்கும் ஆ.ராசாவுக்கும் எதிராக வெகுண்டெழுந்து சீறும் சனாதனிகள், பண்டிதர் இராமாநுஜாசாரியர் அப்படி மொழிபெயர்த்தது இமாலயத் தவறு என்று ஏன் சொல்ல மறுக்கிறார்கள்? காரணம், சனாதனிகளின் உண்மையான நோக்கம், பெரியாரைத் திட்டுவதுதானே தவிர, உண்மையைக் கண்டடைவதல்ல. எப்படியோ, கறுப்புச் சட்டை போட்டவர்களோடு, காவிச் சட்டை போட்டவர்களையும் தன்னைப் பற்றிப் பேச வைத்துவிட்ட பெரியார் பெரிய ஆள்தான்!

செ. இளங்கோவன்

error: Content is protected !!