தொடரும் சிட்டுக்குருவி லேகியம் என்னும் பதஞ்சலி!
பதஞ்சலியின் மருந்துகள் ரத்த அழுத்தத்தை குணமாக்கும், நீரிழிவு நோயை குணமாக்கும் என்றெல்லாம் பில்டப் செய்த விளம்பரங்கள் தொடர்ந்து வருகின்றன. இந்த ஃப்ராடுத்தனத்தை விமர்சித்து நானே முன்பு பதிவுகள் எழுதி இருக்கிறேன்.++ ஆனாலும் எந்தத் தடையும் இன்றி அவர்கள் இந்த ஃப்ராடைத் தொடர்ந்து கொண்டு இருந்தார்கள். அதற்கு ஒரு முடிவு வந்திருக்கிறது. இது தொடர்பாக இந்திய மருத்துவ இணையம் (IMA) தொடர்ந்திருந்த ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் சென்ற வாரம் தெரிவித்திருந்த கருத்தில், இப்படிப்பட்ட தவறான விளம்பரங்களை வெளியிடுவதை நிறுத்துமாறு எச்சரிக்கை விடுத்திருந்தது. பதஞ்சலியின் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் அந்த எச்சரிக்கையை ஏற்றுக் கொண்டிருந்தாலும், பாபா ராம்தேவ் வெளியே வேறு மாதிரி பேசுகிறார். நீதிமன்ற எச்சரிக்கைக்கு சில நாட்கள் கழித்து நிகழ்ந்த ஊடக சந்திப்பில் ‘இந்திய மருத்துவ இணையம் யோகா, ஆயுர்வேதம், இயற்கை மருத்துவம் போன்ற சனாதன விழுமியங்களுக்கு எதிராக இயங்கி வருகிறது,’ என்று குற்றம் சாட்டி இருக்கிறார். அதே சந்திப்பில் ‘பதஞ்சலியின் மருந்துகள் தைராயட், உயர் ரத்த அழுத்தம், உடற்பருமன், அனைத்தையும் குணப்படுத்தும். டைப் 1 டயபிடிஸ்சையே குணப்படுத்தும் வல்லமை கொண்டவை,’ என்று கூறி இருக்கிறார்.
முதல் பட்டியலில் குறிப்பிட்டிருந்தவை வாழ்வுத்தரம்-சார்ந்த நோய்கள். அதிலாவது உடற்பயிற்சி, சில பல வகை வாழ்வுமுறை மாற்றங்களில் அவற்றின் தீவிரத்தைக் குறைக்க முடியும். கூடவே அவர்கள் சூரணத்தை தலையில் கட்டி விட்டு, இதனால்தான் முன்னேற்றங்கள் தெரிந்தன என்று பில்டப் செய்து விடலாம். ஆனால் டைப் 1 டயபிடிஸ் என்பது auto-immune-சார்ந்த நோய். அதாவது பிறவியிலேயே சில குறைபாடுகளினால் ஏற்படும் விஷயம். இதையெல்லாம் கூட குணப்படுத்துகிறோம் என்று சொல்வது மிக ஆச்சரியம். ஒன்று, பாபா ராம்தேவுக்கு டைப் 1க்கும் டைப் 2வுக்கும் இடையில் இருக்கும் வித்தியாசமே தெரியவில்லை. அல்லது ஜாலியாக வாய்க்கு வந்ததை அடித்து விடுகிறார். ‘சும்மா கேளு. அண்ணன் கிட்டேதானே கேக்குற’ மொமென்ட். அப்படியே கான்சர், அல்செய்மர்ஸ். டிமென்ஷியா, ALS என்றும் சேர்த்துக் கொள்ளலாம். வாயில் சுடுகிற வடைதானே? எத்தனை சுட்டால் என்ன?
இதெல்லாம் போதாது என்று வீராவேசம் வேறு கொண்டிருக்கிறார். ‘நாங்கள் பொய்ப் பிரச்சாரத்தில் ஈடுபடுவதில்லை. எங்கள் கூற்றுகள் பொய் என்றால் என்னைத் தூக்கில் போடுங்கள்,’ என்றும் உச்ச நீதிமன்றத்தை நோக்கி ஆவேசம் காட்டி இருக்கிறார். ‘எங்களுக்கு எதிராக மெடிக்கல் மாஃபியா இயங்குகிறது,’ என்றும் குற்றம் சாட்டி இருக்கிறார். இந்த சினிமா டயலாக் எல்லாம் இருக்கட்டும். எனக்கு ஒரு கேள்வி வருகிறது. உண்மையிலேயே பதஞ்சலியின் மருந்துகள் மேற்சொன்ன நோய்களை எல்லாம் முழுமையாக குணப்படுத்துகின்றன என்றால் இந்திய மருத்துவ இணையத்துடன் எதற்கு ராம்தேவ் லாவணி பாடிக்கொண்டிருக்க வேண்டும்?
தங்களிடம் உள்ள ஆதாரங்களையெல்லாம் இணைத்து நேரடியாக அமெரிக்க சிடிசி-க்கும், FDAக்கும் விண்ணப்பம் அனுப்பலாம். யோகா, ஆயுர்வேதம் போன்றவற்றுக்கு மிகவும் ஆதரவாக இயங்கும் அரசுதான் மத்தியில் இருக்கிறது. அவர்களுக்கும் அனுப்பலாம். Lancet, British Medical Journal, Scientific American போன்ற மருத்துவ இதழ்களுக்கு தங்கள் ஆய்வுக் கட்டுரைகளை அனுப்பலாம். அவை பதிப்பானால் உலகம் முழுக்க கவனம் பெறும். பிபி, சுகர், தைராய்ட், Type 1 Diabetes இவற்றை எல்லாம் குணமாக்கும் மருந்துகளை பதஞ்சலி உருவாக்கி இருக்கின்றனர் என்றால் ராம்தேவின் மற்றும் ஆயுர்வேதாவின் புகழ் திக்கெட்டும் பரவும். இந்த ஆண்டுக்கான மருத்துவம், இயற்பியல், வேதியியல் எல்லாம் சேர்த்து மூன்று நோபல் பரிசுகள் பாபா ராம்தேவ்வுக்கும் ஆச்சார்ய பால கிருஷ்ணாவுக்கும் கிடைக்கும் சாத்தியக்கூறும் இருக்கிறது.
பெனிசிலின் கண்டுபிடித்த அலெக்ஸாண்டர் ஃபிளெமிங், ரேடியோதெரபி கண்டுபிடித்த மேரி க்யூரி போன்றோர் வரிசையில் பாபா ராம்தேவ் இடம் பெறலாம். இதையெல்லாம் செய்வதை விட்டு விட்டு எதற்காக இந்திய மருத்துவ இணையத்துடன் பஞ்சாயத்து செய்து கொண்டிருக்க வேண்டும்? ‘தவறு செய்திருந்தால் எங்களை தூக்கில் போடுங்கள்!’ என்று சினிமா வசனமெல்லாம் எதற்குப் பேச வேண்டும்?
பயப்படுறியா குமாரு?