பரமசிவன் பாத்திமா – விமர்சனம்!

சேரன் நடித்த ‘தமிழ்க்குடிமகன்’ படத்தை டைரக்ட் செய்த இசக்கி கார்வண்ணன், லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்து இயக்கிய திரைப்பட ‘பரமசிவன் பாத்திமா’.இதில் விமல் கதையின் நாயகனாக நடித்துள்ளார். சாயா தேவி நாயகியாக நடித்துள்ளார்.எம். எஸ். பாஸ்கர், மனோஜ் குமார், ஸ்ரீ ரஞ்சனி, ஆதிரா, அருள்தாஸ், சேஷ்விதா ராஜு, கூல் சுரேஷ், காதல் சுகுமார், வீரசமர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மைனா சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, தீபன் சக்கரவர்த்தி இசை அமைத்துள்ளார்.இந்தப் படம் தமிழ்நாட்டில் உள்ள ஒரு பகுதியில் கிறிஸ்தவர்களாக மதம் மாறியவர்களுக்கும் மதம் மாறாத இந்துக்களுக்கும் இடையிலான மோதலைச் சொல்லும் கதையாக உருவாகியுள்ளது. முன்னதாக இந்த படம் கிறிஸ்தவ மக்களை புண்படுத்துவதாக ஏற்கனவே புகார் வந்துள்ள நிலையில் படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்துக்கு சான்றிதழ் தர மறுத்து விட்டனர்.பின்னர் தயாரிப்பு தரப்பு படத்தை மறு தணிக்கைக்கு கொண்டு சென்ற நிலையில் படத்தைப் பார்த்த மறு தணிக்கை குழுவினர் ஒரு சில காட்சிகள் வசனங்களை நீக்க சொல்லி ‘ஏ’ சான்றிதழ் கொடுத்து ரிலீஸ் செய்ய வழி செய்தது.
அதாவது மலையோர கிராமம் ஒன்றில் சுப்ரமணியபுரம் மற்றும் யோக்கோபுரம் என இரண்டு ஊர்கள் இருக்கிறது. சுப்ரமணியபுரம், இந்துக்கள் வழிபடும் இடமாகவும் யோக்கோபுரம் கிறிஸ்தவர்கள் வழிபடும் இடமாகவும் இருக்கிறது. இந்த ஊர்களுக்கு இடையே அடிக்கடி மத சம்பந்தப்பட்ட மோதல்கள் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இதற்கிடையே இந்த இரு ஊரை சேர்ந்த கலையரசன், கூல் சுரேஷ் மற்றும் இரு நபர்கள் திருமணம் செய்ய ஆயத்தம் ஆகிறார்கள். அந்த சமயம் அவர்கள் அனைவரும் நாயகன் விமல் மற்றும் நாயகி சாயாதேவியால் மர்மமான முறையில் கொல்லப்படுகின்றனர். இந்த மரணங்களை பற்றி இன்ஸ்பெக்டர் இசக்கி கார்வண்ணன் தலைமையில் போலீஸ் படை துப்பறிய ஆரம்பித்து செய்தது விமலும் சாயா தேவியும்தான் என போலீசார் கண்டுபிடிக்கின்றனர். பிறகு அவர்களைப் பிடிக்க செல்லும் இடத்தில் விமல் சாயாதேவி யார் என அதிர்ச்சிகரமான உண்மை போலீஸுக்கு தெரிய வருகிறது. இதனால் மிகவும் அதிர்ச்சிகரமான போலீசார் அடுத்தும் நடக்க இருந்த கொலைகளை தடுத்து நிறுத்தினார்களா? இல்லையா? உண்மையில் விமல், சாயாதேவி யார்? என்பதே பரமசிவன் பாத்திமா படத்தின் கதை.
சமீபகாலமாக தெளிவாகி வரும் விமல் கதைக்கு ஹீரோ என்றில்லாமல் மெயின் கேரக்டராக நடித்து கவர்கிறார். ஹீரோயின் சாயாதேவி பர்ஃபெக்டான சாய்ஸ். கிடைத்த ரோலின் வலுவை புரிந்து ஸ்கோர் செய்கிறார் இவருக்கும் விமலுக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க்அவுட் ஆகியிருக்கிறது.
சரச் ஃபாதர் வேடத்தில் வரும் எம்.எஸ். பாஸ்கர் வழக்கம் போல் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெற்று இருக்கிறார். ஆனாலும் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் இசக்கி கார்வண்ணன் பேச்சின் ஸ்டைலும் , போக்கும் புரியவுமில்லை, எடுபடவும் இல்லை. எம்.சுகுமார், கடுப்பேற்றும் கோமாளி கூல் சுரேஷ், மனோஜ்குமார், ஆதிரா, சேஷ்விதா, ஸ்ரீரஞ்சனி, வி.ஆர்.விமல்ராஜ், மகேந்திரன், காதல் சுகுமார், ஆறு பாலா, வீரசமர், களவாணி கலை உள்ளிட்ட பலர் தங்களால் முடிந்த பங்களிப்பை வழங்கி இருக்கிறார்கள்.
தீபன் சக்கரவர்த்தி இசையில் பாடல்களும், பின்னணி இசையும் பெட்டர்.
கேமராமேன் எம்.சுகுமார் நடிக்கவும் செய்திருப்பதால், ஒளிப்பதிவில் போதிய அக்கறைக் காட்டவில்லை. சில ட்ரோன் ஷாட்ஸ், ஊர் மக்கள் சண்டைப் போடுவதற்காகவே இருக்கும் ஒரு தெரு, சில வனப்பகுதிகள் என்று குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் கேமரா திரும்ப திரும்ப ட்ராவல் செய்ய வைத்து சமாளித்துள்ளார்.
இப்படத்துக்கான கதையை எழுதி டைரக்ட் பண்ணி இருக்கும் இசக்கி கார்வண்ணன், இந்து மதம் தான் உயர்ந்தது, மற்றவை பணம் கொடுத்து மக்களை தங்கள் பக்கம் இழுக்கிறது என்பதையும், அப்படி இழுக்கப்பட்ட பலர் பெயர் அளவில் மட்டுமே மதம் மாறியிருக்கிறார்களே தவிர மனதளவில் மாறவில்லை என்பதையும் எந்த மதமாக இருந்தாலும் அனைவரும் ஒன்றுதான் என்பதை பிரச்சார பாணியில் சொல்லியிருக்கிறார்.. ஆனால் இந்த விஷயத்தை இவ்வளவு செலவில் சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்றுதான் புரியவில்லை!
மார்க் 1.5/5