படை தலைவன் விமர்சனம்!

படை தலைவன் விமர்சனம்!

‘கடவுளின் தலைசிறந்த படைப்பு யானை’ என்பார் பிரிட்டிஷ் கவிஞர் ஜான்டோன். யானையின் சிறப்புகளை அறியும்போது மனதை மேலும் ஆக்கிரமித்துவிடுகிறது. மனிதனுக்கு அடுத்து அறிவில் சிறந்தவையாக யானைகள் இருக்கின்றன. நினைவாற்றல், மகிழ்ச்சி, பிரிவு, இரக்கம், கோபம், அழுகை, விளைவுகளை எதிர்நோக்குவது போன்ற சிறப்பான குணங்கள் அதற்கு இருக்கின்றன. புயல் வருவதைக்கூட முன்கூட்டியே உணரும் தன்மையை யானை பெற்றிருக்கிறது. இன்று நிலத்தில் வாழும் உயிரினங்களில் ஆகப்பெரியது யானைதான். நான்கு முழங்கால்களை கொண்ட ஒரே உயிரினமும் அதுவே.அப்படியாப்பட்ட யானையையும், யானை மீது பாசம் கொண்ட நாயகனையும் வைத்து கதை சொல்லி இருப்பதே படை தலைவன்,

அதாவது கிராம பகுதியில் தந்தை கஸ்தூரி ராஜாவுடன் வசிக்கிறார் சண்முக பாண்டியன். அவர்கள் ஒரு யானையும் வளர்க்கின்றனர். கடனில் தவிக்கும் கஸ்தூரிராஜாவின் துன்பத்தை போக்க யானையை விழாக்களுக்கு அழைத்து செல்கிறார் சண்முக பாண்டி. அங்கு சிலர் சதி செய்து யாரனைக்கு மதம் பிடிக்க வைக்கின்றனர். இதையடுத்து யானையை காட்டிலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்கின்றனர். யானையை மீட்க தந்தையும் மகனும் கோர்ட் படிகளில் ஏறுகின்றனர். திடீரென்று யானை காணாமல் போய்விட்டதாக காட்டிலாகா அதிகாரி கூறுகிறார். அதை ஏற்க மறுக்கும் சண்முக பாண்டியன் யானையை தேடி கண்டுபிடித்து அழைத்து வர புறப்படுகிறார். அதேசமயம் சண்முக பாண்டியனை கொலை செய்ய ஒரு கூட்டம் சுற்றி அலைகிறது. அதற்கு காரணம் என்ன? யானையை சண்முக பாண்டியனால் கண்டுபிடிக்க முடிந்ததா என்பதுதான் இப்படக் கதை.

மறைந்த கேப்டன் மகன் சண்முக பாண்டியன் ‘. புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்பதை போல் அப்பா விஜயகாந்த்தை போல் அதிரடி ஆக்ஷன் காட்சியில் அதகளம் செய்துள்ளார் . தனது முந்தைய படங்களை விட ஓரளவு நடிப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். தனது மாமாவை தட்டி கேட்பது, அதிகாரியிடம் யானைக்காக கெஞ்சுவது என ஒரு சில காட்சிகளில் சண்முக பாண்டியனின் நடிப்பு நன்றாகவே உள்ளது. ஆனால் இவரது நடிப்பு ஓரளவு சிறப்பாக இருந்தும் சரியான கதையையும், திரைக்கதையும் டைரக்டர் அன்பு இப்படத்தில் வைக்காததால், சண்முக பாண்டியனின் நடிப்பை முழுமையாக ரசிக்க முடியவில்லை. குறிப்பாக உணர்வுப்பூர்வமான காட்சிகளில் அவரது எக்ஸ்பிரஷன் மற்றும் உடல் மொழி பெரிதாக எடுபடவில்லை. உடல் எடையை குறைப்பதற்காக கடினமாக உழைத்தது போல், நடிப்பில் தேர்ச்சி பெறவும் கொஞ்சம் உழைத்தால் நல்லது.

ஹீரோ சண்முக பாண்டியனின் தந்தையாக நடித்திருக்கும் இயக்குநர் கஸ்தூரி ராஜா, பழங்குடியின பெண்ணாக நடித்திருக்கும் யாமினி சந்தர், வில்லனாக நடித்திருக்கும் கருடன் ராம், ரிஷி, முனிஷ்காந்த், யோகி சேது, ஸ்ரீஜித் ரவி, அருள்தாஸ், என்.பி.கே.எஸ்.லோகு, ஏ.வெங்கடேஷ் ஆகியோர் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

இளையராஜா இசையமைத்திருக்கிறார் என்பது டைடில் கார்டில் மட்டுமே தெரிகிறதே தவிர, பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் தெரியவில்லை.

கேமராமேன் எஸ்.ஆர்.சதிஷ் குமாரின் கேமரா கிராமத்து பகுதிகளை அழகாகவும், ஆக்‌ஷன் காட்சிகளை அதிரடியாகவும் படமாக்கியிருக்கிறது. திருப்பங்கள் இல்லாத திரைக்கதையில், அடுத்தது என்ன நடக்கும்? என்பதை பார்வையாளர்களின் யூகங்களுக்கு ஏற்ப தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் எஸ்.பி.அஹமத்.

எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் யு.அன்பு, வெளிநாட்டு படமாகவும், நம்ம உள்ளூர் படமாகவும் ஏற்கனவே நாம் பார்த்த/கேட்ட கதையை அவரது பாணியில் கொடுக்க முயற்சித்திருக்கிறார். தனது யானையை காப்பாற்ற போராடும் ஒரு நாயகனின் பயணத்தை, ஆக்‌ஷன் மற்றும் உணர்வுப்பூர்வமாக சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குநர் யு.அன்பு, அழுத்தம் இல்லாத திரைக்கதை மற்றும் சுவாரஸ்யம் இல்லாத காட்சிகள் மூலம் சொல்லியிருப்பதால் படம் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அதிலும் இரண்டாம் பாகக் கதை ஒடிஷாவில் உள்ள மலைக் காட்டுக்குச் சென்றுவிடுகிறது. அங்கு காட்டில் அராஜகம் செய்யும் வில்லன்களோடு மல்லுக்கட்டுவது என்று திரைக்கதையின் போக்கு மாறுகிறது. முதலில் ஒடிஷாவுக்கு யானை எப்படி சென்றது? நாயகனின் தலைக்கு அவ்வளவு பணம் விலை வைப்பது யார்? பிறகு அவர்கள் என்ன ஆனார்கள் போன்ற கேள்விகளுக்கு யாருமே பதில் சொல்லாமல் தியேட்டரை விட்டு வெளியே வரும்போது இரண்டரை மணி விரயமாகி விட்டது என்பதை நினைத்து கவலை ஏற்பட்டுதான் நிஜம்.

மார்க் 2.25/5

error: Content is protected !!