கள்ளச்சாராய ஆறுகளின் குற்றப்பத்திரிக்கையில் A1 குற்றவாளியாக நமது கலாச்சார தூய்மைவாதிகள் &, மதுவிலக்கு பிரச்சார ஆர்வலர்கள்!

கள்ளச்சாராய ஆறுகளின் குற்றப்பத்திரிக்கையில் A1 குற்றவாளியாக நமது கலாச்சார தூய்மைவாதிகள் &, மதுவிலக்கு பிரச்சார ஆர்வலர்கள்!

ண்பதுகளில் சோனி டூ-இன்-ஒன் பிளேயர், வாக்மேன், D-90 கேசட் போன்றவற்றை வெளிநாடுகளில் இருந்து கடத்திக் கொண்டு வந்து விற்பார்கள். போலவே Philipis, Coney போன்ற டூப்ளிகேட் பிராண்ட்டுகளும் புழக்கத்தில் இருந்தன. அதற்கு முக்கிய காரணம், உள்நாட்டில் தயாரிப்புக் கட்டுப்பாடுகள் இருந்ததால் சுலபத்தில் வாங்க முடியாமல் இருந்தது. தேவையை விட விநியோகம் குறைவாக இருக்கும் போது இப்படிப்பட்ட கள்ள விஷயங்கள் புழக்கத்தில் வருவது உலகெங்கும் நிகழ்கிறது. Demand vs. Supply Problem.

கள்ள ப்ராடக்ட்டுகள் உருவாக்க இயலாத போது காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. பஜாஜ் ஸ்கூட்டர் பதிவு செய்து விட்டு இரண்டு ஆண்டுகள் காத்திருந்தது, லாண்ட்லைன் ஃபோன் பதிவு செய்து விட்டு மூன்று ஆண்டுகள் காத்திருந்ததெல்லாம் எண்பதுகளில் சகஜம். காத்திருக்க முடியாத போது நீண்ட கியூக்கள் நிகழ்கின்றன. பால் தட்டுப்பாடு இருந்த எழுபதுகள், எண்பதுகளில் பால் லாரி வந்ததும் பூத் வாசலில் அடிதடி எல்லாம் நடந்திருக்கிறது.

இன்றைக்கு யாரும் Coney அல்லது Philipis போன்றவற்றை வாங்குவதில்லை. வெளிநாடுகளில் இருந்து தங்கம், ஃபாரின் சரக்கு, போதை மருந்துகள் தவிர மீதி கடத்தல்கள் பெருமளவு குறைந்து போய் விட்டன. காரணம் மீதிப் பொருட்களுக்கு உள்நாட்டில் தேவையை விட அதிகமாக விநியோகம் இருக்கிறது. மற்றும் குறைவான விலையில் பிராண்ட் பொருட்களே பல கிடைக்கின்றன. அதேதான் சாராயத்துக்கும் நிகழ வேண்டும். மாறாக, கள்ளச்சாராயம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சமீபத்திய துன்பியலுக்குப் பின் சுமார் 20,000 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 1500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இதன் மூலம் தெரிய வருவது என்ன: நடந்திருப்பது அரிதான, isolated சம்பவம் அல்ல. மாநிலத்தில் ஒரு தனி இண்டஸ்ட்ரியே parallelஆக இயங்கிக் கொண்டிருக்கிறது.

மதுவிலக்கு அமுலில் இருக்கும் மாநிலங்களில் இப்படி எல்லாம் நடக்கும்தான். ஆனால் மதுவிலக்கு அமுலில் இல்லாத தமிழ் நாட்டில் இப்படி நடக்கக் கூடாது. அதற்கும் காரணம் இருக்கிறது. இங்கே மறுபடி ‘கலாச்சார தூய்மைவாதிகளை’த்தான் வம்புக்கு இழுக்கிறேன். ஏனெனில் தமிழ் நாட்டில் பார்க்கும் அளவுக்கு இந்தத் தூய்மைவாத சிந்தனை மற்றும் மதுவுக்கு எதிரான அறச்சீற்றம் வேறு எந்த மாநிலத்திலும் இருப்பதாகத் தெரியவில்லை. இங்கேதான் இந்த கலாச்சாரக் காவலர்கள் போட்டி போட்டுக் கொண்டு மதுவுக்கு எதிரான நிலைப்பாடுகளை எடுக்க சமூகத்தை நிர்பந்திக்கிறார்கள்.

அங்கே டாஸ்மாக் கடை வைக்காதே, இங்கே வைக்காதே என்று அரசுக்கு அழுத்தம் தருகிறார்கள். புதிய கடைகளையும் தடுக்க முனைகிறார்கள். முணுக் என்றால் மதுவிலக்கு போராட்டம் துவக்குகிறார்கள். ஒரே ஒரு தானியங்கி இயந்திரம் வந்து விட்டால் ஓய்வே இன்றி கலாய்த்து தள்ளுகிறார்கள். மதுவிலக்கு மட்டும் அமுலுக்கு வந்து விட்டால் தமிழ் நாட்டில் அனைத்து கணவர்களும் தினமும் மல்லிப்பூவும் கையுமாக ஆறு மணிக்கே வீட்டுக்கு திரும்பி விடுவார்கள் என்று பிம்பப்படுத்துகிறார்கள்.

இப்படிப்பட்ட கலாச்சார பிற்போக்குத்தனத்தையும் மூடத்தனத்தையும் சாக்காகக் கொண்டு அரசும் மதுப் பொருட்கள் மீது 200-300% சதம் வரிகளைப் போட்டு குளிர் காய்ந்து கொள்கிறது. இப்படிப்பட்ட தூய்மைவாத மூடத்தனங்கள் இல்லாத சமூகங்கள் கள்ளுக்கடைகள், ஒயின் ஷாப்புகள் குறித்து பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. குடிகாரர்களை ஏதோ கொலைகாரர்கள் ரேஞ்சுக்கு பேசுவதில்லை. அந்த சமூகங்களில் மது சம்பந்தமான சமூகப் பிரச்சினைகளும், மது-தொடர்பான உடற்கூறு, உளவியல் நோய்களும் பெரும் கரிசனத்துடன், மனிதாபிமானத்துடன் தீர்வுகளை நோக்கி அணுகப்படுகின்றன.

அங்கெல்லாம் மது தனியார் வசம் இருக்கிறது. அங்கே சகஜமாக கிடைக்கும் பிராண்ட்டுகளின் தரம் அதிகரிக்கிறது. சந்தையின் தேவைக்கு ஏற்றபடி தனியார் பிராண்ட்டுகள் இடையே நடக்கும் போட்டியில் விலை குறைகிறது. அப்படி Demand/Supply இடைவெளி அற்ற சமூகங்களில் கள்ளச்சாராய கும்பல்கள் போலீஸ் மற்றும் லோக்கல் அரசியல்வாதிகளை கைக்குள் போட்டுக் கொண்டு சட்டவிரோத சாராய ஆறுகளை ஓட விட இயலுவதில்லை. இங்கேயோ, இருக்கும் கடைகளை மூடிக் கொண்டு இருக்கிறார்கள். பாதி ஏரியாக்களில் கடைகளே இருப்பதில்லை. இருக்கும் கடைகளிலும் டாஸ்மாக் விற்கும் நல்ல சாராயத்தின் தரம் ஏறக்குறைய கள்ளச் சாராயத்துக்கு நிகராகத்தான் இருக்கிறது. அதுவும் அதீத வரி விதிப்பில் விலை விண்ணைத் தொட்டு நிற்கிறது. தவிர, எந்த சாராயத்தை அருந்தினாலும் குற்றவாளி போலத்தான் நம்மைப் பார்க்கிறார்கள்; எனவே சீப்பாகவே முடித்துக் கொண்டு விடுவோம் என்று மெத்தனாலை தேடிப் போகிறார்கள். ஆகவே, கள்ளச்சாராய ஆறுகளின் குற்றப்பத்திரிக்கையில் A1 குற்றவாளியாக நமது கலாச்சார தூய்மைவாதிகளையும், மதுவிலக்கு பிரச்சார ஆர்வலர்களையும் இங்கே நீதிமன்றக் கூண்டில்முன் நிறுத்துகிறேன்.

– ஸ்ரீதர் சுப்ரமணியம்

error: Content is protected !!