ஒற்றை பனைமரம் – விமர்சனம்!

சற்றேறக்குறைய லட்சம் பக்கங்களுக்கு மேல் எழுத்திலும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆவணப் படங்களும் கணக்கில்லா நேரடி சாட்சிகளும் வந்த சூழலில் கூட ஈழப் போர் இறுதி தினங்களில் என்ன நடந்தது என்பது முழுமையான மர்மமாகவே நீடிக்கிறது. அவ்வப்போது இந்த இருளில் அரங்கேறிய சம்பவங்க்கள் மீது அடிக்கப்படும் வெளிச்சம் சில விசயங்களை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. சில பல விவாதங்கள், சர்ச்சைகள், விசாரணைகள்… மீண்டும் இருள். இப்படியாக அரங்கேறும் ஈழ விவகாரத்தின் இன்னொரு பக்கத்தை வெளிப்படுத்தும் நோக்கில் உருவாகி வெளியாகி இருக்கிறது ‘ ஒற்றை பனைமரம்’. சில பல ஆண்டுகளுக்கு முன் தன் பூமியில் உருவான ‘மண்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த புதியவன் ராசய்யா இப்போது எவரையும் விரல் நீட்டி விமர்சனம் செய்யாமல் மௌன சாட்சியாக உள்ளது உள்ளபடியாக அப்போது நடந்தது தொடங்கி அப்போரின் விளைவால் உருவான புது சமுதாயத்தை அப்பட்டமாக எக்ஸ்போஸ் செய்திருக்கிறார் என்பதே பலரின் எதிர்ப்புக்குரலுக்குக் காரணம்.
கதை என்னவென்றால் இறுதிப் போருக்குப் பிறகு விடுதலைப் புலிகள் இயக்கதைச் சேர்ந்த வீரர்கள் சைனட் உட்கொண்டு தற்கொலை செய்துக் கொள்ள முயற்சிக்கிறார்கள். அதில் ஒருவரான நாயகி நவயுகாவை காப்பாற்றி, அடைக்கலம் கொடுக்கும் நாயகன் புதியவன் இராசையா, குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் அனாதையாக இருந்த சிறுமிக்கும் அடைக்கலம் கொடுத்து தனது மகளாக வளர்க்கிறார். இந்த மூவரும் போருக்குப் பிந்தைய தங்களது எதிர்காலத்தை நோக்கி பயணிக்கிறார்கள். ஆனால் அப்படி வாழ முயல்வோரை “சயனைட் குப்பியைக் கடித்துச் செத்திருக்க வேண்டியதுதானே” என முன்னாள் போராளிகளைச் சக மனிதர்கள் சிலர் கேட்கின்றனர். போரில் அனைத்தையும் இழந்து வறுமையிலும் வெறுமையிலும் உழலும் அப்பாவி கைம்பெண்கள் சிலரைப் பாலியல் தொழிலுக்கு வற்புறுத்திப் பணிய வைக்கின்றனர்.ஆண் போராளிகளில் சிலரோ வயிற்றுப்பாட்டுக்காக, அடிதடித் தொழில் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். இதைக் கண்டு மனம் வெதும்பும் நாயகன் புதியவன் இராசையா, பெண்களை ஒன்றிணைத்து ஒரு சங்கம் தொடங்கி அதன் மூலம் அவர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சிக்கிறார். அவரது முயற்சி வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை அதிகபட்சம் உண்மையாக சொல்லி இருப்பதே ஒற்றை பனை மரம்.
முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதோடு, படத்தை இயக்கவும் செய்திருக்கும் புதியவன் இராசையா, இறுதி யுத்தத்திற்குப் பிறகு புலிகள் அமைப்பில் இருந்த வீரர்களின் நிலை படுமோசமாக மாறிவிட்டது, என்பதை அழுத்தமாக பதிவு செய்ய முயற்சித்திருக்கிறார். குறிப்பாக, போரில் பலியான வீரர்களின் மனைவிகள் மற்றும் குழந்தைகள் பல நாட்கள் பட்டினியால் வாடுவதாகவும், சில பெண்கள் தங்களது பசி கொடுமைகளில் இருந்து மீள்வதற்காக விலைமாதுவாக மாறியதோடு, அவர்களை தங்களது இச்சைக்கு தமிழர்களே பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை சொல்வதில் எந்த தயக்கமும் காட்டாததே இவரின் மீதான மதிப்பு அதிகரித்து விடுகிறது.
இலங்கை மண்ணில் படமாக்கப்பட்ட காட்சிகளை ஒளிப்பதிவு செய்திருக்கும் மஹிந்தே அபிசிண்டே மற்றும் இந்திய பகுதிகளில் படமாக்கப்பட்ட காட்சிகளை ஒளிப்பதிவு செய்திருக்கும் சி.ஜெ.ராஜ்குமார் இருவரும் கதைக்களம் மற்றும் கதாபாத்திரங்களை மிக இயல்பாக காட்டி அசத்தியிருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் அஷ்வமித்ராவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் மனதை தொடுவதுடன் ஒற்றை பனைமரத்தை தூக்கி பிடிப்பதில் சாதித்து விட்டது.
ஆரம்ப பேராவில் சொன்னது போல் இலங்கை இறுதி யுத்தத்திற்குப் பிறகு ஈழத்தில் நடந்த உண்மை சம்பவங்களை அப்படியே பதிவு செய்திருக்கிறேன், என்று ஓப்பன் ஸ்டேட்மெண்ட் கொடுத்த டைரக்டர் புதியவன் இராசையா, சில விசயங்களை நாகரீகம் கருதி தவிர்த்திருக்கலாம். அத்துடன் புலிகள் அமைப்பு மற்றும் அதன் செயல்பாடுகளால் மக்களுக்கு எந்தவித நன்மையும் ஏற்படவில்லை என்பதை சொல்ல சிங்கள குரூப் பொருளுதவி செய்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்படுவதையும் தவிர்க்க இயலவில்லை..
ஆனாலும் கமிட் ஆன ஒவ்வொருவர் நடிப்பு தொடங்கி பலரும் பதறும் விஷயத்தை எடுத்துச் சொன்னதாலேயே இது பூந்தூட்டத்தின் நடுவே மலர்ந்த பனைமரமாகிவிட்டது
மார்க் 3.5/5