ஆன்லைன் ரம்மி தடை சட்டம் – கவர்னர் ஒப்புதலை அடுத்து அரசிதழில் வெளியீடு!

ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் அவசர சட்டத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். ஆன்லைன் சூதாட்டம் நடத்தும் விளையாட்டுகளுக்கு தடை விதிக்க இந்த அவசர சட்டம் வகை செய்கிறது.
ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான தற்கொலைகள் தமிழகத்தில் அதிகரித்து வருகின்றன. இதனையடுத்து அதற்கு தடை விதிக்க வேண்டும் என பல தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த செப்.,26ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசர சட்டம் இயற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது.
இந்த சட்ட மசோதாவை கவர்னரின் ஒப்புதலுக்காக தமிழக அரசு அனுப்பி இருந்தது. இந்நிலையில், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசர சட்டத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். கடந்த அக்.,1ம் தேதியே கவர்னர் ஒப்புதல் வழங்கியதாக அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வரும் அக்.,17ம் தேதி முதல் நடைபெற உள்ள சட்டசபை கூட்டத்தொடரில் சட்டமாக கொண்டுவரப்படும் என தெரிகிறது.
அப்படி சட்டம் இயற்றப்பட்ட பின் தமிழ்நாட்டுக்குள் எந்த ஒரு நபரும் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடமுடியாதவாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது செல்போன் எண்ணின் இருப்பிடத்தின் அடிப்படையில் மாநிலத்துக்குள் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை. ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களுக்கும் தடை. நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த ஒரு ஊடகங்களிலும், செயலிகளிலும் ஆன்லைன் சூதாட்ட விளம்பரம் வெளியிட தடை எல்லாம் நடைமுறைக்கு வந்துவிடும். ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு ஆன்லைனில் பணப்பரிமாற்றம் செய்ய வங்கிகள் ஒத்துழைக்கவும் தடை. சூதாட்டம் அல்லாத இதரஆன்லைன் விளையாட்டுகளுக்கு, ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கவும் முடிவு செய்யப்படும். ஓய்வுபெற்ற தலைமைச் செயலாளர் தலைமையில் ஆன்லைன் விளையாட்டுகள் ஒழுங்குமுறை ஆணையம் செயல்படும். ஆணையத்தின் உறுப்பினர்களாக (IT) ஐ.டி வல்லுநர், உளவியல் நிபுணர், ஆன்லைன் விளையாட்டு வல்லுநர் ஆகியோர் இடம் பெறுவர். ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அனுமதி வழங்குவது, தொடர்ந்து கண்காணிப்பது, தரவுகளை சேகரிப்பது, குறைகளுக்கு தீர்வு காண்பது, விதிகளை மீறினால் நடவடிக்கை எடுக்க பரிந்துரைப்பது உள்ளிட்ட பணிகளை ஆணையம் மேற்கொள்ளும்.
தண்டனை விவரங்கள்:- ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களுக்கு 3 மாத கால சிறை அல்லது ரூ.5,000 அபராதம் அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும். சூதாட்ட விளம்பரங்களை வெளியிடுவோருக்கு ரூ.5 லட்சம் அபராதம் அல்லது ஓராண்டு சிறை அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும். சூதாட்டத்தை நடத்தும் நிறுவனம் அல்லது நபர்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம் அல்லது 3 ஆண்டு சிறை அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும். இரண்டாம் முறை தவறிழைக்கும் நபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு முந்தைய தண்டனையை விட இரட்டிப்பாக தண்டனை விதிக்கப்படும். ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குமுறை ஆணையத்தால் விதிக்கப்படும் தண்டனைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது.