ஐ.நா. அங்கீகாரம் செய்யாத சர்வதேச மீனவர் / மீன்வள தினமின்று!
கடலில் மீனவர்களுக்கு ஏற்படும் தொழில் சார்ந்த பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்கில் 40 நாடுகளின் மீனவப் பிரதிநிதிகள் 1997ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி டெல்லியில் விவாதித்தனர்.அப்போது உலகளவில் இணைந்து மீனவர்களின் உரிமைக்குக் குரல் கொடுத்துப் போராடுவதற்காக மீன்பிடி தொழிலாளர்கள் பேரவை என்ற அமைப்பை உருவாக்கினர். இதன்மூலம் மீனவர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண நவம்பர் 21ஆம் தேதி உலக மீனவர்கள் தினமாக அறிவிக்கப்பட்டது.
அதாவது 1990 காலகட்டத்தில் உலகமய கொள்கை தீவிரமடைந்த சூழலில். பன்னாட்டு ஏகபோக முதலாளிகளின் கண்களை கடல் வளம் உறுத்தியது, இதன் விளைவாக பாய்மரப் படகுகள் உலாவந்த கடலில் பெரும் கப்பல்கள் அணிவகுத்தன, கொஞ்சம் கொஞ்சமாக பன்னாட்டு முதலாளிகளின் வேட்டை காடாக கடல் மாறியது. மொத்த கடல் மீன் வளத்தில் 52 சதவிகிதம் சுரண்டப்பட்டுவிட்டது. கடலையே நம்பி இருந்த கடல்சார் பழங்குடியின மக்களின் கடலும் கடல்சார் நிலமும் பறிக்கப்பட்டது. எனவே உலகமய சுரண்டலின் கரங்கள் உலகளாவிய அளவில் விரித்து பரந்து கிடக்கும்போது அதை எதிர்க்கும் போராட்டமும் உலகளாவிய அளவில் தேவை என்று உணர்ந்தனர் மீனவர்கள். மேலும், மீனவர்கள் கடலில் தங்களுக்கு ஏற்படும் தொழில் சார்ந்த பல உலகளாவிய பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்கில் 40 நாடுகளின் மீனவப் பிரதிநிதிகள் 21.11.1997-ல் டெல்லியில் கூடி விவாதித்து உலக அளவில் இணைந்து மீனவர் உரிமைக்குக் குரல் கொடுத்துப் போராடுவதற்காக உலக மீன்பிடித் தொழிலாளர்கள் பேரவை என்ற அமைப்பை உருவாக்கினர்.
இதன்மூலம் மீனவர்களுக்கு எதிராக அரசுகள் கொண்டுவரும் திட்டங்கள், மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் பிரச்னைகள், பாரம்பர்ய மீனவர்கள் உரிமைகள், சுற்றுச்சூழல் பாதிப்பால் கடல் மாசடைந்து மீன்வளம் குன்றி மீன்பிடித் தொழில் அழிவுப் பாதையில் செல்வது உள்ளிட்ட பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடிவு எடுக்கப்பட்ட நாளான நவம்பர் 21-ம் தேதிதான் சர்வதேச மீனவர்கள் தினமாக அறிவிக்கப்பட்டது. மீனவர் தினம் அறிவிக்கப்பட்ட நாள் முதலாக இந்த நாளில் உலகம் முழுவதும் உள்ள மீனவர்கள் இத்தினத்தை அனுஷ்டிக்கிறார்கள்.
ஆனால், கடந்த இருபது ஆறு ஆண்டுகளாக ஐக்கிய நாடுகள் சபை இந்த மீனவர்கள் தினத்தை அங்கீகாரம் செய்யாமல் உள்ளது, இதே நவம்பர் 21-ம் தேதியில் உலக தொலைக்காட்சி தினமாக அறிவித்துள்ளது. 109 தினங்களை உலக முக்கிய தினங்களாக அங்கீகரித்த ஐக்கிய நாடுகள் சபை, நூறு மில்லியனுக்கும் மேற்பட்ட உலக மீனவர்களால் பெரிதும் அனுஷ்டிக்கப்படும் மீனவர்கள் தினத்தை அங்கீகாரம் செய்யாமல் இருப்பது விளிம்பு நிலை மக்களின் மீது உலக நாடுகள் சபை வைத்துள்ள கண்ணோட்டம் அம்பலமாகியுள்ளது.
இத்தனைக்கு இன்றுவரை ஊட்டச்சத்து மிக்க மீன்களை கிடைக்கச் செய்வதிலும், அந்நியச் செலாவணியை ஈட்டித் தருவதிலும் மீன்பிடி தொழில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த உலகில் பறந்து விரிந்துகிடக்கும் கடலை நம்பி, பல லட்சம் மக்கள் வாழ்ந்துவருகின்றனர். கடலில் இருந்து மனிதனுக்குத் தேவையான உணவுப் பொருள்கள் முதல் ஆடம்பரப் பொருள்கள் வரை கடல் வழங்கிவருகிறது. இந்நிலையில், எதிர்காலத்தில் மனித குலத்துக்குத் தேவையான உணவில், 90 சதவிகிதம் கடலிலிருந்தே பெறப்போகிறோம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அத்தகைய கடல் உணவுகளை, மழை, வெயில், புயல் எனப் பாராது கரைக்குக் கொண்டுவந்து சேர்ப்பவர்கள், மீனவர்கள். அந்த மீனவர்களுக்கான தினமாக இன்றைய தினத்தை மீனவர்கள் கடைபிடித்துவருகின்றனர். ஆனால், ஐக்கிய நாடுகள் சபையோ, இந்த தினத்தை ‘மீனவர் தினமாக’ அங்கிகாரம் செய்யாமல், கடந்த 20 ஆண்டுகளாக காலம் கடத்திவருகிறது.
ஆனால் தினந்தோறும் புயலோடு போட்டியிட்டு, அயல்நாட்டு அந்நியரிடம் அடிபட்டு, வயிற்றுக்காக வாழ்க்கையையே அடகு வைத்து, ‘இன்று வீடு திரும்புவோமா?’ என உறுதி இல்லாமல், உப்புக் காற்றில் நீதி கிடைக்காமல் நாதி இழந்தும், நம்பிக்கையாய் தங்களது டைட்டானிக்கில் மீன் பிடிக்க விரையும் கடல் ராசாக்களின் கஷ்டங்கள் பிறருக்கு புரிவதில்லை.கடலில் ஏற்படும் இயற்கைச் சீற்றங்களால் ஆண்டுக்கு 50-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் உயிரிழக்கின்றனர். 350-க்கும் மேற்பட்டோர் காயமடைகின்றனர்.
அதாவது சுனாமி, புயல் போன்ற பேரிடர்கள் தவிர, சாதாரண சூழலில் கடலுக்கு செல்லும் மீனவர்கள் படகில் இருந்து கீழே விழுவது, படகு கவிழ்வது, கடற்கொள்ளையர்களால் தாக்கப்படுவது, கப்பல்கள் மோதுவது, ஆழ்கடலில் நோய்வாய்ப்பட்டு உரிய சிகிச்சை பெறமுடியாமல் போவது போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர். பிற மாநிலங்களுக்கும், பிற நாடுகளுக்கும் சென்று, அங்கேயே தங்கி ஆழ்கடல் மீன்பிடி தொழிலில் குமரி மாவட்ட மீனவர்கள் அதிகமானோர் ஈடுபட்டுள்ளனர். ஆனால், உரிய பாதுகாப்பு, தகவல்தொடர்பு இன்மையால் 75 சதவீத இறப்பு ஏற்படுகிறது.
ஆனாலும் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீத பங்களிப்பும், விவசாயம் மற்றும் அதன் தொடர்புடைய துறையில் 5 சதவீதத்திற்கும் கூடுதலான பங்கும் வழங்கி வருகின்றனர் இந்த மீனவர்கள். இந்தியாவின் பொருளாதாரத்தை உயர்த்துவதில் கணிசமான பங்கை மீனவர் சமுதாயம் ஆற்றி வருகிறது. இந்தியாவில் மொத்தமுள்ள 8,000 கிலோ மீட்டர் கடற்கரை தூரத்தில் ஏறத்தாழ 1,000 கிலோ மீட்டர் தூரத்தை தமிழகம் பெற்றிருக்கிறது. ஏறத்தாழ 10 லட்சம் மீனவர்கள் தமிழகத்தில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் அவர்களது வாழ்வாதாரம் என்பது இயற்கைச் சீற்றம் உள்ளிட்ட காரணங்களால் பல்வேறு சோதனைகளுக்கு உள்ளாகி வருகிறது. இவர்களுக்கு முழுமையான சமூக பாதுகாப்பு வழங்க வேண்டிய பொறுப்பு மத்திய, மாநில அரசுகளுக்கு இருக்கிறது.
ஒவ்வொரு தொழிலுக்கும் ஒரு குணாதிசயம் உண்டு. ஆனால், மீனவர் சமுதாயத்தைப் பொறுத்தவரை தரை மேல் பிறந்தாலும் உயிரைப் பணயம் வைத்து, கடலில் மிதந்து தொழில் நடத்தவேண்டிய அசாதாரணமான சூழல் இருக்கிறது. எனவே, இந்தப் பின்னணியில் அனைத்துப் பிரிவினரையும் விட மீனவ சமுதாயத்தினரின் நலனில் அனைவரும் முழு அக்கறை செலுத்தி பாதுகாப்பு வழங்க உலக மீனவர் தினத்தில் உறுதி மேற்கொள்ள வேண்டும்.
அத்துடன் எதற்கும் உதவாத சிலவற்றுக்குகூட சர்வதேச தினம் என அறிவிக்கும் ஐக்கிய நாடுகள் சபை, தங்கள் உயிரையும், உடைமைகளையும் பணயம்வைத்து பெரும்பகுதி உணவுப் பொருள்களைக் கடலிலிருந்து கரைக்குக் கொண்டுவந்து சேர்க்கும் மீனவர்களின் தினத்தை அங்கீகரிக்க வேண்டியது அவசியம்!
நிலவளம் ரெங்கராஜன்