அசைவ உணவு பாதுகாப்பு: ஓர் உயிரைப் பறித்த குளிர்சாதனப் பெட்டி தவறான பயன்பாடு – உஷார்!

அசைவ உணவு பாதுகாப்பு: ஓர் உயிரைப் பறித்த குளிர்சாதனப் பெட்டி தவறான பயன்பாடு – உஷார்!

ஹைதராபாத்தில் நடந்த துயரச் சம்பவம் மிகவும் வருந்தத்தக்கது. போனால் திருவிழாவின்போது சமைக்கப்பட்ட அசைவ உணவை மறுநாள் சாப்பிட்ட குடும்பத்தினர் ஒன்பது பேருக்கு கடுமையான உணவு நச்சு ஏற்பட்டு, குடும்பத் தலைவர் உயிரிழந்தது மிகுந்த வேதனையை அளிக்கிறது. இன்னும் மூன்று பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவது கவலையளிக்கிறது. இந்த சம்பவத்தில் நடந்த தவறு மற்றும் அதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் குறித்து பார்ப்போம்.

நடந்த தவறு என்ன?

இந்த சம்பவத்தில் முக்கியமாக நடந்த தவறு, சமைக்கப்பட்ட அசைவ உணவை சரியான முறையில் சேமிக்காதது மற்றும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட்டது தான்.

  • குளிர்சாதனப் பெட்டியின் தவறான பயன்பாடு: முதல் நாள் சமைக்கப்பட்ட அசைவ உணவு, குளிர்சாதனப் பெட்டியில் (ஃபிரிட்ஜ்) வைக்கப்பட்டுள்ளது. பொதுவாக, ஃபிரிட்ஜில் 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் உணவு கெட்டுப்போகும் செயல் தாமதப்படுத்தப்படுமே தவிர, முழுவதுமாக நிறுத்தப்படாது. அதாவது, பாக்டீரியாக்களின் வளர்ச்சி குறைவே தவிர, அவை முற்றிலுமாக இறப்பதில்லை.
  • மீண்டும் சூடுபடுத்துதல்: மறுநாள், ஃபிரிட்ஜில் வைத்திருந்த அசைவ உணவை வெளியே எடுத்து மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட்டுள்ளனர். சரியாக சூடுபடுத்தாத பட்சத்தில், உணவில் ஏற்கனவே வளர்ந்திருந்த கிருமிகள் அழியாமல், தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம்.
  • நேரம்: சமைத்த அசைவ உணவை அறை வெப்பநிலையில் நீண்ட நேரம் வைத்திருந்தது (முதல் நாள் சமைத்து, மறுநாள் சாப்பிட்டது) கிருமிகள் பெருக சரியான வாய்ப்பை வழங்கியிருக்கும்.

இடைப்பட்ட இந்த நேரத்தில், உணவில் கிருமித் தொற்று ஏற்பட்டிருக்கிறது. “ஃபிரிட்ஜில் வைத்து விட்டால் உணவு கெடாது” என்ற தவறான புரிதலே இந்த விபத்துக்கு காரணம்.

இதிலிருந்து நமக்கான படிப்பினைகள் என்ன?

உணவுப் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியம். குறிப்பாக அசைவ உணவுகளைப் பாதுகாப்பதில் மிகுந்த கவனம் தேவை. இந்த சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான படிப்பினைகள் இங்கே:

1. உணவு சேமிப்பு வெப்பநிலை முக்கியம்

  • குளிர்சாதனப் பெட்டி (Refrigerator): உணவை ஓரிரு நாட்களுக்குள் சாப்பிட திட்டமிட்டால், அதை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கலாம். இந்த வெப்பநிலை உணவுகள் கெட்டுப் போவதை தாமதப்படுத்தும். இருப்பினும், இது கிருமிகளின் வளர்ச்சியை முழுமையாக நிறுத்திவிடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
  • ஃப்ரீசர் (Freezer): உணவை நீண்ட நாட்களுக்கு (சில மாதங்கள்) பாதுகாக்க விரும்பினால், அதை ஃப்ரீசரில் -18 டிகிரி செல்சியஸுக்குக் குறைவான வெப்பநிலையில் வைக்க வேண்டும். இந்த உறைபனி நிலையில் நுண்ணுயிரிகளால் வளர முடியாது.

2. குறுக்குத் தொற்று (Cross Contamination) தவிர்ப்பது

  • மாமிச உணவுகளை காற்று புகாத கொள்கலன்களில் வைத்து குளிர்சாதனப் பெட்டியில் பாதுகாக்க வேண்டும். இது ஏற்கனவே உணவில் கிருமித் தொற்று இருந்தாலும், பிற உணவுப் பொருட்களுக்கு பரவாமல் தடுக்கும்.

3. சமைப்பதற்கு முன் மற்றும் பின் சுத்தம்

  • உணவை சமைக்கும் முன், பேக் செய்யும் முன், பரிமாறும் முன் கைகளை சோப்பு போட்டு நன்கு கழுவ வேண்டும். இது கிருமித் தொற்றைத் தடுப்பதற்கான முதல் படி.

4. சரியான வெப்பநிலையில் சமைத்தல்

  • மாமிச உணவுகளை சமைக்கும் போது, அவை குறைந்தபட்சம் 71 டிகிரி செல்சியஸ் (160 டிகிரி ஃபாரன்ஹீட்) வெப்பநிலைக்கு மேல் நன்கு சமைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக கோழி மற்றும் ஆட்டு மாமிசத்தை நன்கு வேக வைக்க வேண்டும்.

5. சமைத்த உணவை விரைவாக உட்கொள்ளுதல்

  • சமைக்கப்பட்ட உணவு அறை வெப்பநிலையில் (25 முதல் 30 டிகிரி செல்சியஸ்) சில மணிநேரங்கள் மட்டுமே கிருமித் தாக்கத்துக்கு உள்ளாகாமல் இருக்கும். சமைத்த உணவை முடிந்தவரை அதே நாளில், அதிகபட்சம் 2 முதல் 4 மணிநேரத்திற்குள் சாப்பிட்டுவிடுவது சிறந்தது.

6. மீண்டும் சூடுபடுத்துதல்

  • சமைத்த உணவை மறுநாள் சாப்பிட திட்டமிட்டால், அதை குளிர்சாதனப் பெட்டியில் சரியாக பேக் செய்து 4 டிகிரி செல்சியஸுக்குள் பராமரிக்க வேண்டும். மீண்டும் சூடுபடுத்தும் போது, உணவை நன்கு சூடாக்க வேண்டும், இதனால் கிருமிகள் முழுமையாக அழியும்.

7. மின்சாரத் தடையின் போது கவனம்

  • மின்சாரத் தடை அடிக்கடி ஏற்படும் இடங்களில் வசிப்பவர்கள், குளிர்சாதனப் பெட்டியின் வெப்பநிலையைக் கண்டறிய ஒரு வெப்பமானியை உள்ளே வைத்து கண்காணிக்க வேண்டும். வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸுக்கு மேல் உயர்ந்தால், கெட்டுப்போகக்கூடிய உணவுகளை அப்புறப்படுத்திவிட வேண்டும் என்று அமெரிக்காவின் எஃப்.டி.ஏ (FDA) அறிவுறுத்துகிறது.

8. உறைந்த மாமிசத்தை உருக்கும் முறை (Defrosting)

  • ஃப்ரீசரில் வைத்த மாமிசத்தை உருக்க நேரடியாக அறை வெப்பநிலையில் வைக்கக் கூடாது. ஃப்ரீசரில் இருந்து எடுத்து குளிர்சாதனப் பெட்டிக்கு மாற்றி, அங்கிருந்து 15 முதல் 30 நிமிடங்கள் கழித்து வெளியே எடுத்தால் ஐஸ் தானாகவே உருகிவிடும். இதுவே பாதுகாப்பான “டீ-ஃப்ராஸ்டிங்” முறையாகும்.

மொத்தத்தில் ணவுப் பாதுகாப்பு என்பது ஒரு எளிய விஷயம் அல்ல. சமைக்கும் முறை, சேமிக்கும் முறை, மீண்டும் சூடுபடுத்தும் முறை என ஒவ்வொரு நிலையிலும் கவனமாக இருக்க வேண்டும். குளிர்சாதனப் பெட்டி உணவை முழுமையாக கெடாமல் பாதுகாக்காது, அது கெட்டுப்போகும் செயல்முறையை தாமதப்படுத்துகிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்த துயரச் சம்பவத்தில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொண்டு, எதிர்காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் நடக்காமல் பார்த்துக்கொள்வது நமது கடமை.

இந்த குடும்பத்தினர் அனைவரும் விரைவில் பூரண குணமடைய நாம் பிரார்த்திப்போம்.

டாக்டர் ஃப்ரூக் அப்துல்லா

error: Content is protected !!