ஒரு இஞ்ச் நிலத்தைக் கூட உரிமை கோர முடியாது – லடாக்கில் ராஜ்நாத்சிங்!

ஒரு இஞ்ச் நிலத்தைக் கூட உரிமை கோர முடியாது – லடாக்கில் ராஜ்நாத்சிங்!

அண்மையில் லடாக் எல்லையில் இந்தியா, சீன ராணுவத்துக்கு இடையே மோதல் ஏற்பட்டு அமைதி திரும்பிய நிலையில் அங்கு பாதுகாப்புப் பணிகளை மேற்பார்வையிடுவதற்காக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் லடாக் இன்று (வெள்ளி) சென்றார். பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுடன் அவர் கலந்துரையாடினார். அப்போது ‘‘உலகின் எந்த ஒரு சக்தியாலும் இந்தியாவின் ஒரு இஞ்ச் (அங்குலம்) நிலத்தைக் கூட நம்மிடமிருந்து எடுத்துக் கொள்ள முடியாது’’ என்று உறுதிப்பட கூறினார்.‘தேசத்துக்கு பெருமை சேர்த்திருப்பவர்கள் நீங்கள்; எந்த ஒரு நாட்டின் நிலத்தையும் நாம் ஆக்கிரமித்ததில்லை. இந்திய எல்லையை யாரும் உரிமை கோர முடியாது; நாம் ஒருபோதும் எந்த நாட்டின் மீதும் படை எடுத்ததில்லை…’ என்றும் கூறினார்.

கிழக்கு லடாக் எல்லையில் சீன ராணுவத்துக்கும் இந்திய ராணுவத்துக்கும் இடையே கடந்த மே மாதம் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து இருதரப்பும் ராணுவ வீரர்களையும் போர் தளவாடங் களையும் எல்லையில் குவித்ததால், கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக எல்லையில் போர்ப் பதற்றம் நிலவியது. பதற்றத்தைத் தணிக்க பல்வேறு நிலைகளில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் இருதரப்பும் ராணுவ வீரர்களை படிப்படியாக வாபஸ் பெற்று வருகின்றன.

இந்த சூழலில் ஜம்மு காஷ்மீர் மற்றும் கிழக்கு லடாக் பகுதியில் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்ய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று காலை தனிவிமானம் மூலம் லடாக்கில் உள்ள லே நகருக்கு சென்றார். அவருடன் தலைமை பாதுகாப்பு அதிகாரி ஜெனரல் பிபின் ராவத், தரைப்படை தளபதி ஜெனரல் எம்.எம். நரவாணே ஆகியோர் உடன் சென்றனர்.

அப்போது வீரர்கள் முன் பேசிய ராஜ்நாத் சிங், ‘எல்லைப் பிரச்னையை தீர்ப்பதற்காக பேச்சு வார்த்தை நடைபெற்றுவருகிறது. பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்னையை தீர்த்துவிட முடியும் என்று என்னால் உறுதியாக கூறமுடியாது. ஆனால், ஒரு அடி நிலத்தைக் கூட விட்டுத் தரமாட்டோம் என்று உறுதியாகக் கூறுகிறது. உலகுக்கே அமைதியை எடுத்துக்காட்டிய நாடு. உலகமே ஒரே குடும்பம் எனும் நம்பிக்கையைக் கொண்டது இந்தியா. நாம் எந்த நாட்டையும் தாக்கியது கிடையாது. எந்த நாட்டின் நிலத்தையும் பறித்துக் கொண்டு உரிமைக் கொண்டாடியது கிடையாது’ என்று தெரிவித்தார்.

முதல் நாளான இன்று லடாக் எல்லையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு செய்தார். ராணுவ வீரர்களின் சாகச நிகழ்ச்சியை பார்வையிட்ட அவர், ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார். ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதியில் நாளை ஆய்வு செய்கிறார்.

 

error: Content is protected !!