நித்தம் ஒரு வானம்- விமர்சனம்!

நித்தம் ஒரு வானம்- விமர்சனம்!

பிறப்பில் இருந்து இறப்பு வரை பிரிவில் தான் முடிகிறது ஆனால் காதல் மட்டுமே பிரிந்தும் பிரிய முடியாத வலியாய் தொடர்கிறது.! இந்த காதல் தோல்வியை கொடுக்கும் போது தான் எத்தனையோ பேர் அருகில் இருந்தும் தனிமையில் சூழ்ந்து விடுகிறோம்.. இறக்காமலே நரகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றெல்லாம் புலம்ப வைக்கும் காதல் ரசிகர்களுக்காகவே கதைக்குள் கதை சொல்லும் பாணியில் உருவான படம் ‘நித்தம் ஒரு வானம்’.

படத்தின் கதை என்னவென்றால் ஹீரோ அசோக் செல்வன் எதிலும் பெர்பெக்‌ஷன் பார்ப்பவர். வீட்டில் டேபிளில் பாட்டில் வைத்த இடத்தில் தண்ணீர் படிந்திருந்தாலும் அதை துடைத்துவிடுவார். அவருக்கு வீட்டில் பெண் பார்த்து திருமணத் துக்கு ஏற்பாடு செய்து ஒரு பெண்ணை பிக்ஸ் செய்கிறார்கள். திருமணத்திற்கு முந்தைய நாள் அந்த பெண் தன்னுடைய முறிந்து போன காதல் கதை குறித்து சொல்ல அசோக் செல்வன் அதிர்ந்து போய் காதலனை தேடி போக சொல்கிறார். ஆனாலும் கல்யாணம் இன்று போன விஷயத்தை அசோக் செல்வன் மன அழுத்தத்திற்கு உள்ளாக பிறகு மருத்துவர் அபிராமி இடம் சிகிச்சைக்கு செல்கிறார்.அந்த அபிராமி டாக்டர் இரண்டு காதல் புத்தகங்களை கொடுத்து அதை படிக்க சொல்ல அந்த புத்தகத்தை படிக்கும்போதே ஹீரோ அசோக் செல்வன் அதில் வரும் நாயகனாக தன்னை நினைத்துக் கொள்கிறார். இரு கதையையும் அப்படியே நினைத்து படிப்பது போல் படத்தின் கதை நகர அந்த இரண்டு காதல் கதைகளின் டைரியில் கடைசி பக்கங்கள் இல்லாமல் போய் விடுகிறது. இதனால் டென்ஷனாகி அடுத்து என்ன நடந்தது என டாக்டரிடமே கேட்க அதற்கு அவர் நீ படித்த இரண்டு கதையும் உண்மை யில் நடந்தது. அவர்கள் இப்போதும் உயிரோடு இருக்கிறார்கள். சண்டிகர், இமாச்சலில் இருக்கும் அவர்களை நீயே நேரில் சந்தித்து என்ன நடந்தது என்பதை தெரிந்துக்கொள் என்கிறார். பெரும் தவிப்புடன் அவர்களை சந்திக்க புறப்படுகிறார் அசோக்செல்வன். திட்டமிட்டபடி அவர்களை சந்தித்தாரா? அவர்கள் வாழ்க்கை என்னவானது? அசோக் செல்வன் முத்தாய்ப்பாக யாரை மணந்தார் என்பதுதான் நித்தம் ஒரு வானம்!

அர்ஜுன், வீரா, பிரபா என மூன்று கேரக்டர்களிலும் நடிப்பில் முடிந்த அளவு வேறுபாட்டை காட்டுகிறார் அசோக் செல்வன். ஆனாலும் நடிப்பிற்கு முயற்சியும், பயிற்சியும் தொடர் தேவை என்பதை அவர் நினைவில் வைத்து கொண்டால் நல்லது. . ரிது வர்மா கியூட், அபர்ணா பாலமுரளி நகைச்சுவை, சிவாத்மிகா காதல், சிவதா சோகம் மற்றும் நம்பிக்கை என இந்த படத்தில் நடித்துள்ள பெண்கள் தங்கள் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

மூன்று மாறுப்பட்ட கதைகள், கதைக்களங்கள் என்றிருந்தாலும் ஒவ்வொன்றிலும் நம்மையும் சேர்த்தழைத்தபடி பயணிக்கும் விது ஐயனாவின் கேமராதான் எக்ஸ்ட்ராவாக நம்மை வியக்க வைக்கிறது. குறிப்பாக பனிமலைகளுக்கு நடுவே எடுக்கப்பட்ட காட்சிகளு,ம், கொல்கத்தா மற்றும் சண்டிகர் நகர்களும் கண்களுக்கு விருந்தளிக்கிறது. தரண் குமாரின் பின்னணி இசை கவர்ந்த ளவுக்கு கோபி சுந்தரின் பாடல்கள் எடுபடவில்லை. மேலும் மிகைப்படுத்தப்பட்ட எண்ணங்களால் உண்டாகும் ஓசிடி என்னும் மன நோய் பயம், கோபம், எரிச்சல், பதட்டம் உள்ளிட்டவற்றை ஏற்படுத்தும் சூழலில் அதை ஹேண்டில் செய்யும் டாக்டர் அபிராமியின் ரோல் அதை அசால்டாக ஹேண்டில் செய்வது எடுபடவில்லை.

ஆனாலும் கொஞ்சம் அசந்தால் நம்மை குழப்பத்தில் ஆழ்த்தும் பல கேரக்டர்களை சரியாக கதையில் கையாண்டு சுவையான ஒரு தொடர் கதை படிப்பது போன்ற அனுபவத்தை த்ந்திருக்கிறார் இயக்குனர் ரா. கார்த்திக்.

மொத்தத்தில் இந்த நித்தம் ஒரு வானம் – அண்ணாந்து பார்க்கலாம்

மார்க் 3.5/5

Related Posts

error: Content is protected !!