நெய்வேலி விவகாரம். -நமக்குத் தெரிந்த சிலவற்றை சொல்கிறோம் !

நெய்வேலி விவகாரம். -நமக்குத் தெரிந்த சிலவற்றை  சொல்கிறோம் !

ழப்பீடு பிரச்சனை முழுக்க முழுக்க சட்டபூர்வமாக முடிந்து விட்டால் அந்த இடத்தை சம்பந்தப்பட்ட நிறுவனம் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட வேண்டும். காலியாக விட்டு வைத்திருந்தால், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பணிகள் தொடங்கும் வரை அந்த நிலத்தை பழைய உரிமையாளர் கண்டிப்பாக பயன்படுத்த தான் செய்வார். அதிலும் விவசாயமே மட்டுமே பழகிப்போன மக்களுக்கு அந்த இடத்தை காய்ந்த பாலைவனமாக அப்படியே விட்டு வைக்க மனசு வராது. ஒன்று பயிர் வைத்திருக்க அனுமதித்திருக்கக் கூடாது அல்லது. அறுவடை முடியும் வரை காத்திருந்திருக்க வேண்டும்.

நெய்வேலி சுரங்கத்திற்காக என்எல்சி தொடர்ந்து நிலங்களை கைப்பற்றிக் கொண்டுதான் இருக்கும். ஒவ்வொரு காலகட்டத்திலேயும் நிலத்தின் மதிப்பு இழப்பீடும் கூடிக் கொண்டே இருக்கும். இதில் பின்னாளில் நிலம் கொடுத்து அதிக இழப்பீடு பெறுபவர்களை பார்த்து பழைய நில உரிமையாளர்கள் தங்களுக்கும் அதே போல புதிய மதிப்பிலான இழப்பீடு கோருவார்கள். நெய்வேலி சுரங்க சுற்றுவட்டார பகுதியில் தொடர்ந்து நடக்கிற சம்பவங்கள் இவை. எல்லாவற்றிற்கும் மூலகாரணம் என்எல்சி என்கிற நிறுவனத்தின் நேர்மையின்மை. அது எந்த காலத்திலும் மண்ணின் மைந்தர்களிடம் நேர்மையை, நன்றியை ஒரு ஐகோர்ட்டுக்கும் காட்டியது கிடையாது. எவ்வளவோ முயன்றும் ஒரு பகுதியில் நிலங்களை எடுக்க முடியவில்லை என்று வைத்துக்கொள்வோம். உடனே தரகர் போல செயல்படும் சில அதிகாரிகளை நாசுக்காக களத்தில் இறக்கி விடும். அவர்கள், நிலங்களை கொடுக்க மறுப்பவர்கள் கூட்டத்தில் யாருக்கு உடனடி பணத் தேவை என்பதை ஆழம் பார்ப்பார்கள்.

“எப்படியும் நிலத்தை எடுக்கத்தான் போகிறார்கள். அதற்குள் நீங்கள் முந்திக்கொண்டு முதல் ஆளாக கொடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை வாய்ப்பு நல்ல இழப்பீடு மற்றும் அருமையான மாற்று இடமும் கிடைக்கும்” என்று ஆசை வார்த்தை காட்டுவார்கள். இப்படியே நான்கு ஐந்து பேரை வலையில் விழ வைத்து காரியத்தை சாதித்துக் கொள்வார்கள். அதன் பிறகு என்ன நடக்கும்? மற்றவர்களும் கொஞ்சம் கொஞ்சமாக என்எல்சி நிறுவன அதிகாரிகளின் வலையில் விழ ஆரம்பிப்பார்கள். ஆனால் பாருங்கள் கடைசி வரை எந்த மண்ணின் மைந்தனுக்கும் நிரந்தர வேலை வாய்ப்பை தராது. கேட்டால் ஒட்டுமொத்த சீனியாரிட்டி என்பார்கள். ஒட்டு மொத்த சீனியாரிட்டி என்றால் நிலம் கொடுத்த ஒருவனுக்கு வேலை கிடைக்க நாற்பது ஆண்டுகள் ஆகும். இந்த மோசடித்தனத்தை புரிந்து கொள்ளாமல்தான், ஒப்பந்த தொழிலாளர் என்று போய் நெய்வேலி பகுதியில் ஆயிரக்கணக்கானோர் இன்றும் வருடக் கணக்கில் கூலித் தொழிலாளர்களாகவே வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

என்எல்சி என்கிற நிறுவனம் நான்கு பேருக்கு வேலை கொடுத்தது என்றால், பல்லாயிரம் பேரின் வாழ்க்கையை இப்படித்தான் ஒப்பந்த தொழிலாளர்களாகவே வருடக் கணக்கில் பாழாக்கி கொண்டு வருகிறது. இதையெல்லாம் சகல கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் கண்டு கொள்ள மாட்டார்களா என்று கேள்வி எழும். பிரச்சனை எழும்போது போராட்டத்தில் குதிப்பார்கள். சமரசம் பேசுவார்கள். பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளை நிபந்தனைகளை வைப்பார்கள். ஒன்று இரண்டிற்கு கொஞ்சம் சுமாரான வகையில் தீர்வு கிடைத்து விட்டாலே போதும், அதோடு மக்களின் ஆவேசமும் குறைந்துவிடும் அரசியல் கட்சி தலைவர்களும், என்எல்சிக்கு விசுவாசியாய் மாறி கிளம்பி விடுவார்கள். இதற்கான லாபம் தனி.

இப்போது கூட பாருங்கள் மூன்று கோஷங்கள் என்எல்சி பகுதியில் தொடர்ந்து வலிமையாய் ஒலிக்கும்.

1) இனிமேல் என்எல்சி நிறுவனத்திற்கு ஒரு இன்ச் நிலத்தை கூட தர மாட்டோம் என்பது.

இரண்டாவது, நிலமெடுத்தால் சம்பந்தப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை கொடுத்தே ஆக வேண்டும்.

மூன்றாவது கோஷம் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தி ஏரியாவையே பாலைவனமாக்கும் என்எல்சி நிறுவனத்தை இந்த பகுதியில் இருந்தே விரட்டி அடிக்க வேண்டும்.

புரியும்படி சொன்னால் ஒரு பக்கம் நிறுவனத்தை மூட வேண்டும் என்பார்கள். இன்னொரு பக்கம் அதே நிறுவனத்தில் நிரந்தர வேலையும் கேட்பார்கள்.
எங்கள் நிலத்தையும் எடுக்க வேண்டாம் நிரந்தர வேலையும் வேண்டாம் இருக்கிற வரை நிலக்கரியை, (அதுவும் பழுப்பு நிலக்கரி) வெட்டிவிட்டு கிளம்புங்கள் என்று உறுதியான நிலைப்பாட்டை கடலூர் மாவட்ட மக்கள் எடுக்கும் வரை கண்ணாமூச்சி ஆட்டம் தான். மண்ணின் மைந்தர்களுக்கு அரசியல் கட்சிகள் எந்த அளவுக்கு வழிகாட்டியாக திகழ்கின்றன என்பதை ஒரு சில விஷயங்களை பார்த்தாலே புரிந்து கொள்ளலாம். வீடுகளை இழந்து மாற்று இடம் தரப்பட்டவர்களுக்கு அந்த இடத்திற்கான பட்டாக்களை கூட இந்த அரசியல் கட்சிகளால் பெற்றுத் தர முடியவில்லை. பட்டா இல்லாததால் வங்கிகள் வீடுகள் கட்ட லோன் கொடுக்காது. நெய்வேலி பகுதியில் காலங்காலமாக சாதிக்கப்பட்டு வரும் சாதனை இது.

நெய்வேலியில் நிரந்தர பணியில் வெளி மாநிலத்தவர்கள் ஏராளமாக வந்து குவிவார்கள். ஆனால் இந்த வேலை வாய்ப்புகளை எப்படி பெறுவது என்பது பற்றி உள்ளூர் மக்களுக்கு துளி கூட தெரியாது. வடமாநில அதிகாரிகள் லாபி முன் உள்ளூர் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு எடுபடவே எடுபடாது. என்எல்சி நிறுவனத்தில் எத்தனையோ தமிழர்கள் உயர்ந்த பதவியில் இருந்திருக்கிறார்கள். எந்த புண்ணியவானும் உள்ளூர் மக்களின் வேலை வாய்ப்புக்காக துணிச்சலான முடிவுகளை மேற்கொண்டதே கிடையாது.

கொஞ்ச நாட்களுக்கு முன்பு கூட மிக உயர்ந்த இடத்தில் இருந்த வீணா போன ஒரு தமிழ் அதிகாரி இப்படித்தான். இந்த லட்சணத்தில் அவர் மண்ணின் மைந்தர் வேறு. நல்லது செய்யாவிட்டாலும் உள்ளூர் மக்களுக்கு எவ்வளவு கெடுதல் செய்ய முடியுமோ அவ்வளவு கெடுதலையும் செய்து விட்டுப் போனார். காவிரி பிரச்சனை என்றால் கர்நாடகாவில் எல்லோரும் எப்படி ஒற்றுமையாக நிற்கிறார்களோ அதுபோன்ற ஒற்றுமை கடலூர் மாவட்ட அரசியல்வாதிகளிடம் கிடையாது. ஒருத்தன் போராட இறங்கினால் அவன் பின்னாடியே அவன் காலை வாரி என்எல்சி இடம் நல்ல பேரை வாங்க இன்னொருத்தன் இறங்குவான்.

அப்புறம் முக்கியமான விஷயத்தை சொல்ல மறந்து விட்டோம். என்எல்சி கொடுக்கிற மின்சாரத்தை தமிழ்நாட்டின் அத்தனை பகுதிகளிலும் கேட்பார்கள். ஆனால் என்எல்சியால் உள்ளூர் மக்களுக்கு ஒரு பாதிப்பு என்றால் கடலூர் மாவட்ட மக்களை தவிர வேறு யாருமே குரல் கொடுக்க முன்வர மாட்டார்கள். கடலூர் மாவட்டத்திற்கே உண்டான சாபக்கேடு.

ஏழுமலை வெங்கடேசன்

error: Content is protected !!