டெல்லியில் 10 ஆயிரம் படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம்!

டெல்லியில் 10 ஆயிரம் படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம்!

நம் நாட்டில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், 10 ஆயிரம் படுக்கைகளுடன் கூடிய உலகின் மிகப்பெரிய கொரோனா சிகிச்சை மையத்தை ஆளுநர் அனில் பைஜால் திறந்து வைத்தார். உள்துறை அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன் வெறும் 10 நாட்களில் இந்த சர்தார் படேல் கொரோனா சிகிச்சை மையம் தயார் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் அதிக கொரோனா பாதிப்புக்குள்ளான மாநிலங்களுள் ஒன்றான டெல்லியில் பாதிக்கபட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் சத்தர்பூர் பகுதியில் சுமார் 10,000 படுக்கை வசதிகளை கொண்ட உலகின் மிகப்பெரிய கொரோனா மருத்துவ மையம் அமைக்கப் பட்டுள்ளது. சுமார் 1,10,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்திற்கு சர்தார் படேல் கொரோனா பராமரிப்பு மையம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த மையத்தின் கட்டமைப்புப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் இன்று இந்த சர்தார் படேல் கொரோனா மருத்துவ மையத்தை டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜல் திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள குடிமக்களுக்கு உதவுவதற்காக சர்தார் பட்டேல் சிறப்பு மருத்துவ மையம் மற்றும் மருத்துவமனை உருவாக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் குழு இந்த வசதியை கவனித்துக்கொள்ளும் எனவும் தெரிவித்தார். சர்தார் பட்டேல் மருத்துவமனையில் மொத்தமுள்ள படுக்கைகளில் 10% ஆக்ஸிஜன் வசதி கொண்ட படுக்கைகள் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் புதிய கொரோனா வைரஸ் மையத்தில் உள்ள வசதிகள் குறித்து பேசிய அவர் மன உளைச்சலுக்கு ஆளாகும் நோயாளிகளுக்கு ஆலோசனை வழங்க ஆலோசகர்கள் உள்ளனர் எனவும், நல்ல மனநல மருத்துவர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் இருப்பதாகவும் கூறினார். இது தவிர, இந்த சோதனை நேரங்களில் நோயாளிகள் கவலையின்றி புத்துணர்வுடன் இருக்க, மையத்தில் விளையாட்டு வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

தொற்றுநோயால் பாதிக்கப் பட்டவர்கள் இந்த மையத்தில் சிகிச்சை பெறும்போது கேரம்போர்டு மற்றும் பேட்மிண்டன் விளையாடலாம் என தெரிவித்துள்ளார். 2000க்கும் மேற்பட்ட இந்தோ திபெத் எல்லை பாதுகாப்புப் படையினர் மற்றும் இதர ஆயுத காவல் படையினர் மூலம் இந்த மருத்துவமனை இயக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

error: Content is protected !!