32°C

புதிய உடற்கல்வி பாடப்புத்தகம்: உடற்பயிற்சி வகுப்புகளுக்கு விடிவுகாலம் பிறக்குமா?

admin Published: August 4, 2025 2 நிமிட வாசிப்பு Exclusive
எழுத்து:

ள்ளிக் குழந்தைகளுக்கு உடற்பயிற்சி எவ்வளவு முக்கியம் என்பது பற்றி அனைவரும் அறிந்திருந்தாலும், பெரும்பாலான பள்ளிகளில் “பிடி” எனப்படும் இந்த உடற்கல்விக்கான வகுப்புகள் பெரும்பாலும் மற்ற பாட ஆசிரியர்களால் “கடன்” வாங்கப்பட்டு, மாணவர்களுக்கு நோகடிக்கும் பாடவேளையாக மாற்றப்படும் போக்கு அதிகம் காணப்படுகிறது. மனவளர்ச்சிக்கு கணிதமும், அறிவியலும் அவசியமெனில், உடல் நலத்துக்கும், ஆரோக்கியத்துக்கும் உடற்கல்வியும், விளையாட்டுகளும் அதே அளவு முக்கியம் என்பதை உணராத பல பள்ளிகளில் இந்த அவலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்தச் சூழலில், மாணவர்களின் உடல்நலம் மற்றும் மனவளர்ச்சிக்கு ஒரு திருப்புமுனையாக, தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு உடற்கல்வி பாடப்புத்தகங்கள் பள்ளிக்கல்வித் துறையால் புதிதாக வெளியிடப்பட்டுள்ளன.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

பாடப்புத்தகம் வெளியிடப்பட்டது ஏன்?

உடற்கல்வி ஆசிரியர்கள் பல ஆண்டுகளாகக் கோரி வந்த ஒரு முக்கியத் தேவையை இந்த நடவடிக்கை பூர்த்தி செய்துள்ளது. தமிழ்நாட்டில் விளையாட்டு மற்றும் உடற்கல்வி கற்பிக்கப் பாடப்புத்தகங்கள் இல்லை என ஆசிரியர்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்தனர். 2017-ஆம் ஆண்டில் பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டபோது உடற்கல்விக்கான பாடத்திட்டம் உருவாக்கப்பட்டாலும், இதுவரை தனியாகப் பாடப்புத்தகம் வெளியிடப்படாமல் இருந்தது.

தற்போது, 2025-2026 கல்வியாண்டில் வெளியிடப்பட்டுள்ள இந்த புதிய பாடப்புத்தகங்கள், உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஒரு வழிகாட்டியாக அமைந்துள்ளன. இந்த பாடத்திட்டங்கள் மூலம், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எவ்வாறு உடற்கல்வி, விளையாட்டு, மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை கற்றுத் தருவது என்பது குறித்த தெளிவான வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.

புதிய பாடப்புத்தகங்களின் நோக்கம்

இந்தப் புதிய பாடப்புத்தகங்களின் முக்கிய நோக்கம், மாணவர்களை மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கச் செய்வதுதான். இதன் மூலம் மாணவர்கள் பதக்கங்களை வெல்வதற்கும், சாதனை உணர்வை மேம்படுத்துவதற்கும், தங்களின் உடல் வலிமையை எண்ணிப் பெருமை கொள்வதற்கும் இந்த பாடத்திட்டம் வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பாடத்திட்டத்தின்படி, உடற்கல்வி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உடலைப் பற்றிய கல்வி, விளையாட்டுக்கல்வி, மற்றும் பாதுகாப்புக்கல்வி ஆகியவற்றை கற்றுத்தர வேண்டும். மேலும், விளையாட்டுகள், பயிற்சிகள், யோகாசனங்கள் மற்றும் மூச்சுப் பயிற்சிகள் ஆகியவற்றை மாணவர்களுக்கு கற்றுத்தரும்போது, அவர்களின் உடல்நிலை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை, மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல், அவர்களின் முழுமையான உடல் மற்றும் மன வளர்ச்சிக்கும் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய பாடப்புத்தகங்கள் மூலம் உடற்கல்விக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, மாணவர்கள் ஆரோக்கியமான தலைமுறையாக உருவாவார்கள் என்று நம்பலாம்.

பாடப்புத்தகங்களைப் பதிவிறக்க: