எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் கூடி இருக்குதுங்கோ!- நேபாள அரசு அறிவிப்பு

எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் கூடி இருக்குதுங்கோ!- நேபாள அரசு அறிவிப்பு

எவரெஸ்ட் சிகரத்தின் பழைய உயரமான 8,848 மீட்டர் என்ற உயரத்திலிருந்து சிகரத்தின் உயரம் 0.86 மீட்டர் அதிகரித்துள்ளது என்று நேபாள வெளியுறவு அமைச்சர் பிரதீப் குமார் கியாவாலி இன்று அறிவித்தார்.. இதன் மூலம் எவரெஸ்ட் சிகரம் பூமியின் மிக உயரமான மலைச் சிகரமாக தொடர்கிறது.

நேபாளத்தை உலுக்கிய 2015 பூகம்பத்திற்குப் பிறகு 8,848 மீட்டர் உயரம் எவெரெஸ்ட்டின் உண்மையான நீளமாக இருக்காது என்று பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஊகங்களுக்குப் பிறகு, உலகின் மிக உயரமான சிகரத்தின் உயரத்தை மீண்டும் அளவிட நேபாளம் முயன்றது.

மலையின் உயரத்தை மீண்டும் அளவிட நேபாள அதிகாரிகள் மற்றும் நிபுணர்களை நியமிக்கும் அதே வேளையில், மற்றொரு புறம் திபெத்திய பக்கத்தில் இருந்து சீனாவும் அளக்க ஆரம்பித்தது. பின்னர் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் நேபாள பயணத்தின் போது, இரு நாடுகளும் இணைந்து உலகின் மிக உயரமான சிகரத்தின் உயரத்தை கூட்டாக அறிவிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

அதில் முன்பு இருந்த அளவை விட 0.86 மீட்டர் அளவுக்கு எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் அதிகரித்துள்ளது. இதனையடுத்து இப்போது எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8,848.86 மீட்டராக உள்ளது. 2015-ம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் மாறி இருக்கலாம் என இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

அதை அடுத்துஎவரெஸ்ட் சிகரத்தின் புதிய உயரம் குறித்து சீன அரசின் ஊடகமான ஷின் ஹுவாவில் குறிப்பிடப் பட்டுள்ளது. அதன்படி நேபாள நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரதீப் கியவாலி எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8,848.86 மீட்டர் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அளவீடு மற்றும் அறிவியல் ஆராய்ச்சி அடிப்படையில் ஆறு கட்டங்களாக எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை வல்லுநர்கள் அளந்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, சர்வே ஆப் இந்தியா 1954’இல் அளவிடப்பட்ட, 8,848 மீட்டர் என்பது சாகர்மாதாவின் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட உயரமாக இருந்தது. சாகர்மாதா என்பது எவெரெஸ்ட் சிகரத்தின் நேபாள பெயராக்கும்.

error: Content is protected !!