நெஞ்சுக்கு நீதி – விமர்சனம்!

நெஞ்சுக்கு நீதி – விமர்சனம்!

ம் நாட்டில் சகலத் துறைகளிலும் வியாபித்து இருப்பது சாதி. நாட்டின் கட்டமைப்பில் முதுகெலும்பாக திகழும் அரசியலில் ஊடுருவி, அதிகார வர்க்கம் வரை இந்த சாதி வேர் பாய்ந்துள்ளதால் வீசும் காற்றில் விளையும் நச்சுக் காற்றால் மனிதர்களின் மனசு மாசுப்பட்டுக் கொண்டே போகிறது. இதன் வெளிப்பாடாக நம் தமிழ்நாட்டில் கூட ஒரு பட்டியலின பெண் சத்துணவு சமைத்தார் என்பதற்காக அவர் துன்புறுத்தப்பட்டு, அவர் சமைத்த உணவும் வீணாக்கப்பட்டதில் துவங்கி நீட்டால் காலமான டாக்டர் அனிதா மற்றும் காவல் துறையினருக்குள் நிலவும் சாதிய பாகுபாடு என்று ஆரம்ப வரிகளில் சொன்னது போல் அனைத்து நிலையிலும் மண்டிக்கிடக்கும் சாதிப் பிரச்னையை, உண்மைச் சம்பவங்களை சில பல கற்பனை புனைவுகளோடு சகல தரப்பினரும் புரியும் வகையில் கொடுத்து இருப்பதுதான் ‘நெஞ்சுக்கு நீதி’!

கதை என்னவென்றால் ஃபாரினில் படித்து முடித்து ரிட்டர்ன் ஆகி பொள்ளாச்சியில் ஏ.எஸ்.பியாகப் பொறுப்பேற்கிறார் விஜயராகவன் (உதயநிதி). அந்த ஊரில் இரு தலித் சிறுமிகள் மர்மமான முறையில் மரணம் அடைகின்றனர். இன்னொரு சிறுமியை காணவில்லை. ஓரிரு நாளில் மரத்தில் தூக்கில் தொங்கியபடி இரு சிறுமிகளின் சடலங்கள் கிடைக்கின்றன. ஆனால், உண்மையான பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைக்கச் செய்யாமல் ஆதிக்க சாதியினர் அரசியல் செய்கின்றனர். அவ்வழக்கை விசாரிக்கும் காவலர்களில் சிலரே விசாரணையை முடுக்கி விடாமல் விசாரணையை தொடர ஒத்துழைக்க மறுக்கின்றனர். இச்சூழலில் நாயகனின் அதிரடி போக்கே இப்படம்.

இந்தியில் ஹிட் அடித்த ஆர்ட்டிகிள் 15 படத்தின் ரீ மேக் என்பதையும் தாண்டி வட இந்திய அரசியலையும், இங்குள்ள பாலிடிக்ஸை-யும் மிக அழகாக கோர்த்து அருண்ராஜா காமராஜ் சபாஷ் பட்டம் வாங்கி இருக்கிறார். குறிப்பாக நாயகன் உதயநிதியின் எதிர்கால அரசியல் ஆதாயத்துக்காக அவர் துதி பாடாமல், அதிரடி சாகசம் செய்வது போலெல்லாம் செய்யாமல் ஒரு முழு படத்தை வழங்கி இருக்கும் கனா டைரக்டரை எம்புட்டு வேண்டுமானாலும் பாராட்டலாம்.

நாளைய அமைச்சரவை உறுப்பினர் உதயநிதி . திரைத்துறைக்கு வந்த 10 ஆண்டுகளில் 12 ஆவது படமொன்றில் சமூக நீதியை கையில் எடுத்து மிக அளவான நடிப்பைக் கொடுத்துள்ள உதயநிதிக்கும் மிகப் பெரிய சபாஷ் கோஷத்தை வழங்கலாம். உடல்மொழி, வசனம், பார்வை என அனைத்திலும் பக்காவான நடிகனுக்குரிய பங்களிப்பை வழங்கி தனி கவனம் பெறுகிறார்.

தான்யா ரவிச்சந்திரன் வழக்கமான ஹீரோயினாக ஆடல் பாடலுக்கு மட்டும் வருபவராக இல்லாமல் நாயகனுக்கு வழிகாட்டும், அறிவுறுத்தும் நாயகி ரோலை உருவாக்கி இருக்கும் பாங்கு ரசிக்க வைக்கிறது. சுரேஷ் சக்கரவர்த்தி, இளவரசு ஆகிய இருவரும் அட்டகாசமான நடிப்பை வழங்கியுள்ளனர். ஆரி அர்ஜுனன் போராளிக்குரிய கேரக்டரில் எந்தக் குறையுமில்லாமல் நடித்துள்ளார். ராட்சசன் சரவணன், ஷிவானி ராஜசேகர், ரமேஷ் திலக், மயில்சாமி ஆகியோர் பர்ஃபெக்ட்.

தினேஷ் கிருஷ்ணனின் கேமரா கொஞ்சம் ராவாக செல்லும் இப்படத்தை ஒருபடி மேலே ரிச்சாக காட்டியுள்ளது. திபு நினன் தாமஸின் இசையில் பாடல்களும் சரி, பின்னனி இசையும் சரி மிக அருமையாக வந்துள்ளது. அதாவது படத்தின் கதைக்குள் நம்மை அழைத்து செல்வதே , அந்த பின்னணி தான். படம் முழுக்கவே விளையாடியிருக்கிறார் திபு..ரூபனின் எடிட்டிங் அபாரம்.

மேலும் இப்படத்தின் வசனங்கள்தான் உண்மையிலேயே ஹூரோ என்று சொல்லலாம். உதாரணமாக, சுடுகாட்டில் பிணத்தை எரிக்கும் வெட்டியானிடம் அவரது மகன், “அப்பா இந்த பிணம் எரியும் இடமே நன்றாகத்தானே உள்ளது. ஏன் தாத்தாவை கீழே வச்சு எரிச்சோம் என கேட்க, அதற்கு அப்பா இங்கே நாம் எரிக்க தான் முடியும், எரிய முடியாது” என்கிற வசனமாகட்டும், “எல்லாருமே சமம்னா யாரு தான் ராஜாவா இருக்குறது…?” “எல்லாரும் சமம்னு நினைக்கிறவன்தான் ராஜாவா இருக்கணும்.” அப்படீங்கற வசனம் தொடங்கி “ஒருவன் நல்லவனா இருக்கிறதும் கெட்டவனா இருக்கிறதும் சாதியில் இல்லை. அவன் உள்ள இருக்கிற குணத்துல தான் நடுநிலை என்பது என்னைப் பொறுத்தவரை நடுவுல நிக்கிறது இல்ல சார். நியாயத்தின் பக்கம் நிற்பதுதான் நடுநிலை” என்பதும் “இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரையே பல பேர் ஒரு ஜாதி கட்சியின் தலைவராகத்தான் பார்க்கிறார்கள்” என்கிற வசனமாகட்டும் . ‘தீ கூட எங்களுக்கு தீட்டாச்சு’ என்பதை எல்லாம் தாண்டி ‘’இந்தி கத்துக்குறது ஆர்வம். கத்துக்கணும்னு கட்டாயப்படுத்துறது ஆணவம்” என்பதை எல்லாம் கேட்கும் போதே அடுத்த நொடி கிரகித்து கைகள் ஒலியை எழுப்புகின்றன .

ஆனாலும் மேற்கண்ட வசனங்கள் உள்ளிட்டவைகள் அப்ளாஸ் வாங்கினாலும், படம் நெடுக இந்த சாதீ-யை மிகைப்படுத்தி சொல்லி இருப்பது போல் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை நவீன மயமான உலகம் என்று பீற்ரிக் கொள்ளும் இன்றைய காலக்கட்டத்தில் எடுத்து சொல்ல வேண்டிய விஷயம்தான் ஆனால் அது மட்டுமே முழு சினிமாவாக பார்க்கும் போது கொஞ்சம் திகட்டுகிறது.

ஆனாலும் தற்போது முழு நேர அரசியல்வாதி ஆகி ஆட்சி பொறுப்பில் இருக்கும் நிலையிலும் அரசியல்வாதிகளால் , அதிகாரவர்க்கத்தால் தூக்கி பிடிக்கப்படும் ஜாதியையும், ஜாதியை வைத்து அரசியல் செய்து பிழைப்பவர்களையும் சாடி எந்த சமரசமும் இல்லாமல், துணிந்து ஒரு படத்தை கொடுத்திருக்கிறார்கள் என்பதே இப்படத்தின் கம்பீரம்!

மொத்தத்தில் சமூக அக்கறையுள்ள ஒவ்வொருவரும் பார்த்தே ஆக வேண்டிய படம் இந்த‘நெஞ்சுக்கு நீதி’!

மார்க் 3.25/5

error: Content is protected !!